ஞாயிறு கொண்டாட்டம்

பனிப் பாலைவனம்

சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா ?

சுதந்திரன்

சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா ?

ஒவ்வொரு பயணியின் வாழ்நாள் கனவாக இருக்கும் 'ஸ்பிட்டி' பள்ளத்தாக்குதான் இந்தியாவின் பனிப் பாலைவனம்.

'ஸ்பிட்டி' என்பது திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலத்தைக் குறிக்கிறது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பழமை, தூய்மை மாறாத பனிச்சொர்க்கம். இமய

மலையில் பதிக்கப்பட்டிருக்கும் வைரம் தான் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு. வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளில் பயணிக்கும்போது, தரிசாக இருக்கும் மலைச் சிகரங்கள், செதுக்கப்பட்டது போல் தோற்றம் தரும் பாறைகளைக் காணலாம்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் ஸ்பிட்டி அமைந்துள்ளது. லாமாக்கள் வாழும் ஸ்பிட்டியின் கவர்ச்சிகரமான ஈர்ப்பு, அங்குள்ள புத்த மடாலயங்கள்தான்! அதன் சுவர்களை வண்ண வண்ண பளீர் ஓவியங்கள், தங்காக்கள் (மத ஓவியங்கள்) அலங்கரிக்கின்றன. கருஞ்சிவப்பு நிற அங்கி அணிந்த லாமாக்கள் புனித மந்திரங்களை முணுமுணுத்தாலும் அவை எதிரொலிக்கும் அளவுக்கு ஆழ்ந்த அமைதி ஸ்பிட்டியை ஆளுகிறது.

ஸ்பிட்டி ஆன்மிக நாட்டம் கொண்டவர்களைக் கவர்ந்திருப்பது போல், சாகசத்தைத் தேடுபவர்களுக்கான தீனியையும் வழங்குகிறது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் வாகனங்களில் பயணங்களே சாகசமாகத்தான் அமையும். மலையேற்றம், முகாம்களில் தங்குதல், ஸ்பிட்டி ஆற்றின் குறுக்கே நதி ராஃப்டிங் சாகச விரும்பிகளை வரவேற்கின்றன.

பனிச்சிறுத்தைகள், கம்பீரமான இமயமலை நீல செம்மறி ஆடுகள் ஸ்பிட்டி பகுதியின் வரங்கள். அதனால்தான் ஸ்பிட்டியை ருட்யார்ட் கிப்ளிங், 'உலகத்திற்குள் ஓர் உலகம்' என வர்ணித்தார்.

தர்மசாலா, குலு மணாலி, சந்திரஷிலா, முசோரி, லாண்டூர், டேராடூன் போன்ற சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற இடங்களைவிடத் தனித்து நிற்பது ஸ்பிட்டி. அனைத்து சுற்றுலா இடங்களைவிட ஸ்பிட்டி அதிக உயரத்தில் இருக்கிறது. அதனால் கோடைக் காலத்தில் வெப்பம் 20 டிகிரியைத் தாண்டாது. குளிர்காலங்களில் மைனஸ் 20 டிகிரி வரை போகுமாம்.

ஸ்பிட்டி பள்ளத்தாக்கை எப்படி அடைவது?

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள உள்நாட்டு விமான நிலையம் 'பூந்தர்'. சண்டிகர் ஸ்பிட்டிக்கு மிக அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம். பூந்தர், ஸ்பிட்டியின் தலைநகரமான காஸாவிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ளது; சண்டிகர் 500 கி.மீ. தொலைவில் உள்ளது. சண்டிகர் அல்லது பூந்தருக்கு விமானத்தில் சென்றால், காஸாவிற்குச் செல்ல டாக்ஸி தேவைப்படும். அதை வாடகைக்கு எடுக்க மணாலி அல்லது சிம்லாவிற்கு வரவேண்டும்.

தரைவழியாக ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு எப்படிச் செல்வது?

சிம்லா அல்லது மணாலியிலிருந்து ஸ்பிட்டியின் தலைநகரான காஸா வரை பேருந்து, டாக்சியில் போகலாம். சிம்லாவிலிருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாதை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். இந்தத் தடம் பாதுகாப்பானது.

மணாலியிலிருந்து ஸ்பிட்டிக்குச் செல்லும் சாலை குறுகியது. பயணத்திற்குப் பாதுகாப்பற்றது. கீ மடாலயம், தபோ மடாலயம், சந்திரதால் ஏரி, காஸா, கிப்பர், லாங்சா, கோமிக் மற்றும் ஹிக்கிம் கிராமங்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் மிக முக்கியமான இடங்களில் அடங்கும்.

ஸ்பிட்டியில், பொதுவாக சாலைகள் ஆபத்தானவை என்பதால், வேகம் மற்றும் அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரப்பயணம் கூடாது. மலை ஏற்றம் இளைஞர்கள் மட்டும் அதுவும் வழிகாட்டிகளுடன் செய்யவேண்டும்.

கடுமையான மலை நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் முதலுதவி உடனே பெற வேண்டும். ஸ்பிட்டி பகுதியில் மருத்துவ வசதிகள் குறைவு. அதனால் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோடையில் கூட உடலை வெப்பமாக வைத்திருக்கும் தெர்மல் ஆடைகளை போதுமான அளவில் கொண்டு செல்ல வேண்டும். ஸ்பிட்டி குளிரை கோடைக்காலத்தில் கூட குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஸ்பிட்டி பள்ளத்தாக்கில், பனிச்

சிறுத்தை சுற்றுலாவிற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக 'பின்' பள்ளத்தாக்கு 'தேசியப் பூங்கா' அறியப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வர பனிச்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பனிச் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கியதாக பதிவுகள் இல்லை. கூச்ச சுபாவமுள்ள பனிச் சிறுத்தைகள் மனிதர்கள் தொடர்பைத் தவிர்க்க விரும்புகின்றன.

ஸ்பிட்டியின் முக்கிய விளைபொருள்களில் பார்லி மற்றும் கருப்புப் பட்டாணி இடம் பிடிக்கிறது. பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற பணப்பயிர்களும் விளைகின்றன. பார்லி அதிகமாக விளைவதால், மாவு தயாரிக்க பார்லியைப் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள், பாதாம் பயிரிடுகிறார்கள்.

பசுமை இல்லங்கள் கீரை, கேரட், தக்காளி போன்ற பல்வேறு காய்கறிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கின்றன. ஸ்பிட்டியில் குளிர்காலத்தில் பனிச்சரிவுகள் நவம்பர் முதல் மார்ச் வரை ஏற்படுகின்றன. சாலைகள், வீடுகள் பனிச்சரிவால் பாதிக்கப்படும். தென்னக மக்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஸ்பிட்டி சென்று வரலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரணி நகராட்சி குப்பை கொட்டும் இடம் ஆய்வு!

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

முதல்வா் திறனறித் தோ்வு கையேடு: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்!

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

SCROLL FOR NEXT