1875-இல் நீக்ரோ குடும்பத்தில் மேரி பெத்தூன் பிறந்தபோது, மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்பார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தாயார் ஆங்கிலேயர் குடும்பம் ஒன்றில் துணி துவைக்கும் வேலையைச் செய்தார்.
சிறு வயதிலேயே தாயுடன் செல்லும்போது, மேரி பெத்தூனுக்கு ஆங்கிலேயக் குழந்தைகளுடன் விளையாடவும், அவர்களைப் போலப் படிக்கவும் ஆசை. முதலில் கிண்டலும், கேலியும் செய்த ஆங்கிலேயச் சிறுமிகள் நாளடைவில் மேரி பெத்தூனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர்.
கஷ்டப்பட்டு விடாமுயற்சியுடன் மேலும், மேலும் படித்தாள். நாள்கள் செல்லச் செல்ல அவருக்கு வாசிக்கும் பழக்கம் முக்கிய கடமைகளில் ஒன்றாகியது. படிப்பறிவையும் பெற்று, கல்வியில் சிறந்தாள்.
மேரி பெத்தூனுக்கு இருபது வயதாகும்போது, தன்னைப் போன்ற நீக்ரோ குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. புளோரிடா மாகாணத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றபோது, பணியில் ஈடுபட்டிருந்த நீக்ரோக்களின் குழந்தைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தனர்.
மேரி பெத்தூன் ஆர்வத்துடன் நீக்ரோ குழந்தைகளுக்கு ஒரு சிறிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். முதலில் ஐந்து குழந்தைகள் பள்ளிக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு மேரி பெத்தூன் முழு ஈடுபாட்டுடன் பாடம் பயிற்றுவிக்க, குழந்தைகள் பெருமளவு வரத் தொடங்கினர். நாளடைவில் வேறு பெரிய இடமாகப் பார்த்து, பள்ளிக் கட்டடத்தை விரிவாக்கினார். தின்பண்டங்கள் தயாரித்து விற்று, அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு கட்டட வாடகையை அளித்தார்.
பின்னர், நீக்ரோ தொழிலாளர்கள், முதியவர்களும்கூட ஆர்வத்துடன் கல்வி பயில வந்திருந்தனர்.
அறிவில் சிறந்து, ஒழுக்கத்தில் உயர்ந்து நீக்ரோ மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வந்த மேரி பெத்தூனை புளோரிடா மாகாண மக்கள் போற்றினர்.
இப்படியாகத் தன்னலம் கருதாமல் சமூகத் தொண்டு புரியத் தொடங்கி, முன்னேற்றம் கண்ட மேரி பெத்தூனை அமெரிக்காவின் அப்போதைய அதிபர் (1922-33) ஹெர்பர்ட் ஹூவர் தனது வெள்ளை மாளிகைக்கு அழைத்து, கௌரவித்துப் பரிசுகளை வழங்கினார். அதோடு, அமெரிக்கா நாட்டில் வாழும் அனைத்து நீக்ரோ குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், கல்விப் பயிற்சித் துறைக்கும் மேரி பெத்தூனை தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தினார்.
அடுத்து வந்த அதிபர் (1933-45) பிராங்ளின் ரூஸ்வெல்டோ, நீக்ரோ குழந்தைகளுக்காக ஆறு லட்சம் தொழிற்கல்வி வகுப்புகளை நாடெங்கிலும் ஏற்படுத்தினார். இவை அனைத்துக்கும் மேற்பார்வையாளராக மேரி பெத்தூனை நியமித்தார்.
1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய தேச மகாசபைக்கு மேரி பெத்தூன் அமெரிக்கப் பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பிவைக்கப்பட்டார்.
1952-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் 'ரீடர்ஸ் டைஜஸ்டு' இதழில் மேரி பெத்தூன் குறித்தான சிறப்புக் கட்டுரை வெளியானது.
'தன்னலம் கருதாமல் நீக்ரோ இன மக்களுக்காக அயராது சேவையாற்றி வரும் மேரி பெத்தூனைப் பார்க்கும்போது, எனக்கு என் மனதில் உண்மையான சாந்தியும், மனத் திருப்தியும் உண்டாகிறது'' என்று அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் அடிக்கடி கூறுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.