முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உறவுகளை மீறி எதுவுமே இல்லை!

மனசுக்குள் கதை ஓட ஆரம்பித்ததும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகங்கள் ஓட ஆரம்பிக்கும்.

Updated On : 25 மே, 2025 at 12:01 AM
பகிர்:
Updated On : 24 மே, 2025 at 7:53 PM

மனசுக்குள் கதை ஓட ஆரம்பித்ததும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகங்கள் ஓட ஆரம்பிக்கும். அதில் கச்சிதமாகப் பொருந்திய முகங்கள் இங்கே நிறைய. 'ஹபீபி' கிட்டத்தட்ட தயார். இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறேன். ஆங்காங்கே எது வேண்டும், எது வேண்டாம் என்று முடிவு எடுக்கிற நேரம்.

அதுதான் இந்தப் பரபரப்பு... கதை சொல்கிற அளவுக்கு அதில் புத்திசாலித்தனத்தையும் காட்ட வேண்டும் அதுதான் இப்போதைக்குமான என் வேலை. தாடியை நீவியபடி சிரிக்கிறார் மீரா கதிரவன். 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இப்போது 'ஹபீபி' படம் மூலம் ப்ரியம் கொள்ள வருகிறார்.

அதென்னை ஹபீபி... ஏதும் ஹிட் பாடலின் துவக்க வரியா...

Advertisement

அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இப்படி ஒரு படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது. மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.

இந்தப் படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை காணும் அனைவரும் தங்கள் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பார்த்து தங்களையே பார்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும் இந்த படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு 'ஹபீபி' என டைட்டில் வைத்துள்ளோம். திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன்.

அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...

Updated On : 24 மே, 2025 at 7:55 PM

குடும்ப கதைகளுக்கான ரசிகர்களின் மன நிலை இப்போது மாறி வந்திருக்கிறதே....

உறவின்றி அமையாது உலகு. இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். தொலை தொடர்புகள் நம்மை வேற இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேர வேண்டும். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.

ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. உறவுகளும் அதன் அர்த்தங்களும்தான் இங்கே உண்மை. எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. உறவுகளுக்குள் உள்ள புரிதல், அந்த அற்புதம் பதிவாகியுள்ளது. கால சூழல், பருவத்தின் மாற்றம் எல்லாம் சேர்ந்து விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு வந்தது மாதிரிதான்.... இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் மாறுதல்கள்.

விஞ்ஞானம் எல்லாவற்றிலும் இருந்து நம்மை வெளியேற்றி விடுகிறது. இதில் வருகிற ஹீரோ ஈஷா கூட பாசம், அன்பு, உறவுகள் என அர்த்தப்படுத்தி வாழ்கிற ஆள். ஆனால் அவரை சுற்றி தவற விடுகிற மன நிலையை குடும்பம், உறவுகள் என வகைப்படுத்தியிருக்கிறேன்.

இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். தீராத உறவுகளின் அற்புதம் இது. உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை.

Updated On : 24 மே, 2025 at 7:55 PM

கஸ்தூரிராஜா... இந்தக் கதைக்குள் அவர் எப்படி வந்தார்....

இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஓர் அம்சம்தான் இதன் கரு.

இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசி பேர் கூட்டுக் குடும்பத்தின் பிள்ளைகள்தான். அவர்களுக்கு உறவுகள்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. மண்ணை, உறவின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. நாம் பெரிதாக இழந்தது கூட்டுக் குடும்பம். இந்தக் கதையைச் சொன்னதும் கஸ்தூரி ராஜா சாருக்கு கிராமத்தின் அழகு, உறவுகள் ஞாôபகத்திற்கு வந்திருக்கலாம்.

இப்போதுமே அவர் தமிழ் மண்ணின் முகம். இதில் வருகிற மச்சான், மாமனை நாமும் பார்த்திருக்கலாம். புதுமுக ஹீரோ ஈஷாவுக்கு ஜோ படத்தின் மூலம் நம்மையெல்லாம் கவர்ந்த மாளவிகா மனோஜ் ஜோடி. தனுஷரி சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள் குமார், ஜெயஸ்ரீ, இஸ்மத் பானு, ரேகாஸ்ரீ, சுகுமார் சண்முகம், சன் சாகுல் இப்படி கண்ணுக்கு நிறைந்த நடிகர்கள்.

கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டேன். எல்லோரும் கதையை கேட்டதும் நெகிழ்ந்தார்கள். வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள். அதை நடத்தி முடித்திருக்கிறேன். ஒளிப்பதிவுக்கு மகேஷ் முத்துசாமி, இசைக்கு சாம்.சி.எஸ், படத்தொகுப்புக்கு ராஜா முகமது என அழுத்தமான கலைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.