சிறு திரைப்படங்களில், வித்தியாசமான கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படத் தயாரிப்பாளர்கள் படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இத்தகைய படங்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது. அரசியல் பின்னணி கொண்ட நிறுவனங்கள் மட்டுமே படத்தை வாங்கி வெளியிடும் நிலையில், எந்த பின் புலமும் இல்லாமல் சிறு படங்களின் வெளியீட்டுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் ஹரி உத்ரா.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஜென்டில் உமன், கெவி, தூக்கு துரை, குற்றம் புதிது உள்ளிட்ட தமிழ்ப் படங்களை வெளியீடு செய்து கவனம் ஈர்த்துள்ளது. 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45-க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது.
'திரைத்துறைக்கு வந்து 10 வருடங்கள் மேல் கடந்துவிட்டன. தினமும் நண்பர்கள் இயக்குநர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நமக்குப் பெரும் மகிழ்ச்சி தந்தாலும் இனம் புரியாத கவலையும் ஓர் ஓரமாக எட்டிப் பார்க்கிறது. பல்வேறு துறைகள் இருந்தாலும், திரைத்துறை என்று வரும் பொழுது அளப்பரியது. இந்தக் கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரது ஆசை அடங்கியுள்ளதை எண்ணும் பொழுது ஒரு கதையை நிராகரிப்பது ஒருவரின் திரைக் கனவை குறைந்தது 6 மாத காலம் தள்ளிப்போடும் செயலாகவே தோன்றும்.
ஆனால், இவ்வளவு போட்டியும் பொறாமையும் உள்ள தொழிலில் உச்சபட்ச திறன் மட்டுமே குறைந்தபட்ச அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வெற்றியைத் தரமுடியும். பலர் உங்களுக்கு என்ன மாதிரியான கதை வேண்டும் என்று கேட்பதுண்டு. அதற்கான ஒரே பதில், நன்றாக இருக்கும் எக்கதையும் சரி என்பதேயாகும்.
கடந்த வருடத்தில் நாங்கள் படித்த சுமார் 300 கதைகளில் 3 கதைகள் மட்டுமே எங்களுக்குப் பிடித்த கதையாக இருந்தது. சில சமயம் நமக்குப் பிடிக்காத கதை வேறு ஒருவருக்குப் பிடித்து விடும். அப்படி சில படங்கள் வந்து வெற்றி பெறுவதும் உண்டு. ஆக, நாம் மட்டுமே ஒரு நல்ல கதையை அங்கீகரிக்கும் திறன் உள்ளவர் என்ற வாதமும் முற்றிலும் இல்லை.
ஆனால், தமிழ் சினிமாவில் ஒவ்வோர் ஆண்டும் தயாராகி வெளியாகும் படங்களின் மொத்த வெற்றி சதவிகிதத்தைப் பார்த்தால் இன்னும் 5 சதவீத்தை சுற்றித்தான் இருக்கிறது. இந்த வெற்றி சதவீதம் என்னை என்றும் உறுத்திக் கொண்டே உள்ளது. இது ஏன் உயரக் கூடாது என்ற கேள்வி வரும் பொழுது எல்லாம் எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இங்கே பகிர முயல்கிறேன்.
உதவி இயக்குநர்களுக்கு (இளைய கதாசிரியர்கள்) டிஜிட்டல் யுகம் ஒரு வகையில் கடந்த கால கஷ்டங்களைக் குறைத்திருந்தாலும் முதல் பட வெற்றிக்குப் பின்தான் தாடி எடுப்பது முதல் வாகனம், வீடு, திருமணம், குழந்தை என பல விஷயங்கள் நடக்கிறது. இதைப் பார்க்கையில் கிபி, கிமு போன்று முதல் படத்துக்கு முன், பின் என்ற மந்திரத்தை உடைப்பதற்கான தருணம் வந்துவிட்டது என்று உரக்கச் சொல்லத் தோன்றுகிறது.
முதல் படம் வெளியாகும் வரை ஒருவருக்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் ஒருவகையில் அனுசரணையுடன் இருப்பார்கள். அதற்குப்பின் அவர் மேல் இருந்த அனுதாபமும், அனுசரணையும் பெரும்பாலும் மாறி ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பை தனக்காகவோ இன்னொருவருக்காகவோ திணிப்பார்கள். குறைந்தபட்சம் தன்னிடம் முன்பு போலவே நடந்துகொள்கிறாரா என்று இடைவிடாது பரீட்சித்துக்கொண்டாவது இருப்பார்கள். இதனால் அவர்கள் சந்தர்ப்பவாதிகளோ, தவறான எண்ணம் கொண்டவர்களோ, பாசமற்றவர்களோ அல்ல.
அவர்களும் அந்த இயக்குநர் போலவே முதல் படத்துக்குப்பிறகு வாழ்க்கை மொத்தமும் மாறிவிடும் என்ற பிம்பத்துடன் அவருடன் பயணித்திருப்பார்கள். இது வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற இருதரப்பினருக்கும் பொருந்தும். இந்தப் புது அழுத்தம் பெரும்பாலும் அந்த இயக்குநரை சிதைத்து விடுகிறது.
ஆக ஒரு இயக்குநர் தனது முதல் படத்துக்கு வாய்ப்பு தேடுவது மட்டுமல்லாமல் அதன் வெற்றி அல்லது தோல்விக்கு தன்னை முன்னரே தயார்படுத்திக் கொள்ளும் போதுதான் அவரது படைப்புகளையும் வாôழ்க்கையையும் வெகுகாலம் நிலையாக வைத்துக் கொள்ள முடியும்.
ஹாலிவுட்டில் மட்டும் 75 வயதில் இன்னும் எப்படி சிறப்பான படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பலரும் அடிக்கடி என்னிடம் குறைபட்டுக் கேட்பதுண்டு. அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி பேசினாலே மனக்கசப்போ, பகையோ ஏற்படும் என்பதால் பலரும் பேச தயங்குகிறார்கள்.
ஆனால், நாம் இருக்கும் துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற என் ஆர்வம், கோளாறு ஆனாலும் பரவாயில்லை என்றே இங்கே பதிவிடுகிறேன். அதுமட்டுமல்ல, சமீபத்தில் நிராகரிப்புக்கு ஆளாகி மனச்சிதைவு ஏற்பட்டு ரோட்டோரத்தில் ஏதோ எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு முன்னாள் உதவி இயக்குநரின் நிலையும் என்னை இதை பேசத் தூண்டியது'' என்கிறார் ஹரி உத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.