சிவபெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே ஒரு வழக்கு நடந்ததைப் பெரியபுராணம் வாயிலாக அறியமுடிகிறது. தமது வழக்கிற்கு ஆதாரமாக ஓலைச்சுவடியின் ஏட்டைக் காட்டியிருக்கிறார் சிவபெருமான். கோபத்தில் அந்த ஓலையைக் கிழித்துப் போட்டிருக்கிறார் சுந்தரர். சுந்தரர் கிழித்தது ஆதாரத்தின் நகலைத்தான். "மூல ஓலை என்னிடம் உள்ளது' என்று சிவபெருமான், சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்டதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
ஆவணங்களுக்கு நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அப்போதே இருந்திருக்கிறது. இப்போது, காலம் மாறி இருக்கிறது; கணினியுகத்தில் வாழ்கிறோம். ஆனாலும் நகலின் தேவை தொடர்கிறது. குறிப்பாகக் கணினியைப் பயன்படுத்துவோர் தங்கள் கோப்புகளையும் தகவல்களையும் எந்த நேரத்திலும் இழக்கும் நிலை ஏற்பட ஏராளமான வாய்ப்புகள் இயற்கையாகவும் உள்ளன; செயற்கையாகவும் உருவாக்கப்படுகின்றன.
2008-இல் நடைபெற்ற ஆய்வில், வீட்டுக் கணினியில் இருந்து 66 கோப்புகள் மாயமானது தெரியவந்துள்ளது. எனவே, கணினியைப் பயன்படுத்துவோர் எவ்வளவு கவனமாக இருந்தாலும் கோப்புகளும் தகவல்களும் களவு போகும் அல்லது காணாமல் போகும். அந்தக் கோப்புகளையும் தகவல்களையும் கண்டு பிடிக்கவும் மீட்டெடுக்கவும் போராட வேண்டி இருக்கிறது. அதற்கென்று சில மென்பொருள்களும் இருக்கின்றன. காணாமல் போனபின் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளைவிட, வரும்முன் காப்பாகக் கோப்புகளையும் தகவல்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளில் உலகம் முனைப்பாக இருக்க முன்வந்துள்ளது.
அதற்காக ஒவ்வொரு கோப்புக்கும் இரண்டு அல்லது மூன்று நகல்கள் எடுக்கப்படுகின்றன. அவை கணினியில் வெவ்வேறு இடங்களிலோ அல்லது தனியாகக் குறுவட்டு அல்லது கையடக்கமான கருவிகளிலோ (தரவகக்கோல் Pen-Drive) பாதுகாக்கப்படுகின்றன.
கணினியில் உள்ள அனைத்தையும் நகல் எடுக்கவும் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நகல் எடுக்கவும் முடியும். வீட்டுக் கணினியில் உள்ள தகவலையும் கோப்பையும் போகிற இடத்தில் உள்ள கணினியில் பார்க்கவும் பயன்படுத்தவுமாக இணையத்தில் நகலை வைத்துப் பாதுகாக்கவும் முடியும். மூலக்கோப்பு அழிந்துபோனால் நகலே மூலமாகும். காலின் மெக்கன்சி (1754-1821) தென்னிந்தியக் கோயில்களில் இருந்த கல்வெட்டுகளை உதவியாளர்களைக் கொண்டு படியெடுத்துத் தொகுத்தார். பின்னர்த் தொல்லியல்துறை கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது, கோயிலில் இருந்த பல கல்வெட்டுகள் சிதில மடைந்தும் கண்டுபிடிக்க முடியாமலும் போயிருந்தன. அவற்றிற்கெல்லாம் மெக்கன்சியின் தொகுப்பில் உள்ள நகல்களே மூலமாகிவிட்டன. கோயிலில் கல்லில் வெட்டப்படிருந்த கல்வெட்டுகள் மெக்கன்சியின் தொகுப்பில் தாளில் பதிவாகி இருந்தன. ஆனாலும், வேறு வழி இல்லாமல் தாள் சுவடியில் உள்ள கல்வெட்டுப் படிகளே இப்போது மூலமாகிவிட்டன. ஆனால், கணினியில் அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடில்லை. அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்துவதற்கு Backup எடுக்கிறார்கள்.
Backup என்பதற்கு இணையான தமிழ்ச் சொற்களாக வாசகர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:
நா.முத்தையா - பின்புலம்/ உந்தாற்றல்
கு.இரவிச்சந்திரன் - மாற்றுக் கோப்பாவணம்/ நகல் கோப்பகம்/ கோப்புக் கலம்/ கோப்புச் சேமிப்பகம் மீனா.கண்ணன் - பின்வாங்கு/ நிகழ்செயல் நிறுத்து
நா.கிருஷ்ணவேலு - முடித்து எழுதல்/ காலிசெய்தல் / பணிமுடிந்து காலியாகுதல்
சோ.முத்துமாணிக்கம் - ஆவணக்காப்புப் பதிவு/ ஆவணப் பின்புலப்பதிவு
கோ. மன்றவாணன் - காப்புப்படி/ நகல் தொகுப்பு/ படியெடுப்பு/ படிவைப்பு/ பிற்பயன்படி
வெ. ஆனந்தகிருஷ்ணன் - நகாப்புநகல்
என்.ஆர்.ஸத்யமூர்த்தி - காப்புநகல் / மாற்றுநகல்/ காப்பிடம்/ மாற்றகம்
நா.அனந்தபத்மநாபன் - சேம ஊட்டம்
ஜனநேசன் - மூலத்தரவுக் காப்பான்/ மூல ஆதாரக் களஞ்சியம்
இரா.மோகனசுந்தரம் - பின்புல ஏற்பாடு/ எதிர்நோக்கு ஆயத்தம்
கோப்புகளையும் தகவல்களையும் அழியாமல் பாதுகாத்தல், தவறுதலாக அழிந்து போனவற்றை மீட்டெடுத்தல், பயன்படுத்துதல் எனும் மூன்று நோக்கங்கள் ஆஹஸ்ரீந்ன்ல் எடுப்பதில் உள்ளன.
வரும் காலத்தில் தேவை ஏற்படும்போது பயன்படுத்தவே மீட்டெடுக்கிறோம்; பாதுகாப்பாக வைக்கிறோம். எதிர்காலத் தேவைக்காக வைக்கப்படும் நிதியை வரும்கால வைப்பு நிதி என்று சொல்கிறோம். வங்கிகளில் வருங்காலப் பயன்பாட்டிற்கான முதலீடு வைப்புப் பணம் ஆகிறது. ""நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பைத்'' தேவாரம் பாடுகிறது. (தேவா. 818, 2).
எனவே, தேவைக்குப் பயன்படுத்த, பாதுகாப்பாக எடுத்து வைக்கப்படும் நகலை வைப்பு நகல் என்று சொல்லலாம்.
Backup - வைப்பு நகல்
அடுத்த வாரத் தேடல் - Pink slip
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.