இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் யுவன். டிசம்பர் 13-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் அவரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அவர் பாரீஸ், மலேசியாவின் ஜோகூர் பாரு, துபாய் என பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார்.
முதலில் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் ஆயிரம் பேருக்கு யுவன் கையொப்பமிட்ட டி-ஷர்ட் வழங்கப்படும். மேலும் 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் இசையமைப்பாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் டிசம்பரில் திரைக்கு வருமென அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், வடிவுக்கரசி, மதூர் மிட்டல் எனப் பலரும் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், பேட்ச் ஒர்க் வேலைகள் இன்னும் சில நாட்கள் மீதமிருக்கின்றன.
தீபாவளிக்கு 'வா வாத்தியார்' டீசரையும், நவம்பரில் பேட்ச் ஒர்க் படப்பிடிப்புகளையும் முடித்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் 29 -ஆவது படமான 'மார்ஷல்' படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் நடந்து வருகிறது. 'டாணாக்காரன்' தமிழ் இயக்கும் இந்தப் படம் ஒரு பீரியட் ஃபிலிம். ராமேஸ்வரம் - இலங்கைக் கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை இது என்கிறார்கள்.
அவதூறு பரப்பும் யூ டியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசியிருந்தார் நடிகர் வடிவேலு. அவர் பேசியது குறித்து விஷால் தெரிவிக்கையில், 'சில நடிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என வடிவேலு அண்ணன் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த விடியோவைப் பார்ப்பவர்தான் அடுத்ததாக இன்னொரு காணொளியையும் போடுகிறார். அவர்களைத் திருத்த முடியாது. அவர்கள் எங்களை வைத்துச் சம்பாதிக்கிறார்கள். நாங்கள் சுயமாக சம்பாதிக்கிறோம். இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.
நேர்காணல் ஒன்றில் தனது நண்பர் ஒருவரின் இறப்பு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார் நடிகை அனுபமா. அதில், 'நான் என் நீண்ட நாள் நண்பருடன் சண்டை போட்டு விட்டு பல ஆண்டுகளாகப் பேசாமல் இருந்தேன்.ரொம்ப நாளுக்குப் பிறகு சமீபத்தில் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது. ஆனால், நான் என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த மெசேஜுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டேன்.
ஆனால், இரண்டு நாளுக்குப் பிறகு அவர் இறந்த செய்தி வந்தது. அவர் இறக்கும் முன் சண்டை போட்ட என்னிடம் பேசுவதற்கு முயற்சித்திருக்கிறார். ஆனால், நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். அது என் வாழ்நாளில் என்றும் என் மனதில் ஆறாத காயமாக இருக்கும். நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்று அன்றுதான் உணர்ந்தேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.