தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கிறது அரசியல் கட்சிகள், நடத்திய பரப்புரைக் கூட்டங்கள், செய்த செலவுகள், பின்பற்றிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், காப்பாற்றிய மனித உரிமைகள், வளர்த்த சமூக நல்லிணக்கச் சூழல், பணம் பெறாமல் வாக்களிக்க மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்; பார்த்துக் கொண்டிருந்தோம். பார்வையாளர்களாக இருந்தோம்.
நாம் செய்தித்தாளைப் படிப்பதில்லை (Reading); பார்க்கிறோம். தொலைக்காட்சியை-திரைப்படத்தைக் கவனிப்பதில்லை(Watching); பார்க்கிறோம்: தலைவர்களைக்கூட மேடைகளில் பார்க்கிறோம்: நாட்டு நடப்புகளையும் பார்க்கிறோமே தவிர, கவனிக்கிறோமா? எல்லாவற்றிற்கும் பார்வையாளராக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமோ!
தமிழில் பார்த்தல், கவனித்தல், நோக்குதல் என்று பல சொற்கள் இருக்கின்றன. எந்தக் கருத்தும் இன்றி போகிற போக்கில் பார்த்துக்கொண்டு போவது வேறு; கருத்துடன் கவனித்தல் வேறு; ஒரு நோக்கத்துடன் பார்த்து கவனிக்கும் நோக்கு வேறு.
"அப்சர்வர்' எனும் சொல், கணினியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தகவல் பெறுகிறது; தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கதைமாந்தராக இருக்கிறது; இசையில் ஒரு பாடலாக இருக்கிறது; இங்கிலாந்திலும் இலங்கையிலும் செய்தித்தாளாக இருக்கிறது; அரசியலில் விதிமுறைகள் மீறாமல் தேர்தல் நடைபெற உதவுகிறவராக இருக்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் நியமித்து அனுப்பிய அப்சர்வர்கள் பார்வையாளர்கள் இல்லை. இவர்களை ஊடகங்கள் பார்வையாளர்கள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் தவறுகள் நடக்கிறதா என்பதை உற்று நோக்கி, ஆய்ந்து தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பவர்கள்.
வாசகர்கள் "அப்சர்வர்' என்பதற்குத் தந்துள்ள தமிழ்ச் சொற்கள்:
கா.மு.சிதம்பரம் - புரிநோக்கம்
எஸ் சுரேஷ் - கண்காணிக்கும் அதிகாரி
அ.கருப்பையா - சட்ட நடைமுறைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பவர்
ப.கோபி பச்சமுத்து - நுண்காட்சியர்
டி.வி.கிருஷ்ணமூர்த்தி - கவனிப்பவர் / கவனிக்கப்படுபவர்
சோலை.கருப்பையா - கருத்துரைப்பாளர்
செ. சத்தியசீலன், செ.நாராயணசாமி, என்.ஆர். சத்தியமூர்த்தி - நோக்கர்
அ.கற்பூரபூபதி - ஆழ்ந்து கவனிப்பவர் / விமர்சகர்
முனைவர் க.அன்பழகன் - கருத்தாளர் உற்றறிவாளர்
முனைவர் பா. ஜம்புலிங்கம் - நுண்ணோக்காளர்
கோ.மன்றவாணன் - கூர்நோக்கர் ""இரு நோக்கு இவள் உண்கண் உள'' என்று காதலியின் பார்வையில் உள்ள நோக்கங்களை வள்ளுவர் கூறுகிறார்.
""அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'' என்று இராமனும் சீதையும் பார்த்துக்கொண்ட நோக்கத்தைக் கம்பர் குறிப்பிடுகிறார்.
எனவே, அப்சர்வர் என்பதற்கு நோக்கர் என்று சொல்ல நினைத்தால், தமிழ் அகராதியில், நோக்கருக்குக் கழைக்கூத்தர் என்றும் பொருள் இருக்கிறது. எனவே, பார்ப்பவர்களைப் பார்வையாளர் என்று அழைப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பார்த்து, கவனித்து நோக்கும் அப்சர்வரைத் தமிழில் நோக்காளர் என்று சொல்லலாம்.
Observer - நோக்காளர்
அடுத்த வாரத் தேடலுக்கான சொல் - Risk
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.