FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மீனம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது..

மீன ராசி
பகிர்:

2026 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 26-ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2-ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவணைக்கும் மீன ராசி அன்பர்களே நீங்கள் இரக்கம் அதிகமுள்ளவர்கள். தாய் தந்தையரின் மேல் அதிக பற்றுள்ளவர்கள். திருமணம் செய்துகொடுக்கும் இடத்திலும் பெருமையோடு வாழ்வார்கள். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள்.

கிரகநிலை

26.05.2026 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் களத்திர ஸ்தானம் - தனது ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானம் - தனது ஒன்பதாம் பார்வையால் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

பலன்கள்

குருவின் ஐந்தாமிட மாற்றம் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புகளை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும்.

Advertisement

Advertisement

புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு.

இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது.

உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துகள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும்.

புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம். வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும்.

சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.

பூரட்டாதி - 4

இந்த பெயர்ச்சியால் நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

உத்திரட்டாதி

இந்த பெயர்ச்சியால் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள் .வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

ரேவதி

இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்

முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

summary

மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 | Meena Rasi Guru Peyarchi Palangal 2026

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments