பொ.ஜெயச்சந்திரன்
கல்வி என்பது பாடப் புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல; அது வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கம், கலை, பண்பாடு, பாரம்பரியம், சுற்றுச் சூழல், பாதுகாப்பு போன்ற அனைத்தையும் கற்றுத் தர வேண்டும். அதற்குப் பள்ளி ஆசிரியர்களின் உறுதுணையும், தூண்டுதலும் மிகவும் முக்கியம். அதனை சரியான முறையில் கடைப்பிடித்தும், ஊருக்குப் பெருமையும் சேர்த்து வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெக்ணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி.
உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்கள் பார்த்தும் வியக்கும் வகையில் உள்ளது சுவர் ஓவியங்கள். அதில் ஒன்றுதான் கரோனா ஊரடங்குக் காலத்தில் வரையப்பட்ட ரயில். கதவுகள் திறக்கும் வகையில் அமைந்த இந்த ரயில் ஓவியம் பரிசுத் தொகையும், பாராட்டும் பெற்றது. இதற்குப் பின் அடுத்த சில ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானமும் வரைந்துள்ளனர்.
மாணவ நூலகம்:
முதுகலை முடித்த மாணவர்கள்கூட முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிப்பதற்குத் தயங்குகின்றனர். ஆனால், இந்தப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போதும்,
10-ஆம் வகுப்பு முடித்து விட்டு மேல் நிலைப் படிப்பிற்காக வெளியூர் செல்லும் போதும் ஒரு தலைப்பை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்து, அதனை நூலகத்தில் அடுக்கி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
பதாகையில் 10 மாணவர்கள்:
ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுத் தேர்வுகளில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயரோடு அவர்களது பெற்றோர் பெயர்களையுயும், பெற்ற மதிப்பெண்களையும் பதாகையில் எழுதி வைக்கின்றனர்.
அது போல 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய பதாகைகள் வைக்கின்றனர். இது மற்ற மாணவர்களுக்கு... அவர்களைப் போல நாமும் ஒரு நாள் இந்தப் பதாகையில் வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
தானியங்கள், பருப்பு வகைகள்:
குதிரை வாலி, சோளம், வரகு, தினை, சோயா பீன்ஸ், கவுனி அரிசி, துவரை, கருப்பு சுண்டல், உளுந்து, கேப்பை, தட்டை, மொச்சை, பாசிப்பயறு, சாமை, பச்சைப் பட்டாணி, கொள்ளு இது போன்றவற்றுக்கு தனியாக இடம் ஒதுக்கி, அதனை நேரடியாக மாணவர்களுக்குக் காண்பித்து அது சார்ந்து பயன்களை விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
பூச்செடிகள், மரக்கன்றுகள்:
சின்ன சின்ன தொட்டிகள் வைத்து அதில் மருத்துவப் பலன்களையும் தரும் முக்கியச் செடிகளை வைத்துள்ளனர். பள்ளி வளாகம் முழுவதும் மாணவர்களையே மரக்கன்று நடவைத்து வளர்த்து வருகின்றனர். அதனால் வெயில் அடித்தாலும், லேசாக குளிர்ந்த இடமாக மாறியுள்ளது.
அறிவாற்றலை உருவாக்க மட்டுமல்ல, அன்பான மாணவர்களையும் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது, லெக்ணாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.