தமிழ்மணி

சொல் புதிது - 7

ஜனநாயகக் கடமை வாக்களிப்பது. முன்பெல்லாம் வாக்குச்சீட்டு இருந்தது. வாக்குச் சீட்டை அவரவர்க்கான வண்ணப் பெட்டியில் போடும் முறை இருந்தது. அதன்பின் சின்னத்தில் முத்திரை குத்திப் பெட்டிக்குள் போட்டோம். அப்போதெல்லாம் வாக்கினைப் போட முடிந்தது.

முனைவர் ம. இராசேந்திரன்

ஜனநாயகக் கடமை வாக்களிப்பது. முன்பெல்லாம் வாக்குச்சீட்டு இருந்தது. வாக்குச் சீட்டை அவரவர்க்கான வண்ணப் பெட்டியில் போடும் முறை இருந்தது. அதன்பின் சின்னத்தில் முத்திரை குத்திப் பெட்டிக்குள் போட்டோம். அப்போதெல்லாம் வாக்கினைப் போட முடிந்தது. இப்போது வாக்கு, போட முடியாது. பெட்டியும் இல்லை; வாக்குச் சீட்டும் இல்லை. மின்னணு வாக்குக் கருவியில் பொத்தானைத்தான் அழுத்த வேண்டும். ஆகவே வாக்களிக்கிறோம் என்று சொல்லலாம். ஆனாலும் இப்போதும் ஓட்டுப் போடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தொடர் வண்டி வழியில் கைகாட்டி மரங்கள் இருக்கும்; வண்டி வரப்போவதைத் தெரிவிக்க, கைகாட்டி இறங்கும். கைகாட்டி இறங்கியதை விழுந்தது என்று சொன்னோம்; இப்போதும் சாலையில் சிக்னல் விழுந்து விட்டது என்றே சொல்கிறோம். முன்பு தொலைபேசியில் பேசி முடித்த பின் "சரி வைக்கட்டுமா' என்று சொல்லி உரையாடலை முடித்தோம். இப்போது செல்பேசியிலும் பேசி முடித்ததும் "வைக்கட்டுமா' என்று கேட்கிறார்கள். புதிய பழக்கத்திற்கான சொல் புழக்கத்திற்குவர சில நாள்களாகும்.

முதல் முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களின் பட்டியலின் இறுதியில் சஞபஅ (சர்ய் ஞச் பட்ங் அக்ஷர்ஸ்ங்) இடம் பெற்றது. அனைத்துத் தொகுதிகளிலும் இடம்பெற்றது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு சிக்கல்கள் அதற்கு இல்லை. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற நடைமுறை வந்திருக்கிறது.

வாக்குச் சீட்டில் முத்திரை போடும் முறை இருந்தபோது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள் வாக்குச் சாவடிக்கு வராமல் இருந்தார்கள்; அல்லது வந்து தமது வாக்கினைச் செல்லாத வாக்காக்கிப் போட்டார்கள். மக்கள் ஆட்சிமுறையில் நம்பிக்கையுடன் வாக்களிக்கும் உரிமையைச் செல்லாத வாக்குப் போடுவதன் வழியும் சிலர் காப்பாற்றி வந்தார்கள்.

ஆனால் 2009-இல் அறிமுகமான வாக்குப் பதிவுக் கருவியில் செல்லாத வாக்களிக்கும் வாய்ப்பில்லை. வேண்டுமா? வேண்டாமா? என்ற விருப்புரிமைக்கு வாக்குப் பதிவுக்

கருவியில் இடம் இல்லை. இப்படி ஒரு வாய்ப்பினை வழங்கத் தேர்தல் ஆணையம் முன் வந்தபோதெல்லாம் அரசு இடம் தரவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 2013- இல் அளித்த தீர்ப்பினால் நோட்டா இப்போது கிடைத்திருக்கிறது. இதைத் தமிழில் இப்படிச் சொல்லலாம் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர்:

செ.நாராயணசாமி - தகவிலர்

கா.அருண், டி.வி.கிருஷ்ணசாமி - விருப்பம் இல்லை

எஸ்.சுரேஷ், ஆர். ராஜதுரை - எவருக்கும் இல்லை

சி.இராமச்சந்திரன் - எவருமில்லை / எதுவுமல்ல

இரா. நரேந்திர குமார் - ஏற்புடையோர் இலர்

கோ.மன்றவாணன், பா.ஜம்புலிங்கம் - எவரும் இலர்

அ.கற்பூரபூபதி - ஒதுக்குதல் வாய்ப்பு

ஏ. இரமணன், சோ.முத்துமாணிக்கம் - மேற்கண்ட எதுவும் இல்லை

கா.மு. சிதம்பரம் - இலக்காய்குறி

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைக் கவனமுடன் நிறுத்த நோட்டா வாக்கு செல்வாக்கு செலுத்தும்தான். ஆனாலும் கூட, மேனாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்கிறார்: ""நோட்டா வாக்குகள் எண்ணப்படும்; ஆனால் தேர்தல் முடிவைப் பாதிக்காது. மொத்த வாக்குகள் 100 என்றால் 90 வாக்குகள் நோட்டாவுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் மீதியுள்ள பத்து வாக்குகளில் எந்த வேட்பாளர்

அதிகம் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.''

 2010 -2012-இல் ஆணையராக இருந்த குரோஷி சொல்கிறார்: ""நூறு வாக்குகளில் 99 வாக்குகள் நோட்டா பெற்றாலும் மீதியுள்ள ஒரு வாக்கினைப் பெற்றவர் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார். நோட்டா வாக்குகள் செல்லாத வாக்குகளாகவே கருதப்படும்.''

நோட்டாவுக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை,தேர்தல் முடிவின் இறுதி அறிவிப்பில் இடம்பெறுமாம். ஆனால் தேர்தல் முடிவை மாற்றாதாம். போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் வேண்டாம் என்று அளிக்கிற வாக்குகள் வெற்றி, தோல்விக்கும் வேண்டாத வாக்குகளாகவே இருக்கின்றன. எனவே, நோட்டா வாக்குகளைப் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் யாரும் வேண்டாம் என்று குறிப்பிடுகிற வேண்டா வாக்குகள் என்று சொல்லலாம்.

ஆனால், கா.மு.சிதம்பரம் கூறியிருப்பது போல, தேர்தலில் மட்டும் இல்லாமல் தேர்வுகளிலும் நோட்டா பயன்படுகிறது. தேர்வில் மேற்கண்டவை வினாவிற்கு வேண்டா விடைகள் என்றும், தேர்தலில் வேண்டா வாக்குகள் என்றும் அமைத்துக் கொள்ளலாம். எனவே, Non Of The Above என்கிற ஆங்கிலச் சொற்களில் முதலெழுத்துச் சேர்க்கையான "நோட்டா' என்பதைத் தமிழில் "வேண்டா' என்றே சொல்லலாம்.

NOTA - வேண்டா

அடுத்த வாரத் தேடல் -  Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT