ஞாயிறு கொண்டாட்டம்

அசத்திய ஆவணப்பட இயக்குநர்...

நூற்றுக்கும் மேற்பட்ட புனைக்கதை அல்லாத ஆவணப் படங்களை இயக்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ். கிருஷ்ணசாமி, செய்திப்படங்களிலும் முத்திரை பதித்தவர்.

பிஸ்மி பரிணாமன்

நூற்றுக்கும் மேற்பட்ட புனைக்கதை அல்லாத ஆவணப் படங்களை இயக்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ். கிருஷ்ணசாமி, செய்திப்படங்களிலும் முத்திரை பதித்தவர். இந்தியாவின் அரசியல், கலாசார, நாகரிகப் பயணத்தை ஆவணப்படுத்துவதற்காக 60 ஆண்டுகளாகப் பங்களிப்பு செய்த அவருடைய படைப்புகள் விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றதுடன், சர்வதேசப் பார்வையாளர்களையும் ஈர்த்தது.

வரலாற்றுக்கும் ஆராய்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கிருஷ்ணசாமி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். 1963-இல் இந்தியா திரும்பியதும், 'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, அறிவார்ந்த செய்திப்படங்களைத் தயாரித்தார்.

'சிந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை' எனும் படம் இந்தியத் துணைக்கண்டத்தின் 5,000 ஆண்டு அரசியல், கலாசாரப் பரிணாம வளர்ச்சி குறித்து நான்கு மணிநேரம் ஓடும் செய்தித் திரைப்படமாகும். பின்னர், இது உலகளாவிய விநியோகத்துக்காக, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

'பயங்கரவாதத்துக்குப் பிறகு ஆயிரம் நாள்கள்' என்ற ஆவணப்படம் மூலம் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' (சீக்கியர்களின் பொற்கோயிலில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகள்) காலகட்டத்தின் பின்னணியை விளக்கியது. 'பாரடைஸ் ரீகெய்ன்ட்' மூலம் இலங்கை இன மோதல் பிரச்னைகளைக் குறித்தும் உணர்வுபூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் கிருஷ்ணசாமி அணுகியிருந்தார்.

'இந்தியன் இம்ப்ரின்ட்ஸ்', 'எ டிஃபரண்ட் பில்கிரிமேஜ்', 'டிராக்கிங் இந்தியன் ஃபுட்மார்க்ஸ்' போன்ற ஆவணப் படங்களால் இந்தியாவின் கலாசார, ஆன்மிகச் செல்வாக்கின் தாக்கத்தை விளக்கி, உலக மக்களின் கவனத்தை இந்தியா பக்கம் ஈர்த்தார். 'இந்தியன் இம்ப்ரின்ட்ஸ்' பின்னர் தூர்தர்ஷனில் 18 அத்தியாயங்கள் கொண்ட தொடராக ஒளிபரப்பப்பட்டது.

வரலாற்று ஆசிரியர் எரிக் பார்னெளவுடன் கிருஷ்ணசாமி இணைந்து, 'இந்தியன் ஃபிலிம்' என்ற புத்தகத்தையும் எழுதினார். இது 1963-இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தாலும், பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தாலும் வெளியிடப்பட்டது.

இவர் 2009-இல் பத்மஸ்ரீ விருது, டாக்டர் வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது, சர்வதேச அங்கீகாரங்களில் ஹவாயில் உள்ள 'வாட்டுமல்' அறக்கட்டளையின் ஹானர் சம்மஸ் விருது, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சர்வதேச திரைப்படம் மற்றும் வீடியோ விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றார்.

கிருஷ்ணசாமிவின் தந்தை இயக்குநர் சுப்ரமணியம் 1930-40-களில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர். சுமார் 20 படங்களை இயக்கியுள்ளார். தேசிய உணர்வுமிக்க 'தியாகபூமி' (1939) திரைப்படம் சுப்ரமணியமணியம் தயாரிப்பு ஆகும். ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தடை செய்யப்பட்டது.

இன்று முன்னணி திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கும் அனிருத் (ரவிச்சந்திரன்) இவர்களது குடும்பத்தினரின் கொள்ளுப் பேரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT