ஞாயிறு கொண்டாட்டம்

நவராத்திரியும் கொலுவும்!

உலகம் முழுவதும் நவராத்திரி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இல்லத்தில் கொலு வைத்தவர்கள் சிலரின் அனுபவங்கள் இங்கே...

தினமணி செய்திச் சேவை

பொ. ஜெயச்சந்திரன்

உலகம் முழுவதும் நவராத்திரி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இல்லத்தில் கொலு வைத்தவர்கள் சிலரின் அனுபவங்கள் இங்கே...

திவ்யா மணிகண்டபாரதி, துபை: ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தாண்டி வெற்றி அடைய சக்தி அவசியம். அதற்கான பூஜையே நவராத்திரி விழா. தைரியத்தின் அடையாளமான துர்கையையும், செல்வச் செழிப்பின் அடையாளமான லட்சுமியையும், அறிவுச் செல்வத்தின் அடையாளமான சரஸ்வதியையும் வழிபடும்போது, முழுமையான சக்தி கிடைக்கிறது.

சென்னை மயிலாப்பூர் எனது பூர்விகம். பள்ளி நாள்களில் எங்கள் வீட்டில் அம்மா கொலு வைக்கும்போது, நானும் அதற்கு உதவியாக இருப்பேன். தற்போதும் விடுமுறை நாள்களில் சென்னைக்கு வந்தால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பொம்மைக் கடைகளில் புதிதாக பொம்மைகள் வாங்காமல் செல்வது கிடையாது.

தற்போது வீட்டில் இடம் கொஞ்சம் குறைவு என்பதால், 4 படிகள் மட்டும் அமைத்து, பின்புறம் கோயில் கோபுரம் பதாகை வைத்து பொம்மைகளை அடுக்கி வைத்துள்ளேன். கர்நாடக சங்கீதம் முடித்துள்ளதால், இந்த ஒன்பது நாள்களும் மாலை நேரங்களில் முக்கியமான அம்பாள் துதி போன்ற பல்வேறு பாடல்களைப் பாடுவேன். கொலு அடுக்குவதற்கு என்னுடைய கணவரும், குழந்தையும் உதவி செய்தனர்.

சுமதி கனகசபாபதி, தரானா நடனப் பள்ளி ஆசிரியர், மலேசியா:

நான் சிறுவயது முதல் கல்லூரி வாழ்க்கை வரை இந்தியாவில் நவராத்திரி கொலு வைத்தேன். திருமணத்துக்குப் பின்னர் கொரியா நாட்டில் ஒரு வருடம் வசித்தேன். பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக, அங்கேயும் கொலு வைத்தேன். மலேசியாவில் ஒன்பது ஆண்டுகளாக கொலு வைத்து வருகிறேன். இந்த ஆண்டு மரப்பாச்சி பொம்மையில் பெருமாளுக்கு கிரீடம், அணிகலன்கள், அலங்காரம் செய்து வைத்துள்ளேன்.

7 படிகள் அமைத்து அதில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி, நவசக்திகள், அஷ்ட லட்சுமிகள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள், கண்ணன் கதைகள், கார்த்திகைப் பெண்கள், கயிலாயக் காட்சிகள், சஷ்டியப்த பூர்த்தி, திருமலை ஏழுமலையான் உண்டியல், கருடன், இறை உருவங்கள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்துள்ளேன்.

பொம்மைகள் தொடர்புடைய ஆன்மிக, புராணக் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்கிறேன். மாலை நேரங்களில் வீட்டுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கிறேன். எனது பரத நாட்டியக் குழுவில் உள்ள சுமார் 35 மாணவர்களை வைத்து முக்கிய கோயில்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து நடன நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.

சு.கிருஷ்ணவேணி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்:

ஐம்பது ஆண்டுகளாக எனது இல்லத்தில் கொலு வைத்து வருகிறேன். கணவர், மாமியார் இரண்டு பேரும் மறைவின்போது, இரு ஆண்டுகள் கொலு வைக்க முடியாத சூழ்நிலை உருவானது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக, புதிதாக பொம்மைகளை உருவாக்கி வருகிறேன்.

இந்த ஆண்டு வாராஹி அம்மனை தயார் செய்து, அதற்கு அணிகலன்கள் அணிவித்து, அலங்காரம் செய்தேன். சிவன் குடும்பம் காட்சியளிப்பது போல ஒரு பொம்மையை உருவாக்கி இருக்கிறேன். தானியங்கள் என்பவை சக்தி. அதைக் கொண்டு சுண்டல் செய்து வழங்குவது மரபு.

இதையே இன்றும் பின்பற்றுகிறோம். மாலையில் பெண்கள் சேர்ந்து ஸ்லோகங்கள் சொல்வோம், பாடல்கள் பாடுவோம். இதனால் மகிழ்ச்சியில் குதூகலமும் குடும்பத்தில் நிறைந்திருக்கும்.

ராஜலட்சுமி கோவிந்தன், மம்சாபுரம், விருதுநகர் மாவட்டம்:

நாங்கள் விவசாயக் குடும்பம். எனவே தானிய வகை, காய்கறி, விவசாயி மாட்டு வண்டியில் செல்லுதல், குளத்தில் நீராடல், நெல் அறுவடை செய்தல், குழுவாகச் சேர்ந்து கும்மியடித்தல் போன்ற பொம்மைகளை முதலில் அடுக்கி வைத்தேன். கடவுள் சிலைகள், விலங்குகள், பறவைகள், பீங்கான் பொம்மைகள், வியாபாரப் பொருள்கள் போன்றவற்றை எனது தோழிகள் அன்பளிப்பாக அளிக்கத் தொடங்கினர்.

அதனை அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே படிகளில் அடுக்கி வைப்பேன். தீபாவளி போல இல்லத்தில் நவராத்திரி நாள்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். இது அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழா, உறவுகளை மேம்படுத்தும் விழா, கலாசாரத்தைப் பாதுகாக்கும் விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை: கவிஞா் வைரமுத்து

SCROLL FOR NEXT