சைபீரியாவில் ஒரு தீவுக்கோட்டை!
தெற்கு சைபீரியாவின் துவா பிராந்தியத்தில் டெரே-கோல் ஏரிக்கு நடுவே அதிசயம் நிறைந்துள்ள 'தீவுக்கோட்டை' என்கிற 'போ-பாஜின்', மங்கோலிய எல்லைக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 மீ. உயரத்தில் மேற்கு சயான் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
தெற்கு சைபீரியாவின் துவா பிராந்தியத்தில் டெரே-கோல் ஏரிக்கு நடுவே அதிசயம் நிறைந்துள்ள 'தீவுக்கோட்டை' என்கிற 'போ-பாஜின்', மங்கோலிய எல்லைக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 மீ. உயரத்தில் மேற்கு சயான் மலைத் தொடரில் அமைந்துள்ளது. கடுமையான பனியிலும் குளிரிலும், மலைத் தொடர்களுக்கு நடுவே இவ்வளவு நேர்த்தியானதொரு கட்டமைப்பு எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இப்போதும்கூட மர்மமாக இருக்கிறது.
1,300 ஆண்டுகளுக்கு முன்பே, கலை அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் எல்லைகள் கிடையாது என்பதற்குச் சாட்சியாக, இந்தியாவின் பண்டைய பல்கலைக்கழகங்கள் கற்பித்த 'சில்பஸ்தான வித்யா', இன்றும் போ-பாஜின் கட்டுமான மிச்சங்களாகக் காணக் கிடக்கின்றன. பாரதத்தின் இந்தத் தொன்மை வாய்ந்த கட்டடக்கலைப் பாரம்பரியம், புவியியல் எல்லைகளைக் கடந்து, உலகப்பண்பாட்டு வரலாற்றில் அசைக்க முடியாத முத்திரையாகத் திகழ்கிறது.
நவீனத் தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்திலேயே மிகத் துல்லியமான செவ்வக வடிவமைப்பில் (215-க்கு 162 மீட்டர்) இந்தக் கோட்டை வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வின் கார்பன் காலகணிப்புப்படி, 777-ஆம் ஆண்டில் உய்குர் ககானேட் காலத்தில் எழுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இது கோட்டையா, மடாலயமா, அரண்மனையா என்பது குறித்து நீண்ட விவாதம் நிலவி வந்தது. 2020- ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுவொரு 'மணிக்கேய மடாலயம்' என்ற ஆய்வு முடிவை வெளியிட்டனர்.
வியப்பூட்டும் உண்மைகள்:
மணிக்கேய மதத்தைத் தழுவிய உய்குர் பேரரசின் கலைச்செழுமையில் காணப்பட்டாலும், பாரதத்தின் தொன்மை வாய்ந்த கட்டுமான நுட்பங்களும் நுணுக்கங்களும் இதில் காணப்படுகிறது. மங்கோலியா, மத்திய ஆசியாவை 'உத்தர குரு' பிராந்தியம் என பண்டைய சம்ஸ்கிருத ஏடுகள் குறிப்பிடுகின்றன. 8-ஆம் நூற்றாண்டில் பெளத்தம், மணிக்கேயம் மத்திய ஆசியா முழுவதும் பரவியிருந்தது. அக்காலத்தில் உய்குர் மக்கள் வணிகர்களாகவும் அறிஞர்களாகவும் வாழ்ந்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், விக்ரமஷீலா பல்கலைக்கழகங்களில் கட்டடக்கலை, வானியல் நூல்களைப் பயின்று, அவற்றைச் சொந்த மொழியில் மொழிபெயர்த்துச் சென்றனர்.
பண்டைய பாரதப் பல்கலைக்கழகங்கள் வெறும் தத்துவக் கல்வியை மட்டும் போதிக்காது ஆயக்கலைகள் அறுபத்து நான்கின் உறைவிடமாகவும் திகழ்ந்தன. அவற்றில் 'சில்பஸ்தான வித்யா' என்பது மிக முக்கியப் பாடமாக இருந்தது.
7-ஆம் நூற்றாண்டில் பாரதத்துக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், தனது 'சையுக்கி' பயணக் குறிப்பில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய செல்வாக்கைப் பதிவு செய்துள்ளார். நாளந்தாவில் பயின்ற பத்தாயிரம் மாணவர்களில் பெரும் பகுதியினர் மங்கோலியா, மத்திய ஆசியா, திபெத் போன்ற தூர தேசங்களிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் இந்தியக் கட்டடக் கலை இலக்கணத்தால் பெறப்படுகின்ற நல்ல ஆற்றல்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை ஆழமாகக் கற்றுச் சென்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெளத்தத் துறவிகள், வணிகர்கள், அறிஞர்கள் பட்டுப்பாதை, காஷ்மீர் மலைக் கணவாய்கள் வழியாகப் பயணித்தபோது, அவர்களுக்கு இடையே ஆழமான கலாசாரச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
'மத்திய ஆசியாவில் காணப்படும் பெளத்த மடாலயங்கள் இந்தியச் சிற்பிகளாலும் கட்டடக்கலை வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டவை' என்ற யுவான் சுவாங்கின் கூற்று, இந்தக் கலைப்பரிமாற்றத்துக்கு மிகச் சிறந்த சான்றாகிறது.
இந்தக் கோட்டையின் வடிவமைப்பு வெறும் பாதுகாப்பு அரண் மட்டுமல்ல; அது இறைவனை மையப்படுத்தி, அவரைச் சுற்றி துறவிகள் தங்கி வாழ்வதற்கான ஒரு புனித வாழ்விடமாக இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தட்ச
சீலத்தின் கட்டட அமைப்புகள் 'சதுர வடிவ' தியான அறைகளைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இதுவே பின்னாளில் 'போ-பாஜின்' போன்ற 'மண்டல' வடிவ கட்டுமானங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்று ஆய்வர்கள் குறிப்பிடுகின்றனர்.
காஞ்சியில் 7-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பல்லவப் பேரரசின் கைலாசநாதர் கோயிலின் 'திருமாளிகைப் பத்தி' தரைத்தள அமைப்புடன் போ-பாஜின் கட்டுமானம் அமைந்திருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் தென்னகத்தில் உருவெடுத்த பிரம்மாண்டமான ஆலயங்களின் வடிவமைப்புடனும் போ-பாஜின் மடாலய வளாகத்தின் வடிவமைப்பு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இதற்கு தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தனித்துவம் வாய்க்கப் பெற்ற கோயில்களின் தரைத்தள வடிவமைப்பை மிகச் சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
போ-பாஜினின் உள்புறம் கருவறை என்று சொல்லக் கூடிய வழிபாட்டு அறை அதனைச் சுற்றி சமச்சீரான பல சிறிய அறைகளும் பிரிக்கப்பட்டுள்ளது. இது வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள 'பதவிந்நியாசம்' அல்லது மண்டல அமைப்பைப் பிரதிபலிக்கிறது. மையத்தில் இறைவனின் பேரருள் வியாபித்திருக்க, அதைச் சூழ்ந்து பௌத்த துறவிகள் தவம் புரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாஸ்து நிபுணர் பத்மபூஷன் முனைவர் வை. கணபதி ஸ்தபதி, 'வாஸ்து மண்டலம்' என்பது பிரபஞ்ச ஆற்றலை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் கொண்டு சேர்க்கும் மையம் எனக் குறிப்பிடுகிறார். போ-பாஜின் 'ஆற்றல் மையத்தில்' தியானம் செய்பவர்களுக்கு மன வலிமையும் உடல்நலமும் கிடைப்பதே இதன் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அது பௌத்தத் துறவிகளுக்கும், அரசக் குடும்பத்தினருக்கும்கூட பொருந்தும்தானே!
இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் 'தி ஐஸ்லாந்து எனிஜிமா' (2007-2008) எக்ஸிவேஷன் ரிப்போர்ட் - ஆண்ட்ரே பானின், இகோர் அர்ஜான்ட்சேவ் ரஷ்யத் தொல்பொருள் ஆய்வாளர்கள் போ-பாஜின் ஒரு தற்காப்புக் கோட்டை அல்ல, அது ஒரு 'மடாலயம்' என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மங்கோலியர்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக அறியப்பட்டாலும், அவர்கள் சூரியன், விஷ்ணு, கருடனை தீவிரமாக வழிபடக் கூடியவர்கள். இங்கிருந்து சுமார் இருபது மைல் தொலைவில் மங்கோலிய எல்லை அமைந்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு, கோட்டை வளாகமானது வைணவ வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
துவா மொழியில் 'போ-பாஜின்' எனும் பதத்துக்கு களிமண் கட்டுமான வளாகம் என்ற பொருள். அப்படிப் பார்க்கும்போது, ஏரியின் நடுவே மரம், களிமண், செங்கற்களால் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு பழங்காலத்திய முறையில் மண்ணை திமித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திமித்த மண் கட்டுமானக் கோயில்கள் நாட்டிலும் உள்ளன.
கட்டடக்கலை நுணுக்கங்களின்படி, ஒரு கட்டுமானத்தைச் சுற்றி நீர் சூழ்ந்திருப்பது (ஜல வாஸ்து) மங்களகரமானதாகக் கருதப்படுவதோடு, அது ஒரு வலிமையான 'இயற்கை அரணாகவும்' செயல்படுகிறது. இத்தகைய அஸ்திவாரங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட ஈரப் பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்போதுதான் அவற்றின் பிணைப்பு வலுவடையும் என்பது கட்டடக்கலை கோட்பாடு. நம் நாட்டுப் பழங்கோயில்களையும் கோட்டைகளையும் சுற்றி அகழிகளும் நீர்நிலைகளும் அமைக்கப்பட்டிருப்பதன் அறிவியல் பின்னணியும் இதுவேயாகும். அதேபோன்று, சைபீரியாவின் ஏரி நடுவே அமைந்துள்ள போ-பாஜின் கட்டுமானத்திலும் இதே நுட்பம் எதிரொலிப்பது வியப்பிற்குரியது.
கட்டடக்கலை என்பது வெறும் கல் மற்றும் மண்ணால் ஆனது அல்ல, அது கணிதம் மற்றும் வடிவியலின் சங்கமம் என்பார் இந்திய மரபு கட்டடக்கலை மேதை டாக்டர் வை.
கணபதி ஸ்தபதி. போ-பாஜினின் ஒவ்வொரு துகளும் இந்த விதியையே பறைசாற்றுகிறது.