தமிழ்மணி

சொல் புதிது - 14

உழைப்பு வேறு பிழைப்பு வேறு.

முனைவர் ம. இராசேந்திரன்

உழைப்பு வேறு பிழைப்பு வேறு.

மனம் விரும்பும் வாழ்க்கைக்கு உழைப்பு வேண்டும்; உயிர் பிழைக்கும் வாழ்க்கைக்குப் பிழைப்பு போதும். உயிர் காக்கும் உணர்வில், எல்லா உயிரும் பிறப்பொக்கும்; மனம் விரும்பும் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதில் உயிரினங்களின் சிறப்பு வேறுபடும்.

பறவைகளும் விலங்குகளும் கிடைப்பதைக்கொண்டு உயிர் காக்கின்றன. மனிதர்கள் தேவையானவற்றை உற்பத்தி செய்துகொண்டு உயிர் வாழ்கிறார்கள்.

தட்பவெப்ப மாற்றங்களில் தப்பிப் பிழைக்க விலங்குகளும் பறவைகளும் வேறு இடம் போகின்றன. மனிதர்கள் இருக்கும் இடச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்கிறார்கள் அல்லது தாம் வாழும் வசதிக்கு ஏற்ப சூழலை மாற்றிக் கொள்கிறார்கள்.

பனிமண்டலங்களிலும் பாலைவனங்களிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், பனிமண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட பறவையோ விலங்கோ பாலைவனத்தில் இருப்பதில்லை; மனிதர்கள் இருக்கிறார்கள்.

உயிர் பிழைக்கவேண்டி உணவு தேடுதலும் தப்பிக்க வேண்டித் தாக்குவதுமான நடைமுறைகள் எல்லா உயிரினத்திற்கும் பொதுப் பண்புகளாக இருக்கின்றன.

ஆனால், மனிதர்கள் தங்களுக்கான உணவை வேட்டையாடுவதிலிருந்து மட்டும் பெறுவதை விட்டுவிட்டு, உற்பத்தி செய்துபெறவும் தாக்குதல் இன்றியே இணக்கமாக வாழ்வதன்வழியே தற்காத்துக் கொள்ளவும் அறிந்திருக்கிறார்கள்.

தட்பவெப்ப நிலைக்கேற்ப உணவுபெறுவதிலும் உயிர்காத்துக்கொள்வதிலும் மேற்கொண்ட முயற்சிகளால் தாக்குப் பிடித்த உயிரினங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அப்படித் தகவமைத்துக் கொள்ளாதவை மறைந்து போயிருக்கின்றன.

அருகில் இருக்கிறவர்களோடு எல்லாம் நாம் வாழ்வதாகப் பொருள் இல்லை: பேசி உறவாடி, இணைந்து செயற்படுகிறவர்களோடுதான் வாழ்வதாகப் பொருள். இருப்பதைக் காப்பாற்றிக்கொள்வது பிழைப்பு என்றால், விரும்பியதை ஏற்படுத்திக் கொள்வது வாழ்க்கை எனலாம்.

Survival என்பதற்கு வாசகர்கள் கூறியுள்ள தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு:

முனைவர் பா. ஜம்புலிங்கம் - பிழைத்தல், பிழைப்பு, இருப்பு, இருத்தல், எஞ்சியிருத்தல், வாழ்வு, உய்தல், தொடர்வாழ்வு.

கோ.மன்றவாணன் - எஞ்சுதல், எஞ்சியிருப்பு, எஞ்சியிருத்தல், எஞ்சிவாழ்தல், உய்வு, உய்தல், தாக்குண்டுய்தல், தப்பிப் பிழைத்தல், உயிர்தப்புகை, உயிர்பிழைத்தல், மீள்வாழ்வு, மீண்டுவாழ்தல் தப்பிவாழ்தல், ஈடேற்றம், கடைத்தேற்றம்.

ப.இராச.அம்சன் - நிலைத்திருத்தல், உய்வு, மரணமிலாப் பெருவாழ்வு, நீடுநிலவல், அழியாது நிற்றல்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - பிழைத்திருத்தல், நிலைத்து நிற்றல், தடைதாங்கி நிற்றல், நிலைத்தல், உயிர்பிழைத்தல், சாகாதிருத்தல், மறையாதிருத்தல்.

இரா.நரேந்திரகுமார் - நிலைபெறுதிறன்

அ.கற்பூரபூபதி - மாளாது உயிர்வாழ்தல், தப்பிப் பிழைத்தல், எஞ்சிவாழ்தல், உளதாயிருத்தல்.

செ. சத்தியசீலன் - தொடர் இருப்புநிலைப்பு, இறந்தழியாநிலை, வழிமரபெச்சம்.

எழில் சோம. பொன்னுசாமி - உய்வு, எஞ்சிவாழ்தல்.

டி.வி.கிருஷ்ணசாமி - உயிர் நீடிப்பு, பிழைத்திருத்தல்.

பேராசிரியர் க. அன்பழகன் - வாழ்வுயிர்த்தன்மை, உயிர்த்திருத்தல், நீடுலாவுதல், இருப்புணர்தல்.

இரா. தீத்தாரப்பன் - நீடூழி வாழும்வகை

கா.மு.சிதம்பரம் - நிலைவாழ் தகவமைவு

எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே வாழ்வதோ, சகித்துக்கொண்டே வாழ்வதோ, எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டே வாழ்வதோ வாழ்க்கையாக இல்லை. பகை உணர்வுடன் கூட்டுறவும் வென்றவர் தோற்றவர்களிடம் காட்டும் இணக்கமும் தகவமைதலுமே இன்றைக்குத் தேவைப்படும் வாழ்க்கை முறைகளாக இருக்கின்றன. இவற்றிற்கிடையே தன் இருப்பைக் காப்பாற்றிக்கொண்டு பிழைக்க மேற்கொள்ளும் நிலைப்பாடே Survival என்று சொல்லலாம். எனவே, Survival என்பதைப் "பிழைத்தல்' என்று சொல்லலாம். பிழைத்தல், பிழை என்பதையும் பிழைப்பதற்கானது என்பதையும் குறிப்பாகச் சொல்வதாகவும் கருதலாம்.

பிழைத்தல் பொருட்டு செய்யப்படுகிறது என்றும் பிழைத்தலியல் கோட்பாடு என்றும் பயன்படுத்தலாம்.

Survival - பிழைத்தல்

அடுத்தவாரத் தேடல் - Real Estate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT