சுஜாதா மாலி
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதற்கிணங்க, கோயில்களைத் தேடிச் சென்று அங்கு உறைந்திருக்கும் இறைவனை வணங்குவோம். சில சமயங்களில் இறைவனே நம்மைத் தேடி வந்து காட்சி தருவதும் உண்டு.
பெருந்திருவிழாக் காலங்களில் வீதியுலா என்கிற விஷயத்தை ஏற்படுத்தியதன் காரணம் மிக உயர்வானது. வயதானவர்களும் உடல்நலம் குன்றியவர்களும்கூட இறை தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக விதவிதமான அலங்காரங்களில் தெய்வத்திருமேனிகளை உலா வரச் செய்கின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக அமைவது 'ரதோத்சவம்' எனப்படும் தேர்த் திருவிழா. அப்படிக் கருவறைத் தெய்வத்துக்கு இணையான உலாத்திருமேனியரைத் தாங்கி வரும் தேர்கள் பெரிதும் போற்றுதலுக்குரியவை.
'நகரும் கோயில்' எனப்படும் தேரின் உருவாக்கம் பற்றிய அரிய செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மாமல்லபுரத்தைச் சார்ந்த தேர் ஸ்தபதி புஷ்பராஜ். பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், மாமல்லபுரம் அரசு கலைக் கல்லூரியில் நுண்கலைகளுக்கான பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.
அவருடன் ஒரு சந்திப்பு:
தேர் செய்வதற்கான மரங்களை எப்படித் தெரிவு செய்கிறீர்கள்?
தேருக்கான மரம் தெரிவு செய்வதுதான் மிகப் பெரிய விஷயம். பாரம்பரிய முறைப்படி செய்கிற காலகட்டத்தில் தேருக்கான மரம் வெட்டுவதற்காக வனப்பகுதிக்குச் செல்வதே ஒரு விழா போல இருக்கும். நல்ல நேரம் பார்த்து பூஜைகள் செய்து, மங்கள வாத்தியம் ஒலித்திட, கீழ்த்திசை நோக்கித்தான் செல்ல வேண்டும். பால் மரமாக, பசுமையாக இருக்க வேண்டும். பழமரமாகவும் பட்டுப்போன மரமாகவும் இருக்கக் கூடாது.
வெட்டுப் பட்ட மரம் சாய்வதுகூட கிழக்குத் திசை நோக்கித்தான் இருக்க வேண்டும். இப்படி நிறைய... ஆனால், இப்பொழுதெல்லாம் இம்முறைகள் அரிதாகி விட்டன. மரவாடியில் இருந்து வாங்கி வந்து விடுகிறார்கள்.
பழமரம் இருக்கக் கூடாது என்றீர்களே ?
ஆம். பழமரம் என்றால் காய்க்கும் மரம். பழங்கள் இருந்தால் அதை உண்பதற்காக பறவை முதலான சிறுஉயிரினங்கள் வந்து அடையும். வெட்டும்போது அவற்றுக்கு ஆபத்து உண்டாகும். அதேபோல் பறவைகள் வசிக்கும் மரம். அதைக் கூடுமரம் என்போம். அவற்றையும் தவிர்த்து விடுவோம்.
வெட்டியவுடன் என்ன செய்வீர்கள்?
மூன்று மாதங்கள் ஜலவாசம். இது எதற்கென்றால், மரத்துக்கு உள்ளே உள்ள ஈரத்தன்மையும், தண்ணீரில் உள்ள ஈரத்தன்மையும் ஒன்றோடொன்று சமன்பட்டு மரத்தை உறுதியாக இறுக்கச் செய்யும் என்பதற்காக. பிறகு பக்குவமாகிற வரை நிழலிலேயே உலர்த்துவோம்.
வெயிலில் காயவைத்தால் மரம் விரிசல் கண்டு விடும். அதனால் மேற்சொன்ன முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதன் பிறகுதான் தகுந்த அளவுகளுக்கு ஏற்ப மரத்தினை வெட்டும் பணியைத் துவக்கிடுவோம்.
தேர் அளவுகளை எப்படித் தெரிவு செய்வீர்கள்?
முதலில் தேர் ஓடப்போகும் வீதியின் அளவுகளைப் பார்ப்போம். 'தேர் பார்க்கும் முன்பு ஊர் பார்க்க வேண்டும்' என்று சொல்வார்கள். அதற்குத் தகுந்தாற்போல் தேரின் அளவை நிர்ணயம் செய்வோம். பிறகு மூல மூர்த்திக்குரிய நட்சத்திரம், தேரினைச் செய்கிறவருடைய (கர்த்தா) நட்சத்திரம் இவற்றைப் பார்த்து பிறகு பணியினைத் துவக்கிடுவோம்.
தேரின் கீழ்ப்பகுதியில் என்னென்ன விதமான அடுக்குகள் அமைப்பீர்கள்?
பொதுவாக முதலடுக்கு, நடாசனம், விஸ்தாரமட்டம், தேவாசனம், சிம்மாசனம் என ஐந்து விதமான அமைப்புகளைக் கொண்டு கட்டப்படுவது தான் தேர். தொடக்கமாக சக்கரம். அந்தக் காலத்தில் சக்கரம்கூட மரம்தான். இப்பொழுது இரும்பில் செய்து விடுகிறார்கள். பிறகு அச்சு பார். இதுதான் சக்கரங்களுடன் தேரை இணைப்பது. அதற்கு மேலே மூன்று முதல் பதினொரு வரை அடுக்குகள் அமையும். முதலில் பூத வரிசை.
இதனைப் பூத பார் என்பார்கள். பூதங்கள் தேரைத் தாங்குவது போல அமைப்பு இருக்கும். அதன் மேலே உப பீடம், பீடம் என வரிசையாக அமைப்போம். யானை வரிசை, குதிரை வரிசை, யாளி வரிசை என ஒன்றன் மேல் ஒன்றாக அமையும். அதன்மேல் விஸ்தாரம்.
இதுதவிர விஸ்தாரத்தின் கீழ் அமையும் வரிசைகளில் பலவிதமான சிற்பங்களும் இடம்பெறும். எந்தக் கடவுளுக்காக தேர் அமைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல சிற்பங்கள் அமையும். கடவுளினுடைய அவதாரங்கள், திருவடிவங்கள், லீலைகள், புராணச் சித்தரிப்புகள் ஒட்டிய சிற்பங்கள் அமைப்போம்.
அதற்குக் கீழாக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அருளாளர்கள், தொண்டர்கள் என ஒன்றன் கீழ் ஒன்றாக அமைப்போம். சிவாலயத்தேர் என்றால் நாயன்மார்கள், பெருமாள் தேர் என்றால் ஆழ்வார்கள்...இப்படியாக அமையும்.
தேரின் மையப்பகுதி பற்றிச் சொல்லுங்களேன்?
மேற்சொன்ன அடுக்குகளைத் தாண்டி விஸ்தாரம். அதன் மேல் சிம்மாசனம். இதுதான் தேருக்கு உரிய கடவுளின் திருமேனி அமர்த்தப்படும் இடம். சதுரமையத்தில் சுற்றிலும் நான்கு பட்டை அல்லது எண் சதுரமையத்தில் எட்டுப் பட்டை வரும்படியாக அமைப்போம். அதற்கேற்றபடி தூண்கள் அமைப்போம்.
முருகனுக்குரிய தேராக இருந்தால் மட்டும் ஆறு பட்டைகளாக அமைப்போம். சில தேர்கள் வட்டவடிவில் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
தேரின் மேல் பகுதி எப்படி அமையும்?
மீண்டும் உயரத்தில் மேல்நோக்கி கொடுங்கை, சிகரம் முதலான வரிசைகள் எழும்பும். உச்சியில் கலசம், அதற்கும் மேலே குடை என நிறைவு செய்வோம். மேல் கூரையில் சிற்பங்கள் அமைப்பது இல்லை. இருமருங்கிலும் புஷ்ப கந்தருவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் போன்றோர் அமைக்கப்படுவார்கள்.
இவர்கள் வானுலகத்திலிருந்து உள்ளிருக்கும் மூர்த்திக்கு பூச்சொரிபவர்கள். பிறகு சாமரம் வீசுகிற தேவமகளிர். வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய துவாரபாலகர்கள். உள்ளிருக்கும் கடவுள் மட்டுமே பெரிய சக்தி என்பதை தங்கள் வலுவான உடல் அமைப்பு மற்றும் முத்திரைகள் மூலம் சொல்லாமல் சொல்லிடும் காவல் நாயகர்கள் இவர்கள். முன்பக்கத்தில் குதிரைகள் அவைகளை ஓட்டும்படியாக பிரம்மாவானவர் ரதசாரதியாக அமைக்கப்படுவார். இப்படியாக தேர்ப் பணிகளை நிறைவு செய்வோம்.
தேரின் தத்துவம் என்ன?
கோயிலின் மையத்தில் இருப்பதைப்போல, நம் இதயத்தின் மையத்தில் வசிக்கின்ற பரம்பொருளை தேரின் நடுவில் இருத்தி வழிபடுகின்றோம். ஊர் கூடித் தேர் இழுத்தல் என்கிற பழமொழியின்படி, வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு தேர் இழுத்தல் சமூக ஒற்றுமைக்கான உயர்ந்த விஷயம்.
ஆயிரக்கணக்கானோர் ஒன்றுபடும்போது உருவாகும் வலுவான ஆற்றலானது நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்குகிறது. இதன் மூலம் கிடைத்திடும் மகத்தான நற்பலன்கள் ஊரின் வளத்தை அதிகரித்திடும்.
ஆயினும், இதுவரை சொன்னது அனைத்துமே தேரின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள்தாம். தேர் என்றாலே நகரும் ஊர்தி என்றுதான் நம் ஊரில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அதில் நுணுக்கமான விஷயங்களும், கலைச் சொற்களும் ஏராளம். அவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினர் முனைய வேண்டும். பொக்கிஷம் போன்ற இக்கலையினைக் காப்பாற்றி வளர்த்திட நம் இளைஞர்கள் முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.