ஞாயிறு கொண்டாட்டம்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர்.

எஸ். சந்திரமெளலி

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

சென்னையில் உள்ள பிரெஞ்சு மொழி, கலாசார மையமான அலையன்ஸ் பிரான்சைசில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம் தொடங்கி, பல திரையுலகப் பிரபலங்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு தங்களது பாராட்டுகளை தோட்டா தரணிக்குத் தெரிவித்தார்கள். கண்காட்சி அரங்கில் நடு நாயகமாக மூன்று கால்களில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது திரைப்பட காமிரா. அதிலிருந்தே பேட்டி துவங்கியது.

ஓவியக் கண்காட்சியில் காமிராவைக் கொண்டு வந்து நிறுத்தி இருப்பதன் பின்னணி என்ன?

நான் ஆர்ட் டைரக்டராக இருந்தாலும், நான் உருவாக்கிய செட்டுகளில் காட்சிகளைப் படம் பிடித்து, அதனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது காமிராதானே? அது மட்டுமல்லாமல், என் அப்பா தோட்டா வெங்கடேஸ்வர அந்தக் காலத்து பிரபல ஆர்ட் டைரக்டர் என்பது தெரியுமல்லவா?

நான் சிறு வயதிலேயே எங்கள் வீட்டுத் தரையில் சாக்பீஸால் ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன். வழக்கமாக இப்படிச் செய்தால் வீட்டில் பெற்றோர் திட்டுவார்கள்; அடிப்பார்கள். ஆனால், என் அப்பா எனக்கு டிராயிங் நோட்டுப் புத்தகங்களும், வண்ணப் பென்சில்களும் வாங்கிக்கொடுத்து என்னை ஊக்குவித்தார்.

பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் என்னையும் ஸ்டூடியோக்களுக்கு அழைத்துக் கொண்டு போவார். அவர் நிர்மாணிக்கும் செட்டுகளில் நிறைய தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அதை நான் ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பேன். அப்பா நிர்மாணித்த செட்டுகளில் நடக்கிற படப்பிடிப்புகளையும் பார்ப்பேன். அந்த நாள் முதலே எனக்கு காமிரா என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு இருக்கும் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு என்னைத் தெரியும்.

அவர்களிடம், 'காமிரா வழியாக நானும் பார்க்கட்டுமா?' என்று கேட்பேன். அவர்கள் என்னைத் தூக்கிக் கொள்ள நான் காமிரா வழியாகப் பார்ப்பேன். என் மனசு மகிழ்ச்சியில் துள்ளும். எனக்கும், சினிமா காமிராவுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் அடையாளமாக இங்கே ஓவியங்களுக்கு மத்தியில் ஒரு காமிராவையும் வாங்கிக் கொண்டு வந்து வைத்திருக்கிறேன். ஆனால், இது பழைய கால காமிரா. இப்படிப்பட்ட காமிராக்களை இன்று யாரும் பயன்படுத்துவது இல்லை.

இங்கே இருக்கும் ஓவியங்கள் எல்லாம் எப்போது வரைந்தீர்கள்?

எனது சினிமா நினைவுகளுக்கு வண்ண வடிவம் கொடுத்து, ஒரு கண்காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர்தான் இவற்றை வரையத் தொடங்கினேன். ஆனால், இந்த ஓவியங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் எல்லாம் எனது சிறு வயது முதல் ஸ்டூடியோக்களில், அங்கே நிர்மாணித்த செட்டுகளில், அவற்றில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் நான் பார்த்தவை. அவை அனைத்தும் என் மனதில் நிலைபெற்றுவிட்டன.

பல ஓவியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நினைவுகளை இணைத்து வரைந்திருக்கிறேன். இவற்றை எல்லாம் எனது ஓவியங்கள் என்று சொல்வதைவிட 'நினைவு கொலாஜ்' என்று சொல்லலாம். சில ஓவியங்களில் ஒரிஜினல் ஃபிலிம் ரோலையே நீளமாக ஒட்டி இருக்கிறேன். அதாவது என் நினைவுகளும், சினிமாவும் பிரிக்க முடியாதவை என்பதைத்தான் இப்படி சிம்பாலிக்காகச் சொல்லி இருக்கிறேன்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே மாதிரியான மனித முகங்களை உயரமான அலமாரியில் அடுக்கி வைத்திருக்கிறீர்களே? இதற்கும் ஒரு கதை இருக்கிறதா?

இல்லாமல் இருக்குமா? அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஹீரோவுக்கு பல விதமான சிகை அலங்காரம் இருக்கும். அதற்காக பல 'விக்'குகளைப் பயன்படுத்துவார்கள். அந்த விக்குகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். எனவே, காகிதக் கூழில் மனிதத் தலைகள் செய்து, அவற்றில் அந்த விக்குகளைப் பொருத்தி வைத்திருப்பார்கள். தேவையானபோது, தேவையான ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவார்கள். எனவே, என்னிடம் அதுபோன்ற காகிதக் கூழ் தலைகள் நிறைய இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவில் நடந்த எனது கண்காட்சியில் செய்தித்தாள் ஒட்டிய காகிதக் கூழ் தலைகளையும் காட்சிப்படுத்தி இருந்தேன். அந்தத் தலைகளைப் பற்றி எல்லோரும் ஆர்வத்தோடு விசாரித்தார்கள். எனவே, இந்தக் கண்காட்சியிலும் அது போலத் தலைகளை வைக்க விரும்பினேன். ஆனால், வழக்கமான மனித முகமாக இல்லாமல், ஆஸ்கர் விருதில் இடம் பெறுவது போன்ற ஒரே மாதிரியான பொன் நிறமான மனித முகங்களை உருவாக்கினேன்.

கடந்து வந்த கலைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது மனதில் என்ன தோன்றுகிறது?

ஓவியக் கலையில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, சென்னை கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பையும், முதுகலைப் டிப்ளமோ படிப்பையும் முடித்துவிட்டு, பிரான்ஸ் அரசாங்கத்தின் ஃபெலோஷிப் பெற்று, அங்கேயும் சென்று படித்தேன். அப்பாவின் வழியில் சினிமாவுக்கு வந்து கலை இயக்குநர் ஆனேன்.

'நாகமல்லி' என்ற தெலுங்குப் படம்தான் எனக்கு முதல் படம். இன்று வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல இந்திய மொழிப் படங்கள் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்குக் கூட ஆர்ட் டைரக்டராக 200 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு ஆர்ட் டைரக்டர் சினிமாவில் ஒரு காட்சிக்குரிய செட்டை நிர்மாணிக்கிறார் என்றால், அது ஏராளமான தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாகிறது. அந்த செட்டில் ஒரு காட்சியை இயக்குநர் ஒருவர் படம் பிடிக்கிறார் என்றால், அது ஏராளமான முகம் தெரியாத பல டெக்னிஷியன்கள், தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகிறது. இப்படிப்பட்ட முகம் தெரியாத மனிதர்கள் ஏராளமானவர்களோடு நான் எனது சினிமா வாழ்க்கையில் பயணித்திருக்கிறேன். இந்த கண்காட்சி அவர்களுக்கு என்னுடைய சமர்ப்பணம்.

என் உழைப்பு மற்றும் கற்பனைத் திறனை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு முறை தேசிய விருது, மூன்று முறை ஆந்திர அரசின் நந்தி விருது, நான்கு முறை தமிழக அரசு விருது, ஒரு முறை கேரள அரசு விருது, இவற்றைத் தவிர மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது எனப் பல அங்கீகாரங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறபோது, சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்த படங்கள் பற்றி?

குடிசைப்பகுதிகள், அரண்மனைகள், கோட்டை, கொத்தளங்கள், கோயில்கள் என்று ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமான செட்டுகள் தேவைப்படுகின்றன. அவை ஒவ்வொன்றையும் நிர்மாணிக்கும்போது எனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்தது. 'அர்ஜுன்' என்ற தெலுங்குப் படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையே தத்ரூபமான செட்டாகக் கொண்டு வந்தேன்.

'நாயகன்' படத்துக்காக மும்பையில் இருக்கும் தாராவி ஏரியாவையே சென்னையில் உருவாக்கினேன். இயக்குநர் ஷங்கரின் 'சிவாஜி' படத்தில் ரஜினியின் 'சஹானா...', 'வாஜி... வாஜி' பாடல் காட்சிகளுக்காக பிரம்மாண்டமான செட்டுகள் போட்டேன். 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களுக்கும் பணியாற்றியது பெரும் சவால்தான். நிறைய அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT