தமிழ்மணி

செந்தமிழை வந்தனை செய்வாம்!

சுந்தரரின் தமிழ்ப் பாடல்களின் மீது கொண்ட ஆசையால், திருவாரூர்த் தெருக்களில் சிவபெருமான் நடுநிசியில் நடந்து தூது போனதையும்; திருமழிசை ஆழ்வாருக்காகவும் அவர் சீடர் கணிகண்ணனுக்காகவும்...

மீனாட்சி பாலகணேஷ்

சுந்தரரின் தமிழ்ப் பாடல்களின் மீது கொண்ட ஆசையால், திருவாரூர்த் தெருக்களில் சிவபெருமான் நடுநிசியில் நடந்து தூது போனதையும்; திருமழிசை ஆழ்வாருக்காகவும் அவர் சீடர் கணிகண்ணனுக்காகவும், தமிழின் மேல் கொண்ட காதலால் திருமகளுடன் திருமாலும் தனது பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாரைப் பின்தொடர்ந்தையும் கூறி, இவ்வாறு சிவபிரானையும் திருமாலையும் அடியார்கள் செந்தமிழ்ப் பாடல்களுக்காக உடன் செல்லவைத்த தமிழ், உலகிலுள்ள எம்மொழியினும் மிக உயர்ந்த பெருமை வாய்ந்தது; அதனை வணங்குகிறோம் என்று தமிழ்த் தெய்வத்தை வணங்கி, பாட்டுடைத் தலைவியான மங்கையர்க்கரசி எனும் பெண் குழந்தையைக் காக்க வேண்டுகிறார் கவிஞர் நடேச கவுண்டர்.

÷கருமையான நிறம்கொண்ட கடலினை ஒரு துளியாக்கிக் குடித்த தமிழ் முனிவர் அகத்தியர். அந்த முனிவராலுமே தமிழ் மொழியினைக் கரைகாண இயலவில்லை. அப்படிப்பட்ட தமிழைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் நிறைந்தது புகழ்வாய்ந்த மதுரை மாநகர். அந்த மதுரையின் இறைவனான சிவபிரானின் திருவடிகளைத் தன்சிரத்திலும் உள்ளத்திலும் எப்போதும் இருத்தி வழிபட்டவர் மங்கையர்க்கரசியார். உத்தமியான இந்தப் பெண்மணி (குழந்தை) காழி முனிவன் எனப் போற்றப்படுகின்ற திருஞானசம்பந்தரின் துணைகொண்டு செய்த அரிய செயலை "மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ்' என்ற நூலில் பாங்குற விளக்குகிறார் புலவர்.

÷உலகம் முழுதிலும் சைவநெறி விளங்கி சைவ சமயம் தழைக்கத் தொண்டு செய்தவர் மங்கையர்க்கரசியார். நின்றசீர்நெடுமாறன் எனப்பட்ட கூன்பாண்டியனின் மனைவி; சோழ மன்னனின் மகளான "மானி' எனும் இவரை மங்கையர்க்கரசியார் எனச் சிறப்பித்தவர் ஞானசம்பந்தர். சமண சமயத்தைத் சார்ந்திருந்த அரசனின் சுரநோயை, சம்பந்தப் பெருமானின் திருவருளால் மட்டுமே தீர்க்க வைத்து அவனைச் சைவத்திற்கு மாற்றியவர். இந்த உத்தமியைக் காக்குமாறு தமிழ்த் தெய்வத்தினை வேண்டுகிறார்.

அருமறை களா லுமுணர்வரிய திரு வடிமலர்க

ளாரூரில் வீதி தோறும்

அத்தராத் திரியிலொரு தெரிவை யுறுமுனிவகலு

மாறுபல கானடக்கத்

திருமகள்பின் வரவரவ வமளியொடு கரியமுகில்

சீரடிய னோடுசெல்லச்

செய்துலகி லெம்மொழியி னும்பெரிய பெருமைபெறு

செந்தமிழை வந்தனைசெய்வாம்

கருமைமிகு கடலுமொரு துளியென நுகர்ந்தமுனி

கரைகாண வரியதமிழைக்

கற்றபெரியோர்கள் புகழ் திருமதுரை யிறைவனிரு

கமலமல ரடிகடம்மை

ஒருமையொடு திருவுளத் துஞ் சிரத் துந்தரித்

துயர்காழி முனிவனருளால்

உலகமுழு துஞ் சைவ நெறி தழுவ வைத்த புக

ழுத்தமி தனைக்காக்கவே!

பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம் தமிழுக்கே பெருமை சேர்க்கும் தனித்தன்மை வாய்ந்த ஓர் இலக்கிய அமைப்பு. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் தமிழ்த் தாயை அல்லது தமிழ்த் தெய்வத்தினை விளித்துப் பாடும் முறைமையை இப்புலவர்தான் முதன்முறையாகச் செயல்படுத்தியுள்ளார் எனவும் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT