முகப்பு
தினமணி கதிர்

நாடகத்தில் நாராயண குரு

தத்துவஞானி, ஆன்மிக வழிகாட்டி, சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் என்று பன்முகத் தன்மை கொண்ட நாராயண குரு கேரள மக்களால் போற்றப்படுகிறார்.

Updated On : 22 பிப்ரவரி 2026, 4:09 am IST
பகிர்:

தத்துவஞானி, ஆன்மிக வழிகாட்டி, சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் என்று பன்முகத் தன்மை கொண்ட நாராயண குரு கேரள மக்களால் போற்றப்படுகிறார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் 45 ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கையையும், ஆன்மிகப் பணிகளையும் விளக்கும் நாடகத்தை அண்மையில் மேடையேற்றி இருக்கிறார் 'மாலி ஸ்டேஜ்' குடந்தை மாலி.

நாராயண குருவின் வாழ்க்கையை மேடையேற்ற வேண்டும் என்ற ஆர்வம் எப்படி? ஏற்பட்டது? அதற்கு எப்படிச் செயல் வடிவம் கொடுத்தீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது:

'எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் சீடன். அவர்தான் எனக்கு 'குடந்தை மாலி' என்ற பெயரைச் சூட்டினார். எனக்கு இப்போது 92 வயது ஆகிறது.

Advertisement

Advertisement

1957-இல் நான் நாடக உலகில் நுழைந்தேன். விரைவில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். இதுவரை 43 நாடகங்களை நடத்தி இருக்கிறேன். அவற்றில் 23 நாடகங்கள் நான் எழுதியவை. கவிஞர் கா.மு.ஷெரீப் தலைமையில் எனது முதல் நாடகமான 'தந்தை என் தெய்வம்' மேடையேறியது. இதை ரசித்த ம.பொ.சி. என்னிடம், 'சமுதாய முன்னேற்றத்துக்கான கருத்துகளை நாடகம் மூலமாக மக்களுக்குச் சொல்!' என்று அறிவுறுத்தினார். பின்னர், எங்கள் குழுவின் ஒவ்வொரு நாடகத்தின் மூலமாகவும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி வருகிறேன்.

இறைநம்பிக்கையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது எனது 'கடவுள் எங்கே?' என்ற நாடகம். அந்த நாடகத்துக்கு டி.எம்.எஸ். இசை அமைத்தார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போதும் மோதல் இருப்பது போலத் தோன்றினாலும், இரு நாட்டு சாமானியர்களும் நட்புடன் இருக்கவே விரும்புகிறார்கள் என்று கூறும் நாடகம்தான் 'நம்மவர்கள்'. இதையறிந்த டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எங்கள் குழுவினரை அழைத்து, சுமார் முக்கால் மணி நேரம் உரையாடி விருந்து அளித்தார். 'ஞான பீடம்' நாடகம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.

கேரளத்தில் ஈழவ சமூக மக்களின் சமூக நீதிக்காகவும், கல்வி முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர் நாராயண குரு. தீண்டாமை ஒழிப்பில் மகாத்மா காந்தி அதிக கவனம் செலுத்தியதற்கு, அவர் நாராயண குருவைச் சந்தித்து, ஆழமாக உரையாடியதே முக்கிய காரணமாகும். காந்திஜி, ஜவாஹர்லார் நேரு, ராஜாஜி, நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாராயண குருவைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். அவரைப் பற்றி தமிழர்கள் அறிய வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த நாடகத்தை மேடையேற்றினேன்.

கடந்த டிசம்பரில் முதலில் மேடையேறியது. அதற்குள் சுமார் 20 முறை இந்த நாடகத்தைப் போட்டிருக்கிறோம். ஆர்.எஸ். மனோகர் நாடகக் குழுவில் பல்லாண்டுகள் நடித்த அனுபவம் கொண்டவரான கே.ஆர்.எஸ். குமார் இந்த நாடகத்தில் நாராயண குருவாக நடிக்கிறார். அவரது ஆர்ப்பாட்டம் இல்லாத அழுத்தமான நடிப்பு அசத்துகிறது.

பொள்ளாச்சியில் இந்த நாடகத்தைப் பார்த்த தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வாணவராயர், வெகுவாகப் பாராட்டியதுடன், அடுத்து வள்ளலாரின் வாழ்க்கையை மேடை நாடகமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்' என்கிறார் குடந்தை மாலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.