தமிழ்ச் செல்வங்கள்: அளவு-2 எடுத்தல் அளவு
அளவின் மூலக் கருவி உடல் ஆதலை அறிந்தோம்.
அளவின் மூலக் கருவி உடல் ஆதலை அறிந்தோம். எண்ணல் அளவை கண்டோம். அடுத்த எடுத்தல் அல்லது நிறுத்தல் அளவை மூலம் எது? அடுத்த எடுத்தல் அளவின் மூலமும், உடல் உறுப்பாம் கையே! இரு விரல்களை இணைத்து எடுத்துத் தருதல் விரல் அளவு. விரல் நுனியால் அள்ளித் தரல் நுனி அளவு. கையால் அள்ளித் தரல் கையளவு. இரு கையும் கூட்டி அள்ளித் தரல் கூட்டுக் கை அளவு. எண்ணெய் கோயில் புனித நீர் விடுதல் அளவு அங்கை (அ) அகங்கை அளவு.
இன்றும் கையளவு, விரலளவு மறையவில்லை. கையகலம், விரலளவு வழக்கொழியாமை கண் கூடு. சிற்றூர் பண்ட மாற்றில் நடைபெறுவன இவை. என் இளந்தைப் பருவத்தே கண் பார்வை இல்லா மாற்றுத் திறனாளி நல்லையா என்னும் எங்கள் ஊரவரை அறிவேன். எட்டுக் கல் தொலைவுடைய இராசபாளையத்தில் வியாழன்தோறும் சந்தை கூடும். நல்லையா நடந்தே போவார். கையில் சமன் கோலாம் தராசு - படிக்கல் - இரா. அவர் கையே சமன் கோல்!
கோழி சேவல்களை ஊரில் வாங்கிக்கொண்டு செல்பவர் கையாலேயே தூக்கி இருபது பலம், இருபத்தொரு பலம், இருபத்தொன்றே கால் பலம் என்று சொல்லி விற்பார். முதற்கண் ஐயம் கொண்டவர் நிறுவையிட்டுப் பார்த்ததுண்டு. பின்னே அவர் சொல்லிய எடையில் ஐயம் கொண்டதே இல்லை.
அவர் தனியாள்! தேவை குறைவு! கூட்டி விற்றுத் தேடும் நாட்டமும் இல்லாதவர்! தம் வாழ்வுத் தேவைக்குக் கட்டும் விலையில் விற்றலால் கொண்டு சென்றவை எல்லாமும் விற்றுப் போகும். விலை போகாமல் வைத்திருந்தவரும் அவரிடம் கோழி சேவல்களை அவர் எடை, கணக்குப்படி அவரிடம் தந்து விற்பர்! அவர் கையே எடைக் கோல்! எடைக் கல்! கையெடை கணக்காக இருக்கும் என்பது சந்தையே அறியும்.
"கைக் கணிசம்' என்பது இன்றும் சிற்றூர் வழக்கு. கைக் கணிசம் என்பது கையே கணக்கிடும் கருவியாக இருந்ததை இன்றும் விளக்கும் சான்றாம். எடுத்தல் அளவு என்பது ஏன்? தூக்கு, சமன் கோல் முதலாம் கருவிகள் நிலம் படாமல் மேலே எடுத்துத் தூக்கி, அதில் நிறுக்க வேண்டும் பொருளை வைத்து அதுவும் நிலமும் பிறவும் படாமல் சாயாமல் சரியாமல் இருக்க நிறுத்து அளவிடப்படுவதால் எடுத்தல் அளவு எனப்பட்டது. எடுக்கப்படுவது எடை ஆயிற்று; தொடுப்பது தொடை, விடுப்பது விடை என்பவை போல. அறிவியல் வளர்ச்சியால் எடைப் பொறி நிலமட்டத்தில் பதிக்கப்பட்டு இருந்தாலும் எடையிடும் பொருள் அதன் மேலே எடுத்து வைக்க (அ) நிறுத்தி வைக்கக் காண்கிறோம் அல்லவா!
கருவி மாறினாலும், எடையிடும் கருவியின் மேலேயே எடையிடப்படுவது இருப்பது மாறவில்லை அல்லவா! தூக்குப் போடுதல், தூக்குப் போட்டுக் கொள்ளுதல், தூக்கி வழியே மாடியேறி இறங்குதல், "தூக்கு' என ஏவுதல், தலைமேல் உள்ள பொருளை வைக்க நடைபாதையில் சுமை தாங்கி வைத்தல், ஆய்ந்து தெளிந்து நுண்பொருள் காண அமைந்த செய்யுளைத் தூக்கு எனப் புலமையர் வழங்குதல், தூக்கணாங்குருவி, கூடு கட்டுதல், சுவை தூக்காக - உயர்வாக - உள்ளது எனப் பாராட்டல், சுவடித் தூக்கு, சுவடி தூக்கி வேலை செய்தல், படுத்தல் இன்றி அமர்ந்து உறங்கலைத் தூக்கம் என்றல் என்பவை எல்லாம் எண்ணத் தக்கவை.
- தொடர்வோம்