களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றியுடன் திரும்புவதே வீரர்க்குக் கடமையெனக் கொள்ளப்பெற்ற நம் தமிழ்ச் சமூகத்தில், போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனுக்கே பரணியும் பாடப்பெற்றது.
போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றியுடன் திரும்புவதே வீரர்க்குக் கடமையெனக் கொள்ளப்பெற்ற நம் தமிழ்ச் சமூகத்தில், போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனுக்கே பரணியும் பாடப்பெற்றது. போர்களில் வேந்தனின் பெரும்படைகளை வீரத்துடன் எதிர்கொண்டு போரிட்ட மறவருக்கு யானைகளைக் கொல்வது அவ்வளவு கடினமான செயலா? ஆம். கடினம்தான். இயற்கையாகவே மிகுந்த பலம்கொண்ட யானைகளுக்குக் கடும்போர்ப் பயிற்சியோடு, போருக்குச் செல்லும்முன் மழை போன்று தாராளமாகக் கள்ளையும் கொடுத்து அனுப்பினால் அவற்றின் போர்ச்சினத்தை விவரிக்கவும் வேண்டுமா?
போரில் யானையைக் கொல்வது கடமை என்றாலும் வேந்தன் ஏறிவந்த யானையைக் கொல்வதே பெருமையாகக் கொள்ளப்பெற்றது.
முதுகுடியினரான மறக்குடியின் தலைவனாக விளங்கிய சீறூர் மன்னன் ஒருவன், மறப்பெருமை விரும்பி, தன் வேலை வேந்தன் ஏறிவந்த யானையை நோக்கி எறிய, அவ்வேல் வேந்தனுடைய யானையின் நெற்றியை ஆழமாகக் குத்தி நின்றது. இதுகண்டு வெகுசினம் கொண்ட வேந்தன், தன் வேலை அம்மன்னனை நோக்கி எறிந்தான். வேந்தன் எறிந்த அவ் வேல் மன்னனின் சந்தனம் பூசிய மார்பைத் தைத்து அவன் முதுகுவழி நீண்டு நின்றது. அந்நிலையிலும் மறச்சினம் மாறாத அச் சீறூர் மன்னன், தன் மார்பைத் தைத்த அவ் வேலைப் பிடுங்கி எடுத்து, வேந்தனின் யானைப்படையை நோக்கி ஓங்கியபோது... என்ன நிகழ்ந்தது?
""புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே''
மறக்குடிப்பெண்டிர், தம் கணவனோ, புதல்வனோ படையில் புறம்காட்டினர் என எவரும் கூறக்கேட்டால், நாணமும் சினமும் கொள்வரென்பது நாம் அறிந்ததே. ஆனால் இங்கோ, சீறூர் மன்னனின் வேலுக்கு அஞ்சிப் பகைவேந்தனின் ஆண்யானைகள் புறம் காட்டியோட, அவற்றின் பெண்யானைகள் எல்லாம் அச்செயலைக் கண்டு நாணம் அடைந்தனவாம்.
மார்பை ஊடுருவிய வேலைப் பிடுங்கி யானைகளை நோக்கி எறிய ஓங்கியபோதே பகையானைகள், அவ்வேலுக்கு அஞ்சிப் புறங்கொடுத்தோடின என்றால், அச்சீறூர் மன்னனின் மற ஆளுமையை எண்ணிப்பாருங்கள்!