முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

சினிமா டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் (2026-29) ராதாரவி தலைமையிலான அணி போட்டியிட்டது.

Updated On : 1 மார்ச், 2026 at 4:17 AM
ராதாரவி
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:10 PM

சினிமா டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் (2026-29) ராதாரவி தலைமையிலான அணி போட்டியிட்டது. ஆனால், அந்த அணியை எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாத நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த ராதாரவி அணியைச் சேர்ந்த 23 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி தலைவராக ராதாரவி, பொதுச் செயலாளராக டி.என்.பி.கதிரவன், பொருளாளராக ஏ.ஷாஜிதா, துணைத் தலைவர்களாக துர்கா சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், கே.மாலா; இணைச்செயலாளர்களாக குமரன், முரளி, சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோன்று செயற்குழு உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பேசிய ராதாரவி, 'டப்பிங் யூனியன் வளர்ச்சிக்குத் தொடர்ந்து முழு மூச்சாகப் பாடுபடுவேன். சமரசமின்றியும், விருப்பு வெறுப்பு பார்க்காமலும் பதவி வகித்து பணி செய்வேன்' என்றார்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:10 PM
பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமெளிலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில், 'கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து, நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். 'வாரணாசி' மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.' எனத் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:10 PM
சூர்யா

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன், ' 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ்த் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல. நேரடியாக தமிழ்க் கலாசாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத்தான் இருக்கும்' என்று தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:10 PM

அண்மையில் திருவனந்தபுரத்தில் 70-ஆவது தென்னிந்திய விருது விழா நடைபெற்றறது. இந்த விருது விழாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதைப் பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

'இந்த விருதுதான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷுடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாகப் போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.' என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.