ஞாயிறு கொண்டாட்டம்

கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்

சின்ன சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பது ஒன்லைன்.

அசோக்

சின்ன சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பது ஒன்லைன். ஒரு குற்றம், அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர்.

பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும் போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது 'போர்த் ஃப்ளோர்'. ஏற்கெனவே 'வைகை', 'தீர்க்கதரிசி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி. சின்ன இடைவெளிக்குப் பின் கதை சொல்ல வருகிறார்.

போர்த் ஃப்ளோர் என்ன சொல்கிறது?

ஹாலிவுட் பட இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் கனவு, கனவுக்குள் கனவு என்று கனவு உலகத்தின் நீட்சிகளை வைத்தே 'இன்செப்ஷன்' என்ற படத்தை இயக்கியிருப்பார். கிட்டத்தட்ட அதே மாதிரியான உத்தியோடு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன். ரசிகர்களுக்கு புது மிரட்சி கிடைக்கும். காதல், பொருளாதாரம், மாஃபியா, நிராகரிப்பு, காமெடி, உருக்கம், சைக்காலஜி, த்ரில்லர் என ஒரே படத்தில் ஆச்சர்யப்படுத்தும் திரைக்கதை.

ரஜினியைப் போல புகழ், பணத்தோடு இருக்க வேண்டும் என்பது மற்றவர்களின் கனவாக இருக்கும். எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்பதே ரஜினியின் கனவாக இருக்கும். அந்தக் கனவுகளின் கதையைத்தான் இதில் படமாக்கி இருக்கிறேன்.

தூக்கம் என்பது நம்மை நமக்குப் பிடித்த கனவு உலகத்துக்கு அழைத்துச்செல்லும் ஒரு மாத்திரையின் பெயர். நிலத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாஃபியா கும்பல்கள் உலகம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன. அது போன்று ஒரு மாஃபியா இந்தக் கதையில் இருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை கனவின் மூலமே தேடிப் பிடிப்பதுதான் கதை. போர்த் ஃப்ளோர் என்பது கதை நடக்கும் இடம்.

கதை சொல்லுவதில் சவால்கள் நிறைய இருந்திருக்குமே....

கனவுக்கும் நிஜத்துக்குமான உலகத்தை திரையில் கொண்டு வருவதில் சவால்கள் இருந்தன. அதை திரைக்கதையின் வாயிலாக சரியான புள்ளிக்குக் கொண்டு வந்திருக்கிறேன். எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விஷயங்களை மட்டுமல்ல; மக்களின் பிரச்னைகளையும், கடவுளின் கட்டளைகளையும் தீர்ப்புகளையும் கூட அரிய மனிதர்கள் அறிவார்கள். அப்படி ஓர் இடத்தில் ஆரம்பமாகும் புள்ளிதான் திரைக்கதை.

சில குற்றங்களை ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வருகிறது. இப்படியான காலகட்டத்தில் கதை நகருகிறது. தர்ம நியாயத்துக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, இறுதியில் மனம் திருத்தியது யாரை.... இந்த சமூகத்துக்குச் சொல்ல வந்த நீதி என்ன.... இதுதான் பரபர காட்சிகள். அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன. கதை சொல்லுவதை விட, அதைப் படமாக்குவதில் பல சவால்கள் இருந்தது உண்மைதான்.

எல்லாம் ஓ.கே.... ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன?

வாழ்க்கையின் ரகசியமே பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. உங்கள் கனவுகளைத் துரத்தி ஜெயிக்கும்போது, மதிப்புள்ள ஒரு வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையை, உங்கள் முன்மாதிரியை, உங்கள் வாழ்வின் அர்த்தத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதைவிட இனிமையான ஒரு விஷயம் உலகில் என்ன இருந்துவிட முடியும்? கனவுகளைத் துரத்தி ஜெயிக்க முனையும் போது உங்களுக்குள் அபார மன உறுதி பிறக்கும். அந்த மன உறுதி, நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை உங்கள் காலடியில் கொண்டுவந்து சமர்ப்பிக்கும்.

குழந்தைகளாக இருந்த போது நாம் கனவுகளையும் மாயாஜாலங்களையும் நேசித்தோம். நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், உங்கள் கனவை நிஜமாக்கும் மாயாஜாலத்தை நிகழ்த்த முடியும் என நம்புங்கள். இளமைத் துடிப்பும் வாழ்க்கை மீதான பிடிப்பும் தானாகக் கிடைத்துவிடும். உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்மறையான சம்பவங்கள் உங்களைப் பாதிக்காமல் காப்பாற்றுவது லட்சியக்

கனவுகளே. இப்படி ஒரு நம்பிக்கையை இந்தப் படம் உங்களுக்குக் கொண்டு வரும்.

ஆரி அர்ஜுன் எப்படி?

ஆரி அர்ஜுன் எதிர்பார்க்காத இடத்தில் இருப்பார். அதற்கென தனி லுக், மொழி, பாவனை எல்லாமே புதிதாக இருக்கும். அவர்தான் இந்தக் கதையை ரசிகர்களுக்கு கன்வே செய்யும் நபர். ஆனால், எதிர்பக்கத்தில் உள்ள யாருக்குமே இது தெரியாது. இதுதான் கதையின் ஆகப் பெரும் சுவாரஸ்யம்.

அவர் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில இடங்கள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேத்த மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சமானியனின் கதை இல்லை. இது ஒரே ஒரு மனிதனின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு.

ஆக்ஷன் வழிகிற சினிமா இல்லை. மனிதம் பேசுகிற ஒரு கதை. கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன். தலைவாசல் விஜய், தீப்ஸிகா, சுப்பிரமணிய சிவா, ஆதித்தியா கதிர் என எல்லோருமே ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்கள்தான். படத்தில் ஹீரோயின், காதல் என்ற வழக்கமான சம்பிரதாயங்கள் எல்லாம் கிடையாது. ஆனால், பாடல்கள் உண்டு. கலர், கறுப்பு-வெள்ளை என்று ஒரே திரையில் இரண்டு கதைகளைக் காட்டி, அதை சைக்காலஜிக்கல் த்ரில்லராக வார்த்து, யூகிக்க முடியாத ட்விஸ்ட் வைத்து, நடுநடுவே சிரிக்கவைத்து, யோசிக்கவைத்து, கடைசியில் கைத்தட்டவைக்கும் சினிமா ரசிகர்களுக்கான ஓர் அழகிய கனவு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைக்கதிர்

விடுகதைப் பாட்டு

தெரியுமா?

பிஞ்சுக் கைவண்ணம்

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT