தமிழ்மணி

நிலவு யாருக்குச் சொந்தம்?

நிலவின் மீது தீராத காதல் உடையவர்கள் கவிஞர்கள். நிலவை, காதலி முகத்துக்கு உவமை காட்டுவதில் அவர்கள் ஒருபோதும் சலிப்பதில்லை. அத்தகு கவிஞர்களுக்கு மத்தியில், நிலவை நோக்கி அறைகூவல் விட்டவர் (1118) திருவள்ளுவர்.

கிருங்கை சேதுபதி

நிலவின் மீது தீராத காதல் உடையவர்கள் கவிஞர்கள். நிலவை, காதலி முகத்துக்கு உவமை காட்டுவதில் அவர்கள் ஒருபோதும் சலிப்பதில்லை. அத்தகு கவிஞர்களுக்கு மத்தியில், நிலவை நோக்கி அறைகூவல் விட்டவர் (1118) திருவள்ளுவர்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இலக்கிய நூலேணி தந்து மனித குலத்தோடு உறவு கொண்டாடிய நிலவில் கால் பதித்தது அறிவியல் சாதனை. ஆனாலும், நாட்டுப்புறப்பாடல் தொடங்கி, திரையிசைப் பாடல்கள் வரைக்கும் நிலவைச் சொல்லிச் சொல்லிப் பாடி மகிழ்வதில் யாருக்கும் அலுப்புத் தோன்றியதே இல்லை. மாறாக, அலுப்பைப் போக்கும் அதிசய உலகமாய், அந்தரத்தில் தொங்கும் அந்த நிலாப்பந்து, எப்போதும் போலவே, இருக்கிறது என்றாலும், வளர்ந்து தேய்ந்து இல்லாமலும் போகும் விளையாட்டை நன்றாக அனுபவித்தவர்கள் தமிழர்கள்.

தமிழோடு சேர்ந்து பிறந்ததாக நிலவைப் போற்றும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குச் சிறப்பான இடங்கள் உண்டு.

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டும் ஒளி முகத்தை'; "வில்லடித்த பஞ்சு, விட்டெறிந்த தட்டு, முல்லை மலர்க்குவியல், முத்தொளியின் வட்டம், நல்வயிரவில்லை, நானில விளக்கு' என்றெல்லாம் வருணித்து மகிழ்கிறார் பாரதிதாசன்.

"பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தது போலவும், அமுதமுகம் சிரித்தது போலவும், அல்லி விரித்தாற்போலவும், மேல் சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத் தொத்திக்கிடந்தாற்போலவும்', நிலவு மலர்ந்த அழகை அவர் உவமித்துப் பாடுவார். இத்தகு மரபு எல்லாக் கவிஞர்களுக்கும் உரியதுதான். ஆனால், பாரதிதாசன் இந்த மரபினின்றும் மேல் எழுந்து நிலவைச் சர்வசமயப் பொதுச்சின்னமாகவும், பகுத்தறிவுப் பார்வையின் புதுமைக் கருவியாகவும் பார்க்கிறார் என்பதுதான் புதுமை.

மூன்றாம்பிறை நிலவு வானில் தோன்றுகிறது. அதை முதலில் இசுலாமியச் சிறுவன் பார்க்கிறான்; பாடுகிறான்:

""....மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை

என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார்

ஆதலாலே அழகு நிலாவே

துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ!

அடுத்து, கத்தோலிக்கச் சிறுவன்:

கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள்

ஆதலாலே அழகு நிலாவே,

கத்தோலிக்கர் சொத்து நீதான்!

என்று பாடுகிறான்.

இந்துச் சிறுவன்:

எங்கள் சிவனார் முடியில் இருப்பாய்

ஆதலால் அழகு நிலாவே

இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ

என்கிறான். பின்னர் மூவரும் இணைந்து,

மூன்று பேரும் மொழியக் கேட்டால்

யார்க்குச் சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்?

என்று கேட்கிறார்கள்.

நிலவு எப்போதும்போல, அமைதியாய் உலவி வருகிற வேளையில், பாரதிதாசனின் பாசறையில் பிறந்த சுயமரியாதைச் சிறுவன் மூவரையும் மறுதலித்து,

யாவரும் மனிதர் என்பது தெரிந்தால்

நிலவும் பொதுவே என்பது தெரியும்

அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே!

என்று பாடி முடிக்கிறான்.

உண்மையில் நிலவு யாருக்குச் சொந்தம் எனும் கேள்விக்கு, யாவருக்கும் சொந்தம் எனப் பதில் அளிக்கிறது பாரதிதாசனின் பாடல். இவ்வாறு, சுழலும் பூமியில் உலவும் மனிதகுலம் பொதுமை பேணி அமைதியுடன் வாழப் பூமியைச் சுற்றிச் சுற்றி வந்து நிலவு சொல்லும் குளிர்மொழி, கவிமொழியாகிவிடுகிறது.

-கிருங்கை சேதுபதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT