தமிழ்மணி

சொல் புதிது - 49

வாழ்க்கைக்குத் துணை வேண்டும்; துணை இணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது இணையம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிக் கொண்டிருக்கிறது.

முனைவர் ம. இராசேந்திரன்

வாழ்க்கைக்குத் துணை வேண்டும்; துணை இணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது இணையம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிக் கொண்டிருக்கிறது.

போகும் இடத்தில் நல்ல தண்ணீர், காற்று, வெளிச்சம் கிடைக்குமா? என்கிற நிலை மாறி, இணைய வசதி இருக்குமா? என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இணைய வசதி இருந்தால் உலகில் விரும்பிய இடத்தில் விரும்பியவர்களோடு இருக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதனால், காற்றைப் போல இணைய வசதி போகும் இடம் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் கம்பி வழியோ கைமெய்யாகவோ இணைய வசதியைப் பெற முடிகிறது. ஆனால், நாம் போகிற இடங்களுக்கெல்லாம் மடிகணினி போல இணைய வசதியையும் எடுத்துச் செல்ல முடியுமா?

பேருந்தில், தொடர்வண்டியில், விமானத்தில் பயணிக்கிறபோது எங்கே இருக்கிறோம்? எப்போது சென்றடைவோம்? என்றெல்லாம் அறிய இணைய வசதி கிடைக்குமா? நல்ல சாப்பாடு கிடைக்கும் விடுதி எங்கே இருக்கிறது? என்ன சாப்பிடலாம்? குறிப்பிட்ட பொருள் எங்கே கிடைக்கும்? என்ன விலையில் வாங்கலாம்? என்றெல்லாம் உடனுக்குடன் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தகவல் அறிய எல்லா இடங்களிலும் இணைய வசதி தேவைப்படுகிறது. அதனால் உணவகம், விடுதி, வணிக நிறுவனம், போக்குவரத்து முதலிய நிலையங்களில் இணைய வசதி அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் பயணித்தவாறே பாட்டு கேட்பதும், படம் பார்ப்பதும் போல அவரவர் உலகில் மயங்கிக் கிடக்கவும் வேலை செய்யவும் இணைய வசதி வாய்ப்பளித்திருக்கிறது.

விமான நிலையங்களில் குறிப்பிட்ட கால அளவிற்கு இலவசமாக இந்த வசதியை அளிக்கிறார்கள்; விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்குக் கடவுச் சொல் தந்து பயன்படுத்தவும் கட்டணத்தில் பயன்படுத்தவும் வசதி செய்து தருகிறார்கள். தனிப்பட்ட அலுவலக வளாகத்திலும் கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களிலும் சில மாநகர்களிலும் இணைய வசதி கட்டணம் இல்லாமல் கிடைக்கிறது.

இப்படியான வசதி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலும் ஹில்டன் விடுதியிலும்தாம் முதன் முதலில் பயன்பாட்டிற்கு வந்ததாம்; பின்னர் 2001-இல் T-Mobile Hotspot  என்று இந்த வசதிக்குப் பெயர் தந்தார்கள். ஆண்டுதோறும் மடிகணினி விற்பனை 15 கோடியாம்; மடிகணினி, இணையத்தில் சேர ஹாட்ஸ்பாட் வசதி தேவைப்படுகிறது. செல்லிடப்பேசியில் இணையத் தொடர்பு இருந்தால், அதனைக்கொண்டு மடிகணினிக்கு இணைய வசதியைப் பற்ற வைக்க முடியும். அதனை பெர்சனல் ஹாட்ஸ்பாட் என்கிறார்கள். பொது இடங்களில் தரப்படும் இந்த வசதிக்கு பப்ளிக் ஹாட்ஸ்பாட் என்று பெயர்.

ஹாட்ஸ்பாட் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:

  • பி.மாரியப்பன் - செழுமையிடம்
  • மீனா.கண்ணன் - இணையதள நுழைவுமையம்
  • செ.நாராயணசாமி - கைமெய்யுணர் மையம்
  • கோ.மன்றவாணன் - வளாக இணையம்/ வளாக வலைத்தலம்/ வளாக வலைத்தொடர்பு
  • வெ.ஆனந்தகிருஷ்ணன் - இணையதளத் தொழில்நுட்பப் பகுதி
  • ப.இரா.இராச அம்சன் - கணினி தழுவிய இயங்குதளம்/ தொலைநில கைபேசி இணைப்புச் சேவை
  • என்.ஆர். ஸத்யமூர்த்தி - தொடர்பு மையம்/ பழகு மையம்/ செயல் மையம்
  • "வானவில்' மூர்த்தி - இயங்குதளம்/ விரைவு துணைத்தளம்
  • சோ.முத்துமாணிக்கம் - இணையப் பல்பேசி இணைப்பு

ஜனநேசன் - தகவல்தரவு பரிமாறு மையப் புள்ளி/ தகவல் தரவு சந்திப்பு மையப் புள்ளி போகும் இடங்களில் இணைய வசதியைப் பற்றிகொள்ளக் கிடைக்கும் வசதிதான் ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்படுகிறது. "பற்றுக்கோல்' என்பது ஊன்றுகோலாகவும் இருக்கிறது; ஒரு பொருளைப் பற்றிப் பிடித்து எடுக்கும் இடுக்கியாகவும் இருக்கிறது. பற்றுக்கோடு என்பதற்கு, நிலைக்களன், தஞ்சம், கட்டுத்தறி என்று திவாகரம் பொருள் தருகிறது. ""பற்றுக்கோடு நின்பதம் அன்றி இல்லை'' என்பது மதுரை அந்தாதி. ""பற்றற்றான் பற்றினைப் பற்றுக'' என்பது திருக்குறள்.

இணையத் தொடர்புக்குப் பற்றிக் கொள்ளும்படியாகக் கிடைக்கிற ஹாட்ஸ்பாட் வசதியைத் தமிழில் இணையப் பற்றுக்கோடு என்று கூறலாம்.

பற்று என்பதில் கணக்கும் இருக்கிறது; குழந்தை, கையைப் பற்றிக் கொள்வதில் பிடிப்பும் இருக்கிறது; தீ, பற்றுதலில் பரவுதலும் இருக்கிறது; தொடர்பும் இருக்கிறது. "பற்றுக்கோடு' என்பது ஒருவருக்கு ஒருவர் அல்லது ஒன்றுக்கு ஒன்று ஆதரவாகவும் துணையாகவும் இருப்பது.

விமான நிலையங்களிலும் விடுதிகளிலும் இணையப் பற்றுக்கோடு இருக்கிறது என்று சொல்வதற்கும் வாய்ப்பாக இருக்கிறது.

Hot spot - இணையப் பற்றுக்கோடு

8-3-15 தேடலுக்கான சொல் - Return gifts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT