தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
பெண் வாசகர்களால் கொண்டாடப்படும் ரமணி சந்திரனை அறிமுகப்படுத்தியது அருணோதயம். அவரது நூல்கள் இன்றும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
அருணனைப் போன்ற பழம்பெரும் பதிப்பாளர்கள்தான் பதிப்பு உலகுக்குப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்கள். சென்னைப் புத்தகக் காட்சிக்கு ஆரம்பகாலத்தில் அடித்தளமிட்டு வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
நூற்றாண்டு கண்ட இவர் சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட தேவகோட்டையில் 1924-இல் லட்சுமணன் செட்டியார்- சீதை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
மலேசியாவில் லட்சுமணன் வணிகம் புரிந்துவந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆதலால் அருணனின் இளமைக்காலம் சிரமமாகவே இருந்தது. தேவகோட்டை பள்ளியில் இவர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
நள்ளிரவில் தேசத் தலைவர்களைக் கைது செய்த ஆங்கிலேய ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதன்முதலாக அருணோதயம் அருணன் மேடையேறி, '' மகாத்மா காந்தியை நள்ளிரவில் கோழைகள் போல் கைது செய்த ஆங்கிலேயர்களைப் பாதாளத்தில் போட்டு புதைக்கும் வரை ஓயமாட்டோம்'' என்று உரத்தக் குரலில் முழக்கமிட்டார். இதனாலேயே அவர் போலீஸாரின் கவனத்துக்குரியவராக மாறிவிட்டார்.
ஆங்கிலேய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற இருந்தபோது, அதற்கு சில நாள்களுக்கு முன்னதாகவே சின்ன அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையைச் சூழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைக்கதவுகளை உடைத்தெறிந்து, தலைவர்களை விடுதலை செய்தனர். இதற்காக போலீஸாரால் தேடப்பட்டவர்களில் அருணனும் ஒருவர்.
இவருக்கு எட்டாவது வயதிலேயே கல்யாணி ஆச்சியுடன் திருமணம் நடைபெற்றது. ஆங்கிலேயர்களின் தேடலுக்குப் பயந்த இவரின் மாமனார், அருணனை வெற்றியூர் என்னும் கிராமத்தில் காயாம்பு அம்பலக்காரர் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருக்க வைத்தார். பின்னர், அவர் மீண்டும் பள்ளியில் சேர்ந்தபோது, சோதனைகளுக்கு உள்ளாகியதால் படிப்பை நிறுத்திக் கொண்டார்.
சென்னையில் சின்ன அண்ணாமலை, ஆசாத் ஹிந்த் லேனா, பள்ளத்தூர் வீரப்ப செட்டியார் ஆகிய மூவரின் கூட்டுப்பொறுப்பில் இயங்கிய 'தமிழ்ப்பண்ணை' புத்தக நிறுவனத்தில் அருணன் நூலகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ப்பண்ணையை வெளியிட்டு வந்த மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கல்கி போன்ற மேதைகளின் நூல்களை அருணன் படிக்க ஆரம்பித்தார். அவர் தமிழ்ப்பண்ணையில் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.
1944-இல் இவர் தனது நண்பருடன் இணைந்து மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் 500 ரூபாய் முதலீட்டில் 'புத்தக ஆலயம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 'அலையன்ஸ்' நிறுவன உரிமையாளர் குப்புசாமி ஐயர் இவ்விழாவுக்குத் தலைமை வகிக்க, சக்தி வை. கோவிந்தன் தொடங்கிவைத்தார். சின்ன அண்ணாமலை வாழ்த்திப் பேசினார்.
அடுத்து புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வீடுகளில் போட்டு கிடைக்கும் குறைந்த வருவாயை வைத்து நாள்களை ஓட்டினார். முல்லை முத்தையாவின் அழைப்பின்பேரில், மதுரையில் முல்லைப் பதிப்பக நிர்வாகியாக அருணன் பணியாற்றியபோது, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது .
அருணன் எழுதிய சிறுகதைகள் 'குமரன்', 'பெண் செட்டிநாடு' இதழ்களில் வெளியாக, கவிதைகளையும், கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார். 1955-இல் அவர் ஹரிச்சந்திரா', 'விநாயகர் சதுர்த்தி' போன்ற திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதினார்.
'இளங்கோ பதிப்பகம்' நடத்திய சொக்கலிங்கம், கவிஞர் குயிலன், அருணன் ஆகிய மூவரும் தலா 250 ரூபாய் எனச் சேர்த்து 'தென்றல்' என்ற பத்திரிகையை நடத்தினர். கவிஞர் கண்ணதாசனுக்கும் அருணனுக்கும் 'தென்றல்' பத்திரிகையின் மூலம்தான் நட்பு ஏற்பட்டது. 'தென்றல்' முதல் இதழில் 'பீலிவளை' என்ற சிறுகதையை அருணன் எழுதினார். 750 ரூபாய் முதலீட்டில் எவ்வளவு காலம்தான் பத்திரிகையை நடத்த முடியும். 'நல்ல தரமான இலக்கிய இதழ்' என்ற புகழை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களைவிட்டு 'தென்றல்' ஒதுங்கிக் கொண்டது. பின்னர், 'தென்றல்' இதழை கண்ணதாசனே ஏற்று நடத்தினார்.
இதற்கிடையே சிரஞ்சீவி, கம்பதாசன் போன்றவர்களின் முதல் நூல்களையும், ம.பொ.சி.யின் 'தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும்' என்ற நூலையும் அருணன் வெளியிட்டார்.
பின்னர் 'சினிமா ரசிகன்', 'கலையரசு' இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
கவிஞர் கண்ணதாசனின் அழைப்பின்பேரில், சேலத்துக்குச் சென்று 'மந்திரி' வாரப் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை அருணன் ஏற்றார். டி .ராஜகோபாலன் எம்.பி., ஆர். நாகராஜன் ஆகிய இருவரையும் நிர்வாக ஆசிரியர்களாகக் கொண்டு, மதுரையில் இருந்து வெளியான 'தினச்செய்தி' நாளிதழில் அருணன் பணியாற்றினார்.
'தினச்செய்தி' நின்றுவிட்டவுடன் காரைக்குடியில் 'அருணம்' என்ற பெயருடன் மாதம் இருமுறை இதழை துவக்கினார். இதில்தான் 'போற்றுபவர் போற்றட்டும்' என்ற கவிதையை கவியரசர் கண்ணதாசன் எழுதினார்.
1953-இல் 'தென்றல்' இதழ் மீண்டும் வெளியாகியது. அதன் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் கண்ணதாசன் இருக்க, நிர்வாகியாக அருணோதயம் அருணன் இருந்தார்.
கண்ணதாசனின் 'ஈழத்து ராணி' என்ற சிறுகதை தொகுதியை அருணோதயம் பதிப்பகத்தின் முதல் நூலாக அருணன் வெளியிட்டார். தொடர்ந்து, அவர் கண்ணதாசனின் 'இலக்கியத்தில் காதல்', 'கூட்டுக்குரல்' , 'தமிழர் திருமணமும் தாலியும்', 'ராஜ தண்டனை', 'அண்ணாவின் பெரும் பயணம்', 'ஆயிரம் தீவு', 'அங்கயற்கண்ணி' ஆகிய நூல்களை வெளியிட்டார்.
என். சி .அனந்தாச்சாரி எழுதிய 'வருமான வரிச் சட்டம்' என்ற நூலை மலிவு விலை நூலாக வெளியிட்டார் .
காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவருடைய பேச்சுகளை 'உழைப்பே உயர்வு தரும்' என்ற பெயரில் ஆர். சண்முகம் தொகுத்த நூலையும், காமராஜரின் சிந்தனை, சொல், சாதனைகளை ஒருங்கிணைத்து 'காமராஜ்' என்ற நூலையும் அருணன் பதிப்பித்தார். காமராஜரின் மறைவுக்குப் பின்னர், பி.சி. கணேசன் எழுதிய 'பாரதப் பெருந்தலைவர் காமராஜர்' என்ற பெரியதொரு நூலையும் அருணன் வெளியிட்டார். இலக்கிய நூல்களை மலிவு விலையில் பதிப்பித்தார். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் குழந்தைகள் நூல் வெளியீட்டிற்கான பாதையைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அறுநூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் நூல்களை அருணோதயம் வெளியிட்டது.
பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன், பேராசிரியர் நா. பாண்டுரங்கன், புலவர் அரசுமணி, தி. தண்டபாணி, வே. கபிலன், ர.சண்முகம் போன்ற பல நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டார் .
-பழனியப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.