மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒரு வகையான பிரத்யேகச் சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது.
அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனி ரசனை வேண்டும். இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழுக்கு நிறைய வந்திருக்கின்றன.
காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்தக் குறையை தீர்க்க ஒரு கதை எழுதினேன். அதில் கொஞ்சம் திகில் பாணி திரை வடிவத்தைக் கொடுத்தேன்.
அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொடுப்பதில் நிறைய சவால். அதுதான் இந்தப் படம். நம்பிக்கையாகப் பேசுகிறார் சிற்பி எம். மாதேஷ். 'டம்ளர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
பேய்ப் படங்களின் சீசன் முடிந்த மாதிரி இருந்ததே...
பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக்கூடாது. லாஜிக் பார்க்கக்கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம்.
இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். 'இதற்கா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். 'பேய்ப்பட காமெடி' என்றொரு சுனாமி தமிழ் சினிமாவில் வீச ஆரம்பித்தது. 'முனி'யில் ஆரம்பித்தது இந்த சனி.
இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இது அப்படி இல்லாமல், கொஞ்சம் யோசிக்க வைக்கும் சினிமாவாகவும் இருக்கும்.
என்ன கதை?
வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாராத ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி சில மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள், அதை எதிர் கொள்கையில் அவர்கள் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. ஒரு மலைக் கிராமத்தில் நிராசைகளுடன் நின்று போன உயிர் சுற்றி வருகிறது. 15 வருடங்களுக்கு மேலாக வெளியே வராத அந்த அமானுஷ்ய சக்தி ஒரு கட்டத்தில் வெளியே வருகிறது.
அந்தச் சமயத்தில் அந்த மலைக் கிராமத்துக்கு சுற்றுலா சென்ற 15 பேர் அமானுஷ்ய சக்தியிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் கதி என்ன? அதிலிருந்து மீண்டார்களா? என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறேன். அந்தச் சுற்றுலாப் பயணிகளின் பங்களாவைச் சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன.
அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை நம்பிக்கையோடு எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை ஹாரர், க்ரைம், த்ரில்லர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறேன்.
நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதானே இங்கே முக்கியம்...
ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்தத் துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது?
அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.
இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும்.
ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்? அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும்.
நிறைய நடிகர்கள்... மலைக் கிராமத்து படப்பிடிப்பு...எப்படியான அனுபவம்?
சிங்கம் புலி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், அருள் ஜோதி, ரஞ்சன், சேரன்ராஜ், யோகி ராம், ஈரோடு விருமாண்டி, சேகர், 'நந்தன்' சுருதி, மதன் சத்தியநாதன், அனீஸ், கங்கா, அபர்ணா, இலக்கியா இப்படி படம் முழுக்க ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்கள்.
எல்லோரும் உறுத்தாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஏற்கெனவே மாடலிங், விளம்பரம் என வேலை தெரிந்த பெண்களை நடிக்க வைத்திருக்கிறேன். பாட்டு, கிளாமர் என்று சும்மா வந்து விட்டுப் போகாமல், அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது அந்தப் பெண்களுக்கு.
இதில் சில காதல் இடங்கள் இருக்கிறது. காதல் உணர்வுகள் அரும்புவது சகஜமே. காதல் மாதிரி மனசை சுத்தப்படுத்துவதும் கிடையாது. அஸ்மிதா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹாரர் பாணி கதைக்கு ஒளிப்பதிவும் இசையும் அத்தனை முக்கியம். அதை உணர்ந்து பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசைக்கு மினிஸ் தம்பான் பொறுப்பேற்றுள்ளார். சரியான திட்டமிடலுடன் ஒரு மலையில் கிராமம் போன்ற அரங்கை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட இருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.