மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: அறிவார்ந்த நீதியே...
தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி' வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா? றை
தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி' வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?
றைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இவ்வுலகில் இன்பமாக வாழவேண்டும் என்பதே ஆன்றோர் கருத்து. ஒரு நாட்டை ஆளும் மன்னனுடைய ஆட்சியிலும் இது நிகழவேண்டும். காரணம், மன்னனை இறைவனோடு ஒப்பிடுவது நமது மரபு. மனுநீதிச் சோழன் தன் மண்ணில் வாழும் உயிர்களை எல்லாம் தன் கண்களைப் போலவும், தன் உயிரைப் போலவும் பாதுகாத்து வந்தான் என்றும், பழைய நீதி நூலின்படி ஆட்சிசெய்து, மக்களையும் உயிர்களையும் காத்து வந்தான் என்றும், அதனாலேயே "மனுநீதிச் சோழன்' என்ற பெயர் பெற்றான் என்றும் சேக்கிழார் கூறியுள்ளார்.
""அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை'' (குறள்-315)
என்ற குறளுக்கேற்ப அரசாட்சி செய்துவந்த மனுநீதிச் சோழன், திருக்குறளுக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கியுள்ளான் என்பது தெளிவு.
""முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்'' (குறள்-388)
அதாவது, நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான் என்பது வள்ளுவர் வாக்கு.
சேக்கிழார் பெருமான், தாம் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் (பெரியபுராணம்), திருநகரச் சிறப்பு என்ற தலைப்பில் 36 செய்யுள்களில் மனுநீதிச் சோழனின் நீதிதவறாத அரசாட்சியை விவரித்துள்ளார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அருட்பிரகாச வள்ளலார், இம் மன்னனின் மாண்பைப் போற்றும் வகையில், "மனுமுறை கண்ட வாசகம்' என்ற தலைப்பில் ஓர் அரிய உரைநடை நூலை எழுதியுள்ளார்.
""வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்''
என்று தன் நாட்டின் நீதிச் சிறப்பை எடுத்துக்கூறி, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள் கண்ணகி.
""குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்'' (குறள்-549)
என்ற குறள் வழி, குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழில்; அது பழி அன்று என்கிறார் வள்ளுவர்.
மனுநீதிச் சோழன் தன் மகனை தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியதும், தானே கொன்றதும் அறிவார்ந்த நீதியே எனக் குறள்வழி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.