ஞாயிறு கொண்டாட்டம்

சாகசம்...

1951-இல் சுதந்திரத் தினத்தன்று குஜராத் மாநிலம் பில்லிமோரியாவில் ஜெமினி சர்க்கஸ்', தனது முதல் நிகழ்ச்சியை நடத்தியது.

எஸ். சந்திரமெளலி

1951-இல் சுதந்திரத் தினத்தன்று குஜராத் மாநிலம் பில்லிமோரியாவில் ஜெமினி சர்க்கஸ்', தனது முதல் நிகழ்ச்சியை நடத்தியது. அதன் பிறகு, படிப்படியாகப் பிரபலமாகி, முன்னணி சர்க்கஸ் நிறுவனமாக உருவாகியுள்ளது.

65 ஆண்டுகளாக மக்களை மகிழ்விக்கும் ஜெமினி சர்க்கஸ், சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் தற்போது முகாமிட்டுள்ளது. இங்கு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கும் செல்லவிருக்கிறது.

சாகசக் காட்சிகள், கலை குறித்து மேலாளர் சேதுவிடம் பேசியபோது:

கேரளத்துக்கு உள்பட்ட தலைச்சேரியில் கிட்டுண்ணி என்ற சர்க்கஸ் கலைஞர் செய்த சாகசங்களைப் பார்த்து அதிசயித்தவர் சங்கரன். அவர் ஆசிரியரான தனது தந்தையிடம் அனுமதி பெற்று தலைச்சேரியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளரான கீலேரி குன்னி கண்ணனிடம் பயிற்சி பெற்றார். அவரிடம் பயிற்சி பெற்ற ஏராளமானவர்கள் அந்தக் காலத்தில் பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளிலும் சேர்ந்து டிரபீஸ் கலைஞர்களாகப் பணியாற்றினர்.

இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பணியாற்றிய சங்கரன் ஓய்வு பெற்றவுடன் 1948-இல் கொல்கத்தாவில் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் அந்தரத்தில் கயிற்று சாகசம் செய்யும் கலைஞராகச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து, ஆறாயிரம் ரூபாய் கொடுத்து, விஜயா சர்க்கஸ்' என்ற சிறிய கம்பெனியை வாங்கினார். ஒரு யானை, இரண்டு சிங்கங்கள் இருந்த விஜயா சர்க்கஸை ஜெமினி சர்க்கஸ்' என பெயர் மாற்றம் செய்தார். பின்னர், மேலும் பல வன விலங்குகளை வாங்கி விரிவுபடுத்தினார். இருநூற்றுக்கும் அதிகமான கலைஞர்களையும், நூற்றுக்கணக்கான வன விலங்குகளையும் கொண்ட முன்னணி சர்க்கஸ் கம்பெனியாக விளங்கியது ஜெமினி சர்க்கஸ்.

கலைஞர்களின் சாகசங்களைப் போலவே, விலங்குகளின் வித்தைகளையும் கண்டு மக்கள் மிகவும் ரசித்தார்கள்.

ஜெமினி சர்க்கஸில் பணியாற்றிய கலைஞர்கள், ஊழியர்களைத் தனது குடும்பமாகவே கருதி பாசத்தோடு நடத்தினார் சங்கரன். தீபாவளி போன்ற சமயங்களில் அனைவருக்கும் புத்தாடைகளைக் கொடுப்பார். ஊழியர்கள் குடும்பத்தில் நெருக்கடியான நேரங்களில் உடனே பண உதவியும் செய்வார். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் காட்சிகளுக்கு வந்து பார்த்து, ரசித்துள்ளனர்.

ஜெமினி சர்க்கஸ்

1964-இல் நேருஜி பிரதமராக இருந்தபோது, எங்கள் குழுவினரை ரஷியாவுக்கு அனுப்பிவைத்தார். அதற்கு முன்பாக, எங்கள் குழுவினருக்கு தனது இல்லத்தில் நேருஜி விருந்தளித்து கெளரவித்தது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

1966-இல் வெளியான எம்.ஜி.ஆர். , சரோஜா தேவி நடித்த பறக்கும் பாவை', 1970-இல் வெளியான ஹிந்திப் படமான ராஜ்கபூரின் மேரா நாம் ஜோக்கர்', 1989-இல் வெளிவந்த கமலின் அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ஜெமினி சர்க்கஸ் வளாகத்தில்தான் நடைபெற்றன. இங்கே பணியாற்றும் மூத்த கலைஞர்கள், படப்பிடிப்புகளின்போது நட்சத்திரங்களைச் சந்தித்த அனுபவங்களை மகிழ்ச்சியோடு நினைவு கூறுவார்கள்.

சர்க்கஸ்களில், வன விலங்குகள்தான் ரசிகர்களைக் கவரும். நேரில் காண அரிதான யானை, சிங்கம் போன்ற வன விலங்குகள் இடம்பெறும் காட்சிகளைக் குழந்தைகள் கண்கொட்டாமல் பார்த்து ரசித்து மகிழ்வார்கள்.

வன விலங்குகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்தபோது, சர்க்கஸ் கலைக்கே பெரும் தடைக்கல் ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில், ஜெமினி சர்க்கஸின் இருந்த பல்வேறு வன விலங்குகளையும் வண்டலூர் உட்பட பல்வேறு மிருகக் காட்சிகளுக்கு அன்பளிப்பாகவே வழங்கி விட்டோம்.

தற்போது ரோபோடிக் வனவிலங்குகளைத் தயாரித்து, சர்க்கஸ் வளாகத்தில் வைத்திருக்கிறோம். காட்சிக்கு முன்பாகவும், பின்பாகவும் குழந்தைகள் கூடி நின்று இந்த ரோபோடிக் மிருகங்கள் ஒலி எழுப்புவதையும், அசைவதையும் பார்த்து ரசிக்கின்றனர்.

கரோனா காலத்தில் காட்சிகள் நடத்த முடியாது போனதால் வருமானம் இல்லை. கலைஞர்கள், ஊழியர்களைப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை. ஏற்கெனவே நசிந்திருந்த சர்க்கஸ் நிறுவனங்கள் நிலைமையை சமாளிக்க மிகவும் திண்டாடினார்கள். நாங்கள் கம்பெனியில் அனைவருக்கும் சாப்பாடு போட்டு பராமரித்ததுடன், பாதி சம்பளமும் வழங்கினோம்.

ஜெமினி சர்க்கஸ்

சுமார் ஆறு மாதகாலத்துக்கு ரேஷன் பொருள்களை கேரள அரசு வழங்கி உதவினர். இந்திய சர்க்கஸ் கலையின் தாயகம் என்றால் கேரளம்தான். முதியக் கலைஞர்களுக்கு மாதம் 1, 600 ரூபாய் ஓய்வூதியத்தை கேரள அரசு வழங்கி வருகிறது.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜெமினி சர்க்கஸில் சேர்ந்த தென் ஆப்பிரிக்கா, எதியோப்பியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளையும் சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்களின் சாகசக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது ஜெமினி சர்க்கஸில் 80 கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 60% பெண்கள். பெரும்பாலானவர்கள் நேபாளம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கொண்டு 25 விதமான காட்சிகளை இரண்டு மணி நேரத்தில் வழங்குகிறோம். முதுமையால் காட்சிகளில் இடம்பெற முடியாத கலைஞர்களை, புதிய கலைஞர்களுக்குப் பயிற்சியாளராகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

ஜெமினி சர்க்கஸைத் துவக்கி வெற்றிகரமாக நடத்திவந்த சங்கரன் சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது 99ஆவது வயதில் மறைந்தார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கெளரவித்தது. அவர் இருக்கும்போதே தனது இரு மகன்களான அஜய் சங்கரன், அசோக் சங்கரன் ஆகியோரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டார்'' என்கிறார் சேது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT