மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-ஆம் ஆண்டு நிறுவிய பெருமைக்குரியவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். இவரோடு இணைந்து அச்சங்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவர் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரராக இருந்த மாமன்னர் பாஸ்கர சேதுபதி. இன்று வரை தமிழ்மொழி தழைத்தோங்கி வளர்ந்து கொண்டிருப்பதற்கு இவ்விருவரும்தான் முக்கிய காரணம் என்று கூறலாம்.
தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய பிறகு அதன் மண்டல பூஜை நாளன்று அவைக்களப் புலவராக இருந்த ரா.ராகவையங்காரை முத்துப் பல்லக்கில் அமர வைத்து, மன்னரே சுமந்து கொண்டு மதுரையை வலம் வந்த பெருமைக்குரியவர்.
தனது வாழ்நாள் முழுவதும் அந்தத் தமிழ்ப் புலவரை சுமக்க நான்கு ஆட்களை சம்பளத்துக்கு நியமித்ததுடன் புலவரின் ஜீவனத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.635 (அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.10 மட்டுமே) அரண்மனைக் கஜானாவிலிருந்து அவரே எடுத்துக் கொள்ளலாம் என சாசனம் மூலம் உத்தரவும் பிறப்பித்தார் மன்னர் பாஸ்கர சேதுபதி.
மன்னரின் பள்ளித் தோழரான திருப்புல்லாணி சீனிவாச ஐயங்காரின் குரல் வண்டின் ரீங்காரத்தைப் போலவே இருந்ததால், அவரை திருவையாற்றுக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைத்து, தியாகராஜ சுவாமிகளின் சீடரான பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் இசை பயில வைத்த பெருமையும் மன்னரையே சேரும். அவரே பின்னர் பூச்சி சீனிவாச ஐயங்கார் என உலகப் புகழ் பெற்றார்.பிற்காலத்தில் அவரையே இராமநாதபுரம் சமஸ்தானத்தின் வித்வானாகவும் ஆக்கி அழகு பார்த்ததுடன் அவர் மூலமாக ஏராளமான தில்லானாக்களும், ஜாவாலிகளும் உருவாக்கப்பட்டன. சங்கீத கலாநிதி என்று புகழ் பெற்ற அரியக்குடி ராமனுஜ ஐயங்கார் போன்றவர்களையும் உருவாக்கினார். இராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் மகா.வைத்தியநாதைய்யர் ராகம் பாட, பட்டணம் சுப்பிரமணிய ஐயர் தாளம் போட, குன்றக்குடி கிருஷ்ணய்யர் பல்லவி பாட எனப் பல்வேறு வழிகளில் தமிழ் தழைத் தோங்கி வளர்ந்து, மடை திறந்த வெள்ளம் போல ஓடியிருக்கிறது.
தமிழ்த் தாகத்திலேயே மன்னரின் உயிர் பிரிந்த வரலாறு: மன்னர் பாஸ்கர சேதுபதியின் முதுகில் ராஜபிளவை ஏற்பட்ட காரணத்தால், 1903- ஆம் ஆண்டு அவர் ஓய்வெடுப்பதற்காக திருவாடுதுறை ஆதீன மடத்தின் கிளையான நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மடத்திலே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடல் வலியால் மன்னர் சிரமப்படுவதை அறிந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், மன்னரைத் தேடிவந்து அருகில் அமர்ந்து அற்புதமான தமிழ்ப் பாடல்களைப் பாடினார். அப்பாடல்களை ரசித்து, தனது கழுத்தில் அணிந்திருந்த நவகண்டி மாலையைப் பரிசாக வழங்க முடிவு செய்தார். அப்போது, புலவரான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் தனது சிரத்தை தாழ்த்திட, 5 நிமிடங்களாகியும் மாலை விழாமல் மன்னரின் கைகளிலேயே இருந்ததாம். இதை நிமிர்ந்து பார்த்த புலவரோ, மன்னரின் உயிர் பிரிந்திருப்பதைக் கண்டு அலறி துடிதுடித்துப் போனாராம்.
உயிர் போகும் நிலையிலும் தமிழை வளர்த்த அந்த மாமன்னர் பாஸ்கர சேதுபதியின் உடலை ஆங்கில அரசு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலிருந்து மதுரைக்கு ரயிலில் கொண்டு வந்தது. பின்னர் மதுரையிலிருந்து இராமேசுவரத்திற்கு முதல் முதலாக ஒரே ஒரு ரயில் பெட்டியில் அவரது உடலை மட்டும் வைத்து 7 மணி நேரத்தில் இராமநாதபுரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மதுரை -இராமேசுவரம் ரயில் பாதையில் முதல் முதலாக தமிழுக்காக தன்னையே தியாகம் செய்த அந்த மாமன்னரின் உடல் தான் இராமநாதபுரம் வந்திருக்கிறது. மாமன்னரின் இறுதி அஞ்சலியை ஆங்கிலேய அரசு மன்னரின் மூலமாக தமிழுக்கும் செய்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.