சென்னையின் ஆன்மா
இயற்கை எழில் சூழ்ந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரமுடைய தலைநகராகவும் உள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரமுடைய தலைநகராகவும் உள்ளது. அதன் ஆரம்பக் காலத் தோற்றமும், வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க வரலாற்றையும், வியக்கவைக்கும் சம்பவங்களையும் கொண்டது.
கடலோரக் கிராமமாக, எளியவர்களின் வாழ்விடமாக இருந்த 'சென்னாபட்டினம்', அந்நியர்களின் வருகைக்குப் பின்னர் நகராட்சி, மாநகராட்சி என அடுத்தடுத்து தனது தரநிலையை உயர்த்திக் கொண்டது. 'சென்னை மண்ணில் வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி...கோடியாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் வகித்தவர்களின் ஆன்மாக்கள்...' இன்றும் ஆவண வடிவங்களில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.
சென்னையின் தொன்மை அடையாளமான ரிப்பன் மாளிகைக்கு இதயம் போல் அதன் ஆவணக் காப்பகப் பிரிவு உள்ளது. 1688-ஆம் ஆண்டு சுமார் 15 கி.மீ. பரப்பளவிலான பகுதியே சென்னை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரியான நந்தேனியர் ஹிக்கின்சன் என்பவர் முதல் மேயராக இருந்துள்ளார்.
ரிப்பன் மாளிகைக்கு மாநகராட்சி அலுவலகம் வருவதுக்கு முன்னதாக சிறிய வீட்டில்தான் சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையானது 1913-இல் ஜி.எஸ்.டி.ஹாரீஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, லோகநாத முதலியாரால் சுமார் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. மாளிகையின் நுழைவுப் பகுதியிலிருந்து பிரதான கட்டடத்தின் பின்பகுதியில் வலதுபுறம் (தற்போதைய கலைஞர் மாளிகையின்) ஓரத்தில் அமைந்துள்ளது இந்த ஆவணக் காப்பகம்.
இந்த மாநகரின் வெறும் வரலாறாக மட்டுமின்றி, சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றின் அறியப்படாத பல விதிகளையும், விசித்திர சம்பவங்களையும் ஆவணமாகப் பாதுகாத்து வருகிறது. அவற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை ஆய்வுக்கு உள்படுத்தினால் முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் வரலாறு புதிய நோக்கில் தெரியவரும்.
ஆவணக் காப்பக அமைப்பு: 150 அடி நீளத்திலும், 25 அடி அகலத்திலான அறையின் சிறிய நுழைவு வாயில், பக்கவாட்டில் பெரிய ஜன்னல்கள் எனக் காற்றோட்ட வசதியுடன் உள்ளது. அறையின் மேற்புறம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ள பெரிய இரும்புத் தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தரைத்தளம் சிமென்ட்டாலும், மாடி போன்ற 2 மேல்தளங்கள் முழுமையாக இரும்புக் கம்பிப் பலகைத் தளங்களாகவும் உள்ளன.
ஒவ்வொரு தளத்திலும் ஒரு பக்கத்தில் 13 இரும்பு அடுக்ககங்கள் (ரேக்குகள்) உள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் ஏழரை அடி அகலம் 10 அடி உயரம் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அடுக்ககங்களில் சுமார் ஓரடி இடைவெளியில் 4 புத்தகம் போல அடுக்கப்படும் ஆவணங்கள் வைப்புப் பகுதிகள் உள்ளன.
என்னென்ன? 113 ஆண்டுகளாக உள்ள இந்தக் காப்பகத்தில் 1700 -ஆம் ஆண்டுகளில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரையிலான மாநகரின் மிக முக்கியமான சுமார் 5 கோடி ஆவணங்கள் தாள்கள் வடிவிலான கோப்புகளாக உள்ளன. மாநகர்மன்றத் தீர்மானங்கள் புத்தக வடிவில் பாதுகாக்கப்படுகின்றன.
பழமையான சுமார் 3 கோடி ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கை 2014 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டும், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இரும்பாலான மேற்புற 2 தளங்களில் மாநகராட்சித் தீர்மானங்களும், கட்டட வரைபடம், அனுமதிக் கோப்புகளும், மாநகராட்சி சட்ட விதிமுறைகளுக்கான ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
மாநகராட்சி ஊழியர்களின் சேவைப் பதிவேடுகள், பிறப்பு- இறப்பு சான்றுகள், மாநகராட்சியின் கூட்ட தீர்மானங்கள் இங்குள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையம், ஹிக்கின் பாதம்ஸ், எல்.ஐ.சி. கட்டடம் உள்ளிட்ட மிக முக்கிய கட்டடங்களுக்கான வரைபட அனுமதிகள் உள்ளன. அத்துடன் காந்தியடிகள், ஜவாஹர்லால் நேரு போன்ற முக்கியப் பிரமுகர்களின் வருகை பற்றிய குறிப்புகளும்கூட உள்ளன.
மாநகராட்சித் தலைவராக 1887-ஆம் ஆண்டு இருந்த மோரே காலத்தில்தான் கட்டப்பட்ட கட்டடங்கள், அமைக்கப்பட்டுள்ள சாலைகள், அதற்கான வரவு- செலவு கணக்கு, அனுமதி பெற்ற குறிப்புக்கான ஆவணங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன.
1921-ஆம் ஆண்டின் மிக முக்கிய ஆவணமாக மகாகவி பாரதியின் மரணப் பதிவு நோட்டு உள்ளது. அதன் மூலமே செப். 11-இல் அவர் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பாரதியின் வயது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஆகிய விவரங்களுடன், இறப்பை பதிவு செய்த சி.விஸ்வநாதன் அவரது சகோதரர் எனக் குறிப்பிட்ட விவரமும் இடம் பெற்றுள்ளது.
அன்றைய தினம் பாரதியின் மரண விவரம் அந்தப் பக்கத்தின் 10 -ஆம் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மரண விவரம் கருப்பு நிற மையால் உள்ளன. இதற்கு முன்னும் பின்னும் அகால மரணமடைந்தவர்களது பெயர் சிவப்பு மையால் எழுதப்பட்டுள்ளன. அப்போது கூர்மையான நிப் மூலம் மையைத் தொட்டு எழுதும் முறையில் எழுத்துகள் நேர்த்தியாக தெளிவாக உள்ளன. எழுதும்போது இருந்த அதே நிலையிலே இன்றும் உள்ளது.
1947 ஆகஸ்ட் 20 -இல் மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம் ஒன்றில், ஜவாஹர்லால் நேரு, மூதறிஞர் ராஜாஜி, சரோஜினி தேவி உள்ளிட்டோர் வருகைக்காக ரூ.2 ஆயிரம் செலவழிக்க அனுமதித்த தீர்மானத்தின் குறிப்புகள் காணப்படுகின்றன.
சுதந்திரத்துக்குப் பின்னர், 1960 -ஆம் ஆண்டுக்குப் பிறகே மாநகர்மன்றத் தீர்மானங்கள் முழுமையாக தமிழில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 1968 -இல் இந்திய சாலைகள் மாநாட்டுக்கு மாநகராட்சிப் பொறியாளர் செல்வதற்கும், ரிப்பன் கட்டட காவலாளிகள் ஊதியத்தை ரூ.5-இல் இருந்து ரூ.10 ஆக உயர்த்துவதற்குமான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் மரணப் பதிவு ஆவணம் சிவப்பு மையாலும், முன்னாள் முதல்வர் காமராஜரின் மரணம் ஊதா நிற மையாலும் எழுதப்பட்டுள்ளன.
வியக்க வைக்கும்...: ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த ஆவணக்காப்பகத்தில் அக்கால முறையிலான மின்விளக்கு வசதிகள், சேதப்படுத்த முடியாத வகையிலும் இரும்பாலான அடுக்ககங்கள் இப்போதும் வியக்கும் வகையில் உள்ளது.
ஆவணங்களைப் பாதுகாக்க கடுக்காய், வசம்பு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனின் ஆலோசனைப்படி, அறையானது நேர்த்தியாகத் தினமும் தூசி உறிஞ்சும் சாதனங்களால் தூய்மைப்படுத்தப்படுகிறது. 2000 -ஆம் ஆண்டுக்குப் பிறகான விவரங்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் கணினி முறையிலே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.