பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
'அகண்டா 2: தாண்டவம்' உலகமெங்கும் 2025 டிசம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா, நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள், நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில் வீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
'துபை 24 எச் கார் ரேஸில்' 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3-ஆவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அஜித் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். 'இந்த வெற்றியின் மூலம், இந்தியாவின், தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார் அஜித்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தியின் அடுத்த தேர்வாக 'வா வாத்தியார்' படம் உருவாகி வருகிறது. நலன் குமாரசாமி எழுதி, இயக்கும் இப்படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படம் வரும் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, அது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கார்த்தியின் 26-ஆவது படமாக இது உருவாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய 'கூலி' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக ஓரளவு வசூலீட்டியது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் 'கும்கி 2' , ஒரு இளைஞன் மற்றும் யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் மதி.
'காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதியின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன என இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.
'மைனா', 'கும்கி 1', 'மான் கராத்தே', 'தர்மதுரை', 'பைரவா', 'தலைவன் தலைவி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றிவருமான எம். சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.