பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவது பாட்டாகத் திகழ்வது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். திணை - காஞ்சி. காஞ்சித் திணையாவது நிலையாமையைக் கூறுவது. மதுரையை ஆண்ட இப்பாண்டிய மன்னனுக்கு நிலையாமைப் பொருளுணர்த்த எழுந்த இலக்கியம் இது.
இது பெருந்திணைக்குப் புறனாக அமைகிறது என்பதைத் தொல்காப்பியம், (தொல்.1023) கூறுகிறது. மேலும், காஞ்சித் திணையின் விளக்கத்தையும் (தொல்.1024) கூறுகிறது.
வாழ்க்கையின் போர்க்கள நிலையாமைகளைக் கூறி, நிரந்தரமான புகழைப்பெற போரைவிட்டு அறச்செயல்களை மிகுதியாகச் செய்யுமாறு மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, கி.பி.3ஆம் நூற்றாண்டில் இருந்த மதுரை மாநகர், மதுரையில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, காலை முதல் மூன்றாம் யாமம் வரை தொடர்ச்சியாக எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் ஒரு திரைப்படம்போல நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார் மாங்குடி மருதனார். பாண்டியன் நெடுஞ்செழியன் இவரை தம் அவைக்களப் புலவர்களுள் தலைமைப் புலவராய் வைத்திருந்தான். மேலும், இப்புலவரை ஒரு பாடலில் (இறுதி நான்கு அடிகளில்) பாராட்டிப் (புறம்.72) பாடியுள்ளான்.
""ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை''
பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன்; ஈடு இணையற்ற வீரன்; போர் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தவன். நால்வகைப் படைகளையும் நல்ல முறையிலே பெருக்கி வைத்திருந்தான். பகை மன்னர்களை வென்று, அவர்கள் நாட்டிலிருந்து, தன் நாட்டிற்குக் கொண்டுவந்து குவித்த செல்வ வளங்களால், செல்வச் செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்துவிடக்கூடியவை என்பதை மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பராகவும், அவைக்களத் தலைமைப் புலவராகவும் இருந்த மாங்குடி மருதனார், உலகத்து நிலையாமையை அவனுக்கு உணர்த்த எண்ணினார்.
அவனைப் பார்த்து முதலில், ""பொய்யறியாத அமைச்சர்களைக் கொண்ட பாண்டியர் பரம்பரையில் வந்தவனே என்கிறார். பிறகு அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டுகிறார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டுகிறார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றையும் போற்றுகிறார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை எடுத்துக் கூறுகிறார். பின்னர், உன்னைப் போலவே இந்த உலகில் எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக, செல்வர்களாக, கொடை மறவர்களாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்கள்தம் எண்ணிக்கை கடலின் குறுமணலினும் பலராவர். புகழ்பட வாழ்ந்த அவர்கள் அனைவரும் இறுதியில் மாண்டு போயினர். ஆதலால், நீ போர் செய்து புகழ் ஈட்டுவதை விட்டுவிட்டு, நல்லறங்களைச் செய்து, நிலையில்லாத இந்த உலகத்தில் நிலைத்த புகழைப் பெறவேண்டும் என்றார்.
இந்நூலின் உட்கிடை: பாண்டியன் பரம்பரை, குலப்பெருமை, குடிப்பெருமை, வெற்றிச் சிறப்பு, நால்வகைப்படை, நிலந்தரு திருவிற் பாண்டியனின் சிறப்பு, பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை அறிவுறுத்துதல்; ஐவகை நில வருணனை, அங்கு நடக்கும் செயல்கள், எழும் ஒலிகள். மதுரை நகரின் அமைப்பு; நால்வகைப்படை; பகலிரவுக் கடைகள்; திருவிழாக்கள்; மக்கள் பழக்க வழக்கங்கள்; பரத்தையர் வாழ்க்கை; மதுரையின் சிறப்பு. வையை ஆற்றின் சிறப்பு, அங்கு அமைந்திருக்கும் பாணர் இருக்கை. (வையை ஆற்றின் இரு கரைகளிலும் பூக்கள் நிறைந்த மரங்கள், அந்தப் பூந்தாதுக்கள் வையை ஆற்றில் விழுவதால் அவை வையை ஆற்றுக்கு மாலை போல் இருந்தது என்கிறார் புலவர். இன்று வையை ஆற்றில் நீரும் இல்லை, மணலும் இல்லை இரு கரைகளிலும் மரங்களும் இல்லை).
