ஜி.மீனாட்சி
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
'பிரவாகம்' இசைக் குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள்?
இசையில் ஆர்வமுடைய இளம் பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, 2017-ஆம் ஆண்டு 'பிரவாகம்' இசைக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். ஜனனி ஹம்சினி, வாய்ப்பாட்டு கலைஞர். அஞ்சனி சீனிவாசன், வீணை வாசிப்பார். ரங்கப்பிரியா, வயலின் இசைக் கலைஞர். அஸ்வினி, மிருதங்கம் மற்றும் கொன்னக்கோல் வாசிப்பார்.
இதுதவிர, தேவைக்கேற்ப பெண் இசைக் கலைஞர்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு இசைக் கச்சேரிகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதிலும் இதுவரை சுமார் 300 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதில் கோயில் கச்சேரிகள், கல்யாணக் கச்சேரிகள், சபா கச்சேரிகள், மெல்லிசைக் கச்சேரிகள் போன்றவையும் அடங்கும். முழுக்க முழுக்க இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.
நீங்கள் வழங்கியிருக்கும் குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகள்?
மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை ஆர்.ஆர். சபா, பெங்களூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்ற இடங்களில் நடத்திய இசைக் கச்சேரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னை பாரத் கலாச்சாரில் நடந்த மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், திருச்சி மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியிலும் வழங்கிய கச்சேரிகள் என்றென்றும் மறக்க முடியாதவை.
நவராத்திரியை முன்னிட்டு உங்கள் குழு வழங்கிய நவதுர்கா ஸ்தோத்திரம் ரீல்ஸ் வைரலானது பற்றி?
பாட்டு, கஞ்சிரா, வீணை, வயிலின், மிருதங்கம் மற்றும் நடனம் மூலம் நவதுர்கா ஸ்தோத்திரத்தை நவராத்திரி ஒன்பது நாளும் தினந்தோறும் ஒன்றரை நிமிடங்களில் வழங்கியது பலரது பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. ஒவ்வொரு ஸ்தோத்திரத்தையும், வித்தியாசமாக, அதிகம் பயன்படுத்தப்படாத ரிஷபப்பிரியா, சுத்தசாவேரி, தவமுகாரி, சந்திர ஹஸ்தம், சித்ரசேனா போன்ற ராகங்களில் வழங்கினோம்.
ஸ்லோகம் மட்டும் சொல்லாமல் அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் வழங்கினோம். நவ தேவிகளையும் வழிபாடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் எடுத்துரைத்தோம். குறுகிய நேரத்தில் எல்லா தகவல்களையும் கொடுத்து, காதுக்கும் கண்களுக்கும் இனிமையான இசையையும், நடனத்தையும் வழங்கியது ரொம்பவும் சவாலான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
நடனக் கலைஞர் காவ்யா முரளிதரன் மிகச் சிறப்பான நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர்கள், ஒளிப்பதிவு செய்தவர்கள் என்று ஒவ்வொருவருமே மிகச் சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்திருந்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரும் பாராட்டி வருவது மிகப் பெரிய ஊக்குவிப்பாக உள்ளது.
பெண்கள் இசைக் குழுவை நடத்துவதில் உள்ள பிரச்னைகள் என்னென்ன?
எங்களுக்கு கச்சேரி வாய்ப்புகளை வழங்குபவர்கள் வழங்கும் சன்மானம் பல நேரங்களில் போதுமானதாக இருப்பதில்லை. ஆனால், அவர்களது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். எங்கள் குழுவுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை வழங்க,மேற்கத்திய இசைக் கருவிகளை வாசிக்கும் பெண் இசைக் கலைஞர்கள் அதிகம் இல்லை. பெண்கள் நடத்தும் இசைக் குழுவுக்கும், ஆண்கள் இசைக் குழுவுக்கும் இடையே சம்பளத்தில் கூட பெரிய அளவுக்கு வித்தியாசம் உள்ளது.
நாங்கள் இளம்பெண்களாக இருப்பதால், பாதுகாப்பு விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. கச்சேரிக்காக இரவில் வெளியூர் பயணம் செல்லும்போது, கச்சேரி ஏற்பாட்டாளர்கள் உரிய வாகன வசதிகளைச் செய்து தராமல் காலம் தாழ்த்துவதும் உண்டு. இப்படிப் பல பிரச்னைகள் இருந்தாலும், பெண்களாலும் இசைக் குழுவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.
உங்கள் இசைக் குழுவுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?
நாங்கள் சொந்தமாக இசையமைத்து தில்லானா ஒன்றை வெளியிட்டோம். அந்தப் பாடலை சீனியர் இசைக் கலைஞர்களான சுதா ரகுநாதன் மேடம், ஸ்வேதா மோகன், வயலின் இசைக் கலைஞர் கன்னியாகுமரி மேடம், எம்பார் கண்ணன் சார் உள்ளிட்ட பலரும் பாராட்டியதை மறக்கவே முடியாது.
கல்யாணக் கச்சேரிகளில் வாசித்தபோது உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்?
ஒரு கல்யாணக் கச்சேரியில் எங்கள் கச்சேரி முடிந்ததும் அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டிப் பாராட்டியதை மறக்க முடியாது. பொதுவாக எங்கள் கச்சேரிகளில், நாங்கள் இசையை வழங்கிக் கொண்டிருக்கும்போதே பலரும் எழுந்து உற்சாகமாக ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
அது எங்களுக்குப் பெரிதும் ஊக்கமளிக்கும். கோத்தகிரியில் நடந்த ஒரு கல்யாணக் கச்சேரியில், பழங்குடியினரின் இசையை வழங்கும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள். எங்கள் குழுவைச் சேர்ந்த பாடகி அந்தப் பாடலை சிரத்தையுடன் கற்றுக்கொண்டு வந்து கச்சேரியில் பாடி, பலரது பாராட்டையும் பெற்றார்.
இப்படிப் பல நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். டிரம்ஸ், பேஸ் கிடார் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் பெண்களைப் பார்ப்பது அரிது. எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்கள் அந்த இசைக் கருவிகளை வாசிக்கும்போது, பலரும் வியந்து பாராட்டுவது வழக்கம்.
வருங்காலத் திட்டம் என்ன?
எங்கள் குழுவில் உள்ள நான்கு பேருமே கர்நாடக சங்கீதத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்கள். ஒரு இசைக் கருவியை மட்டுமல்லாமல் பல இசைக் கருவிகளையும் வாசிக்கும் திறமை படைத்தவர்கள். எங்கள் கச்சேரிகளில் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், மெல்லிசையையும் வழங்கி வருகிறோம்.
இனிவரும் காலங்களில் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். பரத நாட்டியத்தில் பாரம்பரியமாக இருக்கும் மார்க்கம் நடன நிகழ்ச்சிகளுக்கு, எங்கள் இசைக் குழு சார்பில் புதுமையான முறையில் இசையமைத்து வழங்கும் திட்டமுள்ளது.
பன்முகத்திறமை வாய்ந்த பலர் உங்கள் இசைக் குழுவில் இருக்கிறார்களே... இசைக்கென எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது? எங்கள் குழுவில் உள்ளவர்கள் இசை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் திறமை வாய்ந்தவர்கள். வயலின் வாசிக்கும் ரங்கப்பிரியா, பல் மருத்துவராக இருக்கிறார்.
பாடகி ஜனனி, எம்.பி.ஏ. படித்துவிட்டு, பல மீடியாக்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனாலும், இசையின் மீதுள்ள ஆர்வத்தால், இசைக்கு முன்னுரிமை கொடுத்து 'பிரவாகம்' இசைக் குழுவை நடத்தி வருகிறோம். எங்கள் நேரத்தை இசைக்காக ஒதுக்கி, தினமும் பயிற்சி செய்து வருகிறோம்.
பெண்கள் மட்டுமே நடத்தும் இசைக் குழு என்பதால், பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் எங்களுக்கு எப்போதுமே மிகச்சிறந்த வரவேற்புக் கிடைத்து வருகிறது. எங்கள் குழுவைப் போல பல இசைக் குழுக்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.