கட்டாயம்
கட்டு - செலுத்து, கொடு, தா; தாயம்-வரி, தீர்வை, கிஸ்தி, வாய்தா. கட்டாயம் - செலுத்த வேண்டய தீர்வை, கொடுக்க வேண்டிய கிஸ்தி, தர வேண்டிய வரி. கட்டு+ஆயம்= கட்டாயம் ஆயிற்று. கட்டாயம் என்பதற்கு வரி செலுத்துதல் என்பது பொருள். ஊர்க் குடிமக்கள், கிராமக் குடிமக்கள், நாட்டுக் குடிமக்கள் வரி செலுத்துவதிலிருந்து அவசியம் தப்ப முடியாது. தீர்வை செலுத்துதல் என்பது ஒவ்வொரு குடிமகனின் அவசர அவசியத் தேவையும் கடமையும் ஆகும். எனவேதான், நாம் நமது நடைமுறை வாழ்வின் அவசர அவசியத் தேவைகளைக் குறிப்பிடும்போது கட்டாயம் என்கிறோம்.
பத்தாயம்
பத்து+ஆயம்=பத்தாயம் ஆயிற்று. பத்து-பத்திரமான, பாதுகாப்பான; ஆயம் - கூட்டம், நெருக்கம், குவியல், சேர்க்கை. நெல் மணிகளின் கூட்டம். நெல்மணிகளின் குவியல், நெல் மணிகளின் சேர்க்கை, நெல் மணிகளின் நெருக்கம். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்படும் இடம் பத்தாயம் ஆயிற்று. எனவேதான் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பேணப்பட வேண்டிய அந்த உயரிய ஆவணங்கள் பத்திரம் எனப்பட்டது. வரவு செலவுக் கணக்கு எழுதுகிற நாம் நமது பாதுகாப்பான அந்தக் குறிப்பேட்டுப் புத்தகத்தை பத்து அல்லது பற்று வரவுக் கணக்கு என்று சொல்லுகிறோம்.
கந்தாயம்
கந்தை+ஆயம்= கந்தாயம் ஆயிற்று. துணி வகைகளில் கிழிந்துபோனவை, எரிக்கப்பட வேண்டியவை, ஒதுக்கப்பட வேண்டியவை, தூக்கி எறியப்பட வேண்டியவை, புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகிய அனைத்தும் கந்தல் -கந்தல்துணி ஆயிற்று. இந்தத் துணிகளின் நெருக்கமே, கூட்டமே, இணக்கமே சேர்க்கையே கந்தல்-கந்தை-கந்தாயம் ஆயிற்று. "கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு' என்பது பழமொழி அன்றோ! மேலும் இதே பொருளில் கந்தைக் கந்தையான அதாவது கற்றைக் கற்றையான தேவை இல்லாத தாள் கூட்டம் - காகித நெரிசல் - குப்பைக்கூளத் தாள்கள் கந்தாயம் ஆயிற்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.