அரண்மனை, அகழி, மதில், வாயில், கடைத்தெருக்கள், 375 முதல், 430 வரை: நால்வகைப் படைகள், பல்வேறு பொருள்கள் விற்போர், மனைதோறும் மலர்விற்கும் மகளிர், பகல் கடைகளின்(நாலங்காடி) பேரொலி. செல்வர் செயல், செல்வப் பெண்டிர் செயல், அந்திக்கால பூஜை, பெளத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்தணர் பள்ளி, அறங்கூறு அவையம், வணிகர் தெரு, நாற்பெருங் குழுவினர், பல்வேறு தொழில் செய்வோர், வணிகர், அங்கு ஏற்படும் பேரொலி, உணவு வகைகள், அந்திக் கடைகளின் ஆரவாரம், மாலைக்காலம், குல மகளிர் செயல், ஓண நாளில் செய்யும் யானைப்போர், மகவு ஈன்ற மகளிர் குளத்தில் நீராடுதல், கடுஞ்சூல் மகளிர் கடவுளை வழிபடுதல், வெறியாட்டுக் குரவைக்கூத்து, இடைச்சாமம்,(இரண்டாம் யாமம் -நள்ளிரவு) பேய், அணங்கு, கள்வர், இக்கள்வரைக் கண்டுபிடிக்கும் ஒற்றர், ஊர்க்காவலர்). வைகறையில் வேதம் ஏதும் அந்தணர்கள், வைகறை நிகழ்ச்சிகள், மதுரை நகரின் வளமும் பெருமையும், வீரர்கள், மன்னனை வாழ்த்துதல், கொடைச் சிறப்பு, புலவர் மன்னனை வாழ்த்துதல், உலகப்பற்று விடுத்து (மெய்ப்பொருள் உணர்க) வீட்டு நெறியைக் காட்டுதல் முதலியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிலந்தரு திருவிற் பாண்டியன் பழைமையும், தொன்மையும், தமிழின் பெருமையையும் நன்று உணர்ந்த தொல்லாசிரியர் பலருடன் கூடி மெய்யுணர்வைப் பெற்றவன். அதுபோன்று நீயும் பெறுக என்கிறார்.
இவ்வாறு 3ஆம் நூற்றாண்டிலேயே, ஓர் இசையமைப்பாளராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, கதாசிரியராக, ஒலிப்பதிவாளராக, புகைப்படக் கலைஞராக அன்றைய மதுரை மாநகரை ஒரு திரைப்படம் போல, திறம்பட காட்சிப்படுத்தி, இன்றைய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறார் புலவர்.
ஒரு நாட்டுக்குக் கட்டாயம் (அவசியம்) இருக்க வேண்டிய நாடு, நகரம், மதில், அரண், அரசு, மக்கள், தொழில், கலை, பண்பாடு, நாகரிகம், சான்றோர் கூட்டம் ஆகிய அனைத்தையும் கூறியிருப்பதுதான் மதுரைக் காஞ்சியின் பெருஞ்சிறப்பு. மாங்குடி மருதனாரின் கவிக்கொடை, தமிழுக்குக் கிடைத்த அருட்கொடையாகும். இந்நூலைத் தேடிப் பதிப்பித்த உ.வே.சா.வின் புகழ் உலகம் உள்ளவரை நின்று நிலைக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.