முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய விவரங்கள் தெரியாத, சராசரி சாமானிய இலக்கிய ஆர்வலர்களில் நானும் ஒருவன், அவ்வளவே. அதனால், நவீன இலக்கிய வட்டாரங்களில் சிலாகித்துப் பேசப்படும் இலக்கியப் பத்திரிகைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் இல்லை.
÷நவீன இலக்கியத்தின் போக்குகளைப் புரிந்துகொள்ள முடியாமல், செவ்விலக்கியங்களையும், சிலம்பு, கம்ப காவியம், மணிமேகலை போன்ற காப்பியங்களையும் ஓரளவுக்கு சமய இலக்கியங்களையும், நவீன இலக்கியம் என்று சொன்னால் புதினங்கள், புதுக் கவிதைகளையும் ரசிக்கத் தெரிந்த என்னைப் போன்றவர்களின் இலக்கிய தாகத்தைத் தீர்க்க ஓர் இலக்கியப் பத்திரிகை இருந்தாக வேண்டும். "கண்ணதாசன்', "தென்றல்', "தீபம்', "சுபமங்களா' போன்ற இதழ்கள் நின்றுவிட்ட பிறகும் ஓரளவுக்கு இந்தக் குறையைப் போக்கித் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது "கணையாழி' மட்டும்தான்.
÷நிறுத்திவிடப் போகிறோம், கொடுத்துவிடப் போகிறோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி என்னைப் போன்றவர்களை பயமுறுத்திய முனைவர் ம. இராஜேந்திரன் துணிந்து ஒரு முடிவெடுத்து விட்டார். "கணையாழி' இதழ் இனி தொடர்ந்து வெளிவரும். நின்று விடாது. அவரே நடத்தத் தீர்மானித்துவிட்டார்.
÷அதுமட்டுமல்ல. இதற்கு முன்னால் வந்த "கணையாழி' இதழ்களிலிருந்து, எல்லா விஷயங்களிலும் மாறுபட்ட ஒரு "கணையாழி' வெளிவரத் தொடங்கி இருக்கிறது. அற்புதமான வடிவமைப்பு. கதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும், ஓவியங்களும், அடடா, இதுவரை வந்ததில்லை இப்படி ஓர் இலக்கிய இதழ் என்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதழ் அழகுக்காகத் தமிழ் அலைக்கு விருது கொடுக்க வேண்டும். பக்கத்துக்குப் பக்கம் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
÷உள்ளடக்கம் பற்றி நான் எதுவுமே சொல்லத் தயாராக இல்லை, சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்!
÷"தினமணி'யின் முன்னாள் ஆசிரியர் கஸ்தூரிரங்கனால் நிறுவப்பட்ட "கணையாழி' தமிழ் இலக்கியத்தின் அடையாளம். இது எனது கருத்து மட்டுமல்ல. என்னைப் போன்ற பலரது கருத்தும் இதுதான். அந்த அடையாளம் அடமானம் போய்விடக் கூடாது என்று நான் பயந்ததில் தவறென்ன இருக்க முடியும்?
÷"கணையாழி'க்கான வாழ்நாள் சந்தா வெறும் 5,000 ரூபாய்தான். காசோலையில் கையொப்பம் இட்டுத் தபாலில் சேர்க்கச் சொல்லிவிட்டேன்! நீங்கள்?
****************
÷"கணையாழி' இதழ் பற்றிக் குறிப்பிட்ட கையோடு, அடுத்த செய்தி. "கணையாழி' இதழில் 1999-ஆம் ஆண்டில் தி.க.சி. எழுதி வந்த கட்டுரைகளை, கவிஞர் முத்துக்குமார் "காலத்தின் குரல்' என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். இதற்கு முன்னால், "தி.க.சி. நேர்காணல்கள்' என்கிற தொகுப்பிற்காகக் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இந்தக் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி கிடைத்ததாகவும், பிறகு புதுக்கோட்டை "ஞானாலயா' ஆய்வு நூலகத்தின் உதவியுடன் எல்லா கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றதாகவும் தன்னுரையில் குறிப்பிடுகிறார் முத்துக்குமார்.
÷நம்மிடையே வாழும் பத்திரிகை உலக ஜாம்பவான் தி.க.சி. அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் தகுதி அனுபவத்தாலும், பங்களிப்பாலும் நம்மில் யாருக்கும் கிடையாது என்பது எனது தேர்ந்த முடிவு. இலக்கிய உலகின் கிரியா ஊக்கியாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். நிஜமாகவே அவரது கருத்துகள் காலத்தின் குரல்தான்.
÷கல்கி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, "சரஸ்வதி' விஜயபாஸ்கரன், "தினமணி' டி.எஸ். சொக்கலிங்கம், கவிஞர் கே.சி.எம். அருணாசலம், சிட்டி, வல்லிக்கண்ணன்,
சுந்தர ராமசாமி என்று இலக்கிய உலக முன்னோடிகள் பலருடனும் உலவும் உணர்வைத் தந்தது "காலத்தின் குரல்' தொகுப்பு.
÷காலத்தின் குரல், காலாகாலமாகக் கேட்டுக் கொண்டே இருக்கப் போகும் ஓர் இலக்கியவாதியின் குரல்!
****************
÷நான் ஜோதிடம் கற்றுக் கொண்டதன் பின்னணி மிகவும் வேடிக்கையானது. என் சகோதரியின் திருமணத்திற்கு முன்பே எங்கள் தந்தையார் காலமாகி விட்டார். சகோதரியின் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க ஒரு மலையாள ஜோதிடரிடம் நான் ஜாதகங்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஒவ்வொரு தடவை அவரிடம் போகும்போதும் தட்சிணை கொடுத்தாக வேண்டும்.
÷தட்சிணைதான் கொடுக்கிறோம், கொஞ்சம் ஜோசியமும் கற்றுக் கொண்டால், வேறு தொழில் எதுவும் அமையாவிட்டால் ஜாதகப் பொருத்தம் பார்த்தாவது பிழைத்துக் கொள்ளலாமே என்கிற குதர்க்க புத்திதான் என்னை ஜோசியம் பற்றித் தெரிந்து கொள்ளத் தூண்டியது. கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசி, திசாபுக்தி என்று அடிப்படை ஜோதிட இலக்கணங்களைத் தெரிந்து கொண்டேனே தவிர, நன்றாக ஜாதகம் பார்க்கத் தெரிந்து கொண்டேனா என்றால் இல்லை.
÷எனக்கு ஜாதகத்தில் இருக்கும் நம்பிக்கையை விடக் கடவுளிடம் இருக்கும் நம்பிக்கைதான் அதிகம். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி' என்கிற மணிவாசகப் பெருமானின் சிவபுராணச் சிந்தனையாளன் யான். அதேநேரத்தில், ஜோதிட சாஸ்திரம் பொய் என்றோ, புரட்டு என்றோ, முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது என்றோ கருதவும் நான் தயாராக இல்லை.
÷நடிகர் ராஜேஷ், அவர் எழுதிய "ஜோதிடம் - புரியாத புதிர்' என்கிற புத்தகத்தை நேரில் வந்து தந்தார். "ராணி' வார இதழில் வெளிவந்த அவரது கட்டுரைத் தொடரின் தொகுப்பு என்றும் குறிப்பிட்டார்.
÷நடிகர் ராஜேஷ் ஆரம்பத்தில் பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட பகுத்தறிவுவாதி. பிறகு மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டுப் பொதுவுடமைவாதியாக வலம் வந்தவர். இவரால் எப்படி ஜோதிட சாஸ்திரத்தில் ஈடுபட முடிந்தது?
÷""ஜோதிடம் பொய் என்று கூறுவதும், அதை முற்றிலும் மறுதலிப்பதும்தான் பகுத்தறிவு என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு என்றால் ஒன்றைப் பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து அதன்பின் ஒரு முடிவுக்கு வருவது என்று பொருள். அப்படி எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், ஜோதிடம் ஹம்பக், மோசடி, ஏமாற்றுவித்தை என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் சொல்வது எப்படிப் பகுத்தறிவாக இருக்க முடியும்?''
என்கிற கேள்விதான் அவரை ஜோதிடம் பற்றி ஆராய வைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
÷ஜோதிடம் பற்றி அவரைக் குடைந்தெடுத்த ஏறத்தாழ நூறு கேள்விகளை அவர் பட்டியலிடுகிறார். அந்தக் கேள்விகள் அனைத்தும் நாமும் அடிக்கடி கேட்கும் கேள்விகள். அதிலிருந்து தொடங்குகிறது அவரது ஜோதிட ஆராய்ச்சி. பல நிஜ வாழ்க்கை சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். சுவாரஸ்யமாக இருக்கின்றன. பிறப்பால் கிறிஸ்தவரான ராஜேஷ், பைபிளிலிருந்தும் ஏசுநாதரின் வாழ்க்கையிலிருந்தும் ஆங்காங்கே குறிப்பிடும் வாசகங்களும், நிகழ்வுகளும் வியப்பிலாழ்த்துகின்றன.
÷"நான் அறிந்த உண்மைகளை, என் அனுபவங்களை எனக்குப் பின் வருபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த நூல் வடிவில் ஆவணப்படுத்தி இருக்கிறேன்' என்று குறிப்பிடுகிறார் நடிகர் ராஜேஷ்.
÷ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், நம்பிக்கை இல்லாதவர்களும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிக்க வேண்டும். அவரவர் பகுத்தறிவுக்கு ஏற்ப ஜோதிடம் சரி என்றோ, தவறு என்றோ அதற்குப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம்.
÷நான் என்ன தீர்மானித்தேன் என்றுதானே கேட்கப் போகிறீர்கள்? "இந்த உலகில் நடப்பவை யாவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை' என்கிற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கூற்றை வழிமொழிபவன் நான்!
****************
÷இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மங்களக்குடி நா.கலையரசன் என்பவர் அனுப்பியிருந்த "நெடுங்கனவு' என்கிற கவிதைத் தொகுப்பு, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் இந்தப் புத்தகம் மட்டும் முந்திரிக் கொட்டைபோல வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. பிடித்து இழுத்தேன். பூகம்பத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிவதுபோலப் புத்தகக் குவியல் சரிந்தது. "நெடுங்கனவு' மட்டும் எனது கையில் பத்திரமாக...
÷"சாட்டையடிக்காரன்' என்று ஒரு கவிதை. அதைப் படித்தபோது எனது முதுகில் நானும் சாட்டையால் அடித்துக் கொண்ட உணர்வு. தோழா, நீ ஜெயித்து விட்டாய்!
தாளமிடும் தாரம்
கர்ணமடிக்கும் தனயன்
மந்தையில் மண்டியிடும்
மாறாத வாழ்க்கை
இதையெல்லாம்
மாற்றிடாத அரசுகளை
மாற்றாமல் போனதற்காக
சந்தையில் நின்று
தண்டனை தருகிறான்
தனக்குத்தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.