நாட்டுப் பெயர்
சங்கப் புலவர்கள் பழங்கால இந்தியாவை "நாவலந் தண்பொழில்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.
""மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல் /
நாவலம் தண்பொழில் வடபொழில் ஆயிடை'' (பரிபாடல்- 5: 7-8), (அவுணர்களைச் சுற்றத்தோடு தன் வேலால் அழித்த நாவலந் தீவு வட பகுதியில்), ""நாவலந் தண் பொழில் வீவின்றி விளங்க'' (பெரும்பாண்-465). (நாவல் மரத்தால் பெயர் பெற்ற குளிர்ந்த நாடு).
நாவலந் தீவு என்ற தொடர் ஏலாதியில் (56) வந்துள்ளது. அதற்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி "ஏழ் கடலுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு'' என்று பொருள் கூறியுள்ளது.
நாட்டு எல்லை
காரிகிழார் என்ற புலவர் பாண்டிய அரசனைப் புகழும்போது,
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கு
என்று கூறுகையில் (புறம்.6.1-4) இந்திய நாட்டின் அன்றைய நாவலந் தீவின் எல்லைகளையே குறிப்பிடுகிறார்.
மாங்குடி மருதனார் இன்னொரு பாண்டிய மன்னனைப் புகழும்போது அந்த எல்லைகளைத் ""தென்குமரி வடபெருங்கல் / குணகுட கடலா எல்லை'' (மதுரைக் காஞ்சி. 71-72) என்று கூறுவதும், குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் சேரனைப் புகழும்போது, ""தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை'' (புறம்-17.1-2) என்று கூறுவதும் அறியத்தக்கது.
"வட பெருங்கல்' என்பது இமய மலையே.
பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனார் வட எல்லையை இமயம் என்றும், தென் எல்லையைக் குமரி என்றும் குறிப்பிட்டுள்ளார். ""ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்/ தென் குமரியொடு ஆயிடை''(11. 23-24). பரணர் தொன்மத்தைப் பற்றிப் பேசும்போது இமயம் என்ற சொல்லையும், ""அன்னம்.... இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும்'' (நற்றி.386.3). தமிழ் அரசரின் வீரத்தைப் பேசும்போது இன உணர்ச்சியை வலியுறுத்தி உள்நிலை ஆக்கமாகத் "தொன்முதிர் வடவரை' (ஆரிய அலறத் தாக்கிப் பேரிசை / தொன்முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து / வெஞ்சின வேந்தனை பிணித்தோன்'' (அகம்.396. 16-19) என்ற தொடரையும் பயன்படுத்தியுள்ளது மொழிப் பயன்பாடு, சூழலை (இங்கு கருத்துச் சூழலை) ஒட்டியது என்பது சமூக மொழியியல் நோக்கு ஆகும். காரிக் கிழார் பயன்படுத்திய "பனி படு நெடு வரை' என்பது கடன் மொழிபெயர்ப்பு (கர்ஹய் ற்ழ்ஹய்ள்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதத் தகுந்தது. அதையே (வட) பெருங்கல் (புறம்17.1, ம. கா.71) என்று குறுங்கோழியூர் கிழாரும், மாங்குடி மருதனாரும் குறிப்பிட்டுள்ளது உள்நிலை ஆக்கம் (கர்ஹய் ஸ்ரீழ்ங்ஹற்ண்ர்ய்) என்றாகும்.
மக்கள்
வட இந்திய மக்கள் "ஆரியர்' என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டாலும் அவர்களில் பல வகையினர் இருப்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
1. பொது - (மாரி புரந்தர நந்தி) ஆரியர் / பொன்படு நெடுவரை (அகம்.398,18-19).
2. யானைப் பாகர் - ஆரியர் / பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு (அகம் 276, 9-10).
3. கழைக் கூத்தாடிகள் - ஆரியர் / கயிறாடு பறை (குறுந்.7.3.)
4. பொருநன் - ஆரியப் பொருநன் (அகம். 386.10)
5. போர் வீரர் - ஆரியப்படை (அகம். 336.22),
6. அரசர் - ஆரியர் அலறத் தாக்கி (அகம். 396,16).
"வடவர்' என்ற பொதுச் சொல்லும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அது வட இந்தியரையும் தமிழகத்தில் வட பகுதியில் உள்ள (அருவா வட தலை) மக்களையும் குறிக்கக் கையாளப்பட்டுள்ளது.
""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / குட புல உறுப்பின் (அகம். 340.16-17-வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லில் மேற்கே உள்ள பொதிகை மலை)
""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / தென்புல மருங்கில் சாந்தொடு பெயர'' (நெடுநல்வாடை, 51 வடவர் -52 - வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லும் தென்னாட்டில் விளையும் சந்தனக்கட்டைகளும் பயனற்றுக் கிடக்க)
""வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல் கெட'' (பட்டினப்பாலை 276-277 - வடவர் (தமிழ்நாட்டு வடவர் அருவா வடதலை) துன்பப்பட, குடவர் (தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ளவர்) எழுச்சிக் குன்ற, தென் பகுதியில் உள்ளவர்கள் சுற்றம் கெட) என்பவை சான்றாகத் திகழ்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.