புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
விழா குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் பேசியது:
'புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கோணாப்பட்டு என்ற கிராமத்தில் முருகப்பன், - சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்ரமணியம். இளம் வயதில் இருந்தே எழுத்தார்வம் கொண்டிருந்தார். அவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோது, கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.
இந்தப் பத்திரிகையை தனது சொந்த ஊர் நூல் நிலையம் உள்ளிட்ட சில நூல் நிலையங்களுக்கும், நண்பர்கள் வாசிக்கவும் வழங்கி வந்தார். தானும் எழுதியதுடன், சக மாணவர்களையும் எழுதுவதற்கு ஊக்கமும், வாய்ப்பும் அளித்தார். துரதிர்ஷ்டவசமாக உடல் நலம் குன்றி, அவர் கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தும்படியானது.
அதன்பின்னர், 'குமரன்' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பது ரூபாய் மாதச் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்து, இரண்டாண்டுகள் பணியாற்றினார். வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், 'பொன்னி' என்ற பத்திரிகையை முருகு சுப்ரமணியனும், அரு.பெரியண்ணனும் தொடங்கினர். அரசியல், சமூகப் பிரச்னைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று அனைத்தும் கொண்டு முழுமையான பத்திரிகையாக வெளிவந்த அந்த இதழின் தீபாவளி, பொங்கல் மலர்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா, பாரதிதாசன், கருணாநிதி, மு.வரதராசனார், அகிலன், கண்ணதாசன், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், அ. சிதம்பரநாதன், நாரண. துரைக்கண்ணன், ஏ.கே.வேலன், கமலா விருத்தாசலம் (திருமதி. புலமைப்பித்தன்), சுகி, லக்ஷ்மி உள்ளிட்ட பிரபலங்கள் எழுதி இருக்கிறார்கள்.
பொங்கல் மலர் ஒன்றில், பிரபல எழுத்தாளர் கல்கியை பூவை எஸ்.ஆறுமுகம் பேட்டி கண்டு எழுதி இருக்கிறார். மலேசிய பத்திரிகை உலகில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்து மலேசியாவுக்குச் சென்றார்.
1953-இல் மலேசியாவின் பிரபல நாளிதழான 'தமிழ் நேசன்' நாளிதழில் துணை ஆசிரியராகவும், 1954-இல் சிங்கப்பூரில் 'தமிழ் முரசு' நாளிதழில் துணை ஆசிரியராகவும் இருந்தார். 1962-இல் மலேசியாவில் 'தமிழ் நேசன்' நாளிதழ் முதன்மை ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.
வெண்பாப் போட்டி, கவிதைப் பக்கம், எழுத்தாளர் அறிமுகம், ஆண்டு மலர்கள் என பல புதுமைகளைப் புகுத்தி, வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இளம் தமிழ் எழுத்தாளர்களை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டார். இவர் அறிமுகப்படுத்திய 'பவுன் பரிசுத் திட்டம்' மலேசிய எழுத்தாளர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும் தமிழ் இலக்கியம் செழித்து வளர வழி செய்தது.
மலேசியாவாழ் தமிழர்கள் மலாய் மொழி அறிவதன் அவசியத்தை உணர்ந்து, மலாய் மொழி கற்றுத்தரும் பகுதியை வழங்கினார். மாணவர்களுக்கு எழுத வாய்ப்பளிக்கும் நோக்கத்தோடு 1977-இல் 'புதிய சமுதாயம்' என்ற சொந்தப் பத்திரிகையையும் துவக்கினார்.
பத்திரிகையாளர் என்ற வகையில் உலக நாடுகளில் நடைபெற்ற சில சர்வதேச கருத்தரங்குகளில், மாநாடுகளில் இவர் பங்கேற்றிருக்கிறார். 1966-இல் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார். 1984-இல் முருகு.சுப்ரமணியம் காலமானார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரது நினைவாக எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் முருகு. சுப்ரமணியம் இருந்த காலகட்டத்தில் திராவிட இயக்கத்தில் முக்கிய பங்காற்றி வந்தார். 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சி அமைத்த காலத்தில், முருகு. சுப்ரமணியம் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அவர் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால், திமுக முன்னணித் தலைவராகவும், அண்ணாவின் தலைமையில் அமைந்த அரசில் முக்கியப் பொறுப்பையும் பெற்றிருப்பார்' என்றார் டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.