தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: ஈ - 3

ஈயில் வலிய ஈ ஒன்று! ஒலியால் வடிவால் "ஈ'தான்! ஆனால் வலியது, பெரியது "ஈப்புலி' என்பது பெயர். ஈ பறக்கிறது; அதனை "ஈ' ஆய்தல் என்பர்! என்ன ஆய்கிறது? கீழே உட்காரலாமா? ஏதாவது தின்னக் கிடைக்குமா? என ஆய்கிறது.

முது முனைவர் இரா. இளங்குமரன்

ஈயில் வலிய ஈ ஒன்று! ஒலியால் வடிவால் "ஈ'தான்! ஆனால் வலியது, பெரியது "ஈப்புலி' என்பது பெயர். ஈ பறக்கிறது; அதனை "ஈ' ஆய்தல் என்பர்! என்ன ஆய்கிறது? கீழே உட்காரலாமா? ஏதாவது தின்னக் கிடைக்குமா? என ஆய்கிறது.
நிலத்தில் ஆய்கிறது ஈ; நீரில் ஒரு குருவி மேலே ஆயும். அதன் பெயர் ஆலாக்குருவி ஆல் (நீர்) ஆய்க் குருவி! நீரில் மீன் வருகிறதா, பற்றிக் கொள்ளலாமா என ஆய்கிறது! தக்க கீரைதானா, காய்தானா எனச் சமைப்பார் ஆய்கின்றனர்! கீரை ஆய்தல், காய் ஆய்தல் வழக்கில்லையா?
புலமையாளரும் ஆய்கின்றனர்! ஈயின், ஈகை முதல்தானே "ஆய்தல்'. ஈயே! ஈகையே! ஆய்வே! அறிவுத் தேட்டே! என வாழ்த்தலாம் அல்லவோ! ஈ மொய்த்த பண்டம் தின்பது நோய் ஆக்குமே! அதனால்தானே "ஈக்கு இடம் கொடேல்', "ஈ மொய்க்கப் பண்டத்தை வைக்காதே' என்கிறோமே! வாழ்த்துவது சரியா?
ஆக்கம் செய்வது அழிவும் செய்வதுதானே! "இருவேறு உலகத்து இயற்கை' என்பதைப் பூதங்கள் ஐந்தன் வழி அறியலாமே! ஈக்கள் பெருகிய காடாக இருந்து ஊரானது ஈக்காட்டுத் தாங்கல். ஈக்கள் பெருகிய பொழிலாக இருந்து ஊரானது ஈத்தாம் பொழில்! (ஈத்தா மொழி); ஈயோட்டும் கருவி ஒன்று "ஈச்சோப்பி' எனப்பட்டது. கொசுவோட்டிக்கு முந்தியது இவ் வீயோட்டி! ஆ - ஆண்; மா - மான்; கோ - கோன்! என்பன போல், ஈ - ஈன் ஆகிய ஈயும் கொடைதானே "ஈன் உலகம்' (இவ்வுலகம்) "ஈ னோர்' (இவ்வுலகோர்) என்பன!
இவ்வுலகுக்கும் இங்குள உயிரிகளுக்கும் மூலம் எது? ஈனுதல் தானே! ஈனுதல் ஆடு மாடு மட்டுமா ஈனுகின்றன! வாழை, கன்று ஈனவில்லையா? குலை தள்ளவில்லையா? குலை தள்ளுவதால்தானே "தள்ளை' (தாய்) என இலக்கிய வாணரால் அது சொல்லப்
பட்டது!
பறவை முட்டையிட வேண்டும் பருவத்திற்கு முன்பு, கூடு கட்டுகிறதே, முட்டையைப் பாதுகாப்பாக வைத்து, அடைகாத்துக் குஞ்சு பொரிக்க! அக் கூட்டுக்கு என்ன பெயர்? சங்கப் புலவன் அரிய கலைச் சொல் அல்லவோ வழங்கினான். "ஈன் இல்' (ஈனில்) மகப்பேற்று மருத்துவமனையை "ஈனில்' எனலாமே! மகப்பேறு அடையும் தாய் மகப்பேறு பெறும் உள்ளறையை "ஈனில்' எனலாமே! எவ்வளவு சுருக்கம்! என்ன கவின் கலைச் சொல்!
ஈனல் இருக்கப் "பிரசவம்' வேண்டுமா? ஈனல், "ஈற்று' என வலி நிலை காட்டும் சொல்லும் தோன்றியதே! "ஈற்றா' ஈன்ற ஆ அல்லவோ! ஈனுபவள்தானே ஈன்றாள் ஆகிய தாய்! ""ஈன்றாளின் எண்ணக் கடவுளும் இல்'' என்றாரே ஒருவர்! ஈன்றாள் இல்லையேல் - ஈனுவது இல்லையேல் - உலகமே இல்லையே! "ஈனா வாழை', "ஈனாக் கிடேரி' என்பன போல, "ஈனா உலகம்' ஆக அல்லவோ போய்விடும்?
எங்கள் "பரண்பறை' (பரம்பரை) என ஒவ்வொருவரும் சொல்கிறோமே! அந்தப் பரம்பரை எது? பரன் - தந்தை; பரை - தாய்! ஆதித் தந்தை, ஆதித் தாயா தாமே அவர்கள்! தாயாம் ஈன்றாள்தானே, ஈன்ற மக்களின் பண்பாட்டுக்கு மூலமும் முதலும் அவள்தானே, தன் மக்களைப் பிறர் "சான்றோர்' எனப் பாராட்டக் கேட்டுப் பூரிப்பவள்! அவள்தானே, தான் பசித்துக் கிடந்தாலும், தவறான வழியில் - சான்றோர் பழிக்கும் வழியில் - பொருள் கொண்டு வந்து பசியாற்றாதே என்னும் பண்பாட்டுக் காவலாளி!
குடித்து வரும் மகனைக் கண்டு "இக் குடி கேடன்' என் மகன் அல்லன்- "யான் பெற்ற பிள்ளை அல்லன்' என்று ஏறிட்டும் பாராமல் ஒதுக்கும் பண்பாட்டுப் பெட்டகம் - என ஒரு முறைக்கு மும்முறை பொற்குடத்திற்கு மணிப் பொட்டு வைத்தது போல முப்பாலார் பொறித்து வைத்தார் அல்லவோ!
பிறர் வறுமை கண்டு, இளகிய மனம் போல் - ஈயும் மனம் போல் - இளகும் பொலம் (உலோகம்) தானே ஈயம்! ஈக் கொடைதானே,

""ஈ தா கொடு என மூன்றும் (முறையே)
இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் கூற்றே''

எனத் தொல்லாசான் குறியீடாய் விளங்குகின்றது.

- தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT