தாங்கும் நிலைதான் தகுதியைத் தீர்மானிக்கிறது. நொய்யரிசி கொதி பொறுப்பதில்லை. வேர்களை மட்டும் நம்பி இருக்காமல் விழுதுகளையும் இறக்கி ஆலமரம் தாங்குநிலையை வளர்த்துக் கொள்கிறது. புயலும் மழையும் ஆலமரத்தைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை.
அகழ்வாரைத் தாங்கும் நிலம், அதன் தாங்குநிலையையும் தகுதிநிலையையும் காட்டுகிறது. நிலத்தின் தாங்குநிலை அறியாமல் மேலெழும் கட்டடங்களின் தகுதிநிலை விசாரணைக்கு உள்ளாகிறது.
மனிதர்களுக்கும் தாங்குநிலைதான் தகுதிநிலையாக இருக்கிறது. வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் தாங்குநிலையின் தகுதி குறைகிறது. நூறை ஆறாக்குவதும் ஆறை நூறாக்குவதும் அவரவர் தாங்குநிலையையும் தகுதிநிலையையும் காட்டிக் கொடுக்கின்றன.
""ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை'' (478) என்றார் வள்ளுவர். வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்தாவிடில் கடனில் மூழ்க வேண்டியிருக்கும் கலங்க வேண்டியிருக்கும்; இல்லாதவனை இல்லாளும் வெறுப்பாள் என்றால், மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஆகவே, தமது தாங்குதிறன் அறிந்து வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொள்பவர்களின் தகுதிநிலைக்குப் பங்கம் வருவதில்லை. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் செலவு செய்யத் தூண்டுகின்றன. வரவுக்கான வாயில்கள் குறைவு. செலவுக்கான தூண்டல்கள் அதிகம். வாங்கவும் கொடுக்கவும் நமது வருமானமே காரணமாக வேண்டும். இல்லையேல் மானம் போய்விடும் என்பதைச் சொல்லத்தான் வருமானத்தில் "மானம்' இருக்கிறது; செலவீனத்தில் "ஈனம்' இருக்கிறது போலும்.
அதனால் வாங்குவதற்கு முன்பும் கொடுப்பதற்கு முன்பும் தாங்கும் திறனை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே எதையும் ஏற்பதற்கும் வழங்குவதற்குமான தகுதிநிலையைத் தருகிறது.
புதிய வீடு அல்லது வண்டி வாங்குவதற்கு முன்பு தனது AFFORDABILITY பற்றி யோசிக்க வைக்கிறது. வங்கிக் கடனுக்கும் நமது AFFORDABILITY விசாரணைக்கு உள்ளாகிறது.
AFFORDABILITY எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களாக, ஜனநேசன், ப.இரா.இராச அம்சன், என்.ஆர். சத்தியமூர்த்தி, செ. நாராயணசாமி, கோ. மன்றவாணன், வெ. ஆனந்தகிருஷ்ணன், அ.கற்பூரபூபதி, கு.கோப்பெருந்தேவி, டி.வி. கிருஷ்ணசாமி, பழ.கவிதா சிவமணி, சி.இராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ள தமிழாக்கங்கள் பின்வருமாறு:
வாங்கும் திராணி, கொடுக்கும் திராணி, எதிர்கொள்ளும் திறன், கட்டுப்படியான, வருவாய்க்கேற்ற, பொருத்தப்பாடு, இணைவினை, எதிர்பார்ப்புக்கேற்ற, கைக்கு அடக்கமான, அளிதிறன், கொடுதிறன், இடுதிறன், ஏற்புத்திறன், ஆற்றுத்திறன், இடுவலி(மை), கொடுவலி(மை), அளிவலி(மை), ஒல்லும்வகை, இயல்புடைமை, ஏற்புடைமை, வாய்ப்பமைவு, நயம், நயப்பு, மலிவு, ஏந்து, தாங்குமை, தாங்குகை, ஏலுதல், இயலல்(அ) இயலுதல், வசதிவாய்ப்பு, தாங்கியல்பு, வாங்கியல்பு, தகுநிலை, கையுறுதல், கைசேரல், கையடைவு, கைவிலை, விலைநயம், இயன்றளவு, இயல்திறன், உதவும் தன்மை, வாய்ப்பளித்தல், வளப்படுத்தும் ஆற்றல், உருவாக்கும் வல்லமை, ஆக்குதல், வாங்கும் வசதி, கொடுக்கும் நிலை, இயன்ற உதவி, உதவும் நிலை, ஒல்லும் வகை, ஒல்லும் வாய்ப்பு, வழங்கும் நிலை, திறமையான பங்களிப்பு, வலிமைத்திறன், பகிர்ந்தளித்தல், கொடுதிறன், திறனளி, வாங்குதிறன், தாங்குதிறன், இயன்மை.
AFFORDABILITY, வாங்குவதிலும் கொடுப்பதிலும் இருக்கிறது என்பதால் இரண்டுக்கும் பொதுவான சொல் வேண்டும். அது ஒருவரது இயலாமையைச் சொல்லாமால் இயலும் நிலையைக் குறிக்கிறது என்பதால், திராணி, திறன், வலிமை, தகுதி என்று சொல்ல முடியவில்லை. எனவே, கோ. மன்றவாணன் குறிப்பிட்டிருக்கும் தகுநிலை, வாங்குவதற்கும் கொடுப்பதற்கும், ஏற்பதற்கும் வழங்குவதற்கும் பொருத்தமாக இருக்கிறது. தாங்குநிலை வளர, தகுநிலையும் வளரும்.
தற்போது அதற்கான தகுநிலை இல்லை என்றும், என் தகுநிலை இதை ஏற்கவும் வழங்கவும் வாங்கவும் கொடுக்கவும் அனுமதிக்கவில்லை என்றும் சொல்வதற்கு இத் தமிழாக்கம் தகுதிநிலை உடையதாக இருக்கிறது.
AFFORDABILITY - தகுநிலை
அடுத்தவாரத் தேடல் - BUSY
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.