பழந்தமிழகத்தே ஆடவரும் பெண்டிரும் மாலை அணிந்திருந்தனர். "தார்' என்பது ஆடவர் அணியும் மாலை; "கோதை' என்பது பெண்டிர் அணியும் மாலை; "கண்ணி' என்பது தலையில் சூடப்படும் மாலை. இயற்கையின் எழிலால் பிணையப்பட்ட அவை பூக்களால் ஆக்கப்பட்டன என்று கருதுகிறோம். ஆனால், அவை பெரும்பாலும் பசிய இலைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன.
இன்று துளவம், பச்சை, அருகம்புல், மருக்கொழுந்து முதலிய இலைகளால் அணிபெற மாலையாக்கப்படக் காண்கிறோம். ஆனால், முற்காலத்தில் இலைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. குருத்து ஓலைகளைக் கொண்டு காதோலை உண்டாக்கப்பட்டு, அவை காய்ந்த பின் பயன்படுத்தப்பட்டன. காதுகளில் அவை ஆடுவதும், ஓசை எழுப்புவதும் வியப்பை நல்குவன ஆகும். இராம, லட்சுமண, சீதையர் மரவுரி தரித்தே கானகம் சென்றனர் என்பதன்றோ வரலாறு!
பசிய இலைகளால் மாலை சூடுவது எக்காலத்தும் இயலுவதாகும். இலைகளினாலான மாலைகளும் மணம் தரும். அவற்றின் பசிய நிறம் உடல் நலனை விளைவிக்கும். உடலுக்கேற்ற குளிர்ச்சியும் தருவனவாம். இலைகளினாலான உடைகளும் வனையப்பட்டு உடுக்கப்பட்டன.
வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும் உருபசை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை, வேம்பே, ஆர்என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவர் ஏந்திய
ஓடாக் கழல்நிலை உளப்பட ஓடா
உடல்வேந் தடுக்கிய உள்ள நிலையும்
(தொல்.பொருள். நூ. 63)
இதன் உரையாசிரியர்கள் தம் உரையுள் வெறிவேலன் காந்தள் மலர் அணிந்திருந்தான் என்று கூறியுள்ளனர்.
பூக்கள் எல்லாக் காலமும் பூக்கா; உரிய காலத்துப் பூத்து ஓயும் நிலையின. பூக்காத காலத்து அப் பூச்சூடுவது யாங்ஙனம்?
காந்தள் இலைகளே எப்போதும் விளங்கும் தன்மையால், காந்தளாலான தழை மாலையையே வெறியாடும் வேலன் அணிந்திருக்க இயலும். எனவே, வெறியாடும் வேலன் அணிந்திருந்த மாலை காந்தளாலான தழை மாலையே! தழை மாலை - பிடவம் என்றும் அழைக்கப்படுமாம். சேரன் போந்தையும், பாண்டியன் வேம்பையும், சோழன் "ஆர்' தனையும் அணிந்திருந்தனர். இங்கும் மன்னர் அணிந்தவை தத்தமக்குரிய தழை மாலையே.
மன்னர் எல்லாக் காலத்தும் தத்தமக்குரிய மாலை சூடியவராக இருத்தலே மரபு. எல்லாக் காலத்தும் தத்தமக்குரிய பூக்கள் கிட்டா. எனவே சேரன், பனை(போந்தை) ஓலையைக் கொண்டு பூப்போல அழகிய மாலையாக்கி அணிந்திருந்தனன்; பாண்டியன் வேப்ப இலைகளால் வனையப்பட்ட மாலை அணித்திருந்தனன்; சோழன் "ஆர்' இலைகளால் ஆன மாலையே அணிந்திருந்தனன். "மலைந்த பூவும்' என்றே தொல்காப்பியத்துள் உள்ளதே எனில், பூவாக இலைகளை ஆக்கி அணிந்தனர் என்பதாம்.
இலைகளைக் கொண்டு பூவாக்குவதும் எளியதே.
இலைகளாலான பூக்களை அணிவதே எக்காலமும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டால், இலைகளின் ஆட்சி எத்துணைச் சிறப்பு கொண்டது என்பதை இன்றும் உணரலாம்.
-செம்மை நதிராசா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.