தமிழ்மணி

திருமந்திரத்தில் திருவள்ளுவர் கூறும் அறங்கள்

வையத்துள் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை வழங்கிச் சென்ற இலக்கியச் செல்வங்கள் தமிழ்கூறு நல்லுலகத்தில் எண்ணிறந்தன.

முனைவர் க. சிவமணி

வையத்துள் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை வழங்கிச் சென்ற இலக்கியச் செல்வங்கள் தமிழ்கூறு நல்லுலகத்தில் எண்ணிறந்தன. அவற்றுள் தமிழ் வேதமாகக் கருதப்படும் திருக்குறள் எடுத்துரைக்கும் அறக் கருத்துகளில் சிலவற்றை, திருமூலர் தமது திருமந்திரம் முதல் தந்திரத்தில் எடுத்துரைத்துள்ள அறக்கருத்துகள் சிலவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உண்மைச் செல்வம் :
மனிதன் செல்வம் திரட்டுதலின் நோக்கம், திரட்டிய செல்வத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன் தரும் வாழ்க்கையை மேற்கொள்ளுதற் பொருட்டேயாகும். அத்தகைய சீரிய நெறியிலன்றி தன்னைத்தானே வருத்திக்கொண்டு திரட்டும் செல்வம் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படாது போகும் என்பதை எடுத்துக் கூறும் திருவள்ளுவர்,

"அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்' (குறள்:1009)

என்னும் குறட்பாவில் எடுத்துரைத்து, செல்வம் சேர்த்தலின் நோக்கத்தைப் புலப்படுத்தியுள்ளார். வள்ளுவரின் கருத்தை மனத்துட்கொண்ட திருமூலர் செல்வம் நிலையாமையில், மலர் மலர்ந்ததை இயற்கையாகவே அறிந்துகொண்ட தேனீ அம்மலரை நாடிச் சென்று அம்மலரிலுள்ள சிறு தேனைச் சேகரித்து உயர்ந்த மரத்தில் தான் கட்டியுள்ள கூட்டில் கொண்டு சேர்த்து வைக்கும். உடல் வலிமைமிக்க மனிதர்கள் பல்வகைச் சூழ்ச்சிகளால் தேனைத் தனக்குரியதாக்கிக் கொள்ள முயலுவர். அதைப் போலவே இவ்வுலக உயிர்கள் பேணிப் பாதுகாத்து வைத்திருக்கும் இவ்வுடலையும் உடைமையையும் காலன் அவ்வுயிரின் அனுமதியின்றியே பிரித்து எடுத்துச் சென்றுவிடுகிறான் என்பதை,

"ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. (செ.நி.4)

என்ற பாடலில் சுட்டிக் காட்டியுள்ளமை வள்ளுவர் குறளோடு ஒப்பு நோக்குதற்குரியது.

நிலையாமை:
இவ்வுலகில் தோன்றியவர்களின் ஆயுட்கால எல்லை அவன் பிறந்த கணத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. நாள் என்பதை,
"நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்' (குறள்:334)

என்ற குறளில், நாளை நமது வாழ்நாளைக் குறைக்கும் வாளாக உவமிக்கிறார் வள்ளுவர். இதனைத் திருமூலர், விலை மதிப்பற்ற பட்டாடை எனக்கருதி அதில் ஏற்படும் சிறு சிறு குளறுபடிகளைத் திருத்தி எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் என்றேனும் ஒருநாள் அப்பட்டாடை கிழிந்தொழியும் என்பதை மறுப்பதற்கில்லை. அதுபோல இவ்வுடலும் நாளாக நாளாகத் தளர்ந்து மண்புக்கு மாயும் என்பதை,

"மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே' (உ.நி. 6)

என்ற பாடலில் சுட்டிக் காட்டியுள்ளமை வள்ளுவர் வாய்மொழியோடு ஒப்பு நோக்கலாம்.

கொல்லாமை:
உயிர்களிடத்தில் அன்பு பூண்டொழுகும் செயலுக்கு அடிப்படையாக அமைவது எவ்வுயிரையும் கொல்லாதிருத்தலேயாகும். இதனை உணர்ந்த வள்ளுவப் பெருந்தகை, கொலை செயல்களைச் செய்தல் என்பது ஒரு மனிதனை வாழ்வின் கீழாம் தன்மைக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்த சான்றோர்கள் கொலைத் தொழில் செய்யும் மனிதர்களை இழிந்தவர்களாகவே கருதி அவர்களை ஒதுக்கி வைப்பர் என்பதை,

"கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து' (குறள்:329)

என்ற குறளில் எடுத்துக் காட்டியுள்ளார். இக்கருத்தையே திருமூலரும்,

"பொல்லாப் புலாலை நிகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாறே. (பு.ம. 1)

என்ற பாடலில் எந்த விதத்திலும் , எந்த உறுப்பிற்கும் நன்மையைத் தராதது புலால் உணவு என எடுத்துரைத்து, அத்தகைய புலால் உணவை விரும்பியுண்ணும் மனிதர்கள் பெறப்போகும் துன்பங்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

சிற்றினம் சேராமை:
தமது நன்னடத்தை, நற்செயல் காரணமாக சான்றோராக மதிக்கப்பெறுபவர்கள் சிறுமை குணங்களால் ஆட்கொள்ளப்பட்ட சிறியோர் கூட்டத்துடன் உறவு கொள்ளுவதில்லை என்பதை எடுத்துரைக்கும் வள்ளுவர்,

"சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றாச் சூழ்ந்து விடும்' (குறள்:451)

என்ற குறளில் எடுத்துரைத்து, சிறுமை எண்ணம் கொண்டவர்களே அத்தகையோரிடம் உறவு கொள்வர் என மொழிந்துள்ளார். இதனையே திருமூலரும்,

"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே' (கல்லாமை:8)

என்ற பாடலில் சுட்டிக்காட்டி, சிவனை அறியும் அறிவாகிய கல்வியை விரும்பிக் கற்பவர்களே உயர்ந்தவர்கள் என்றும், அவ்வறிவில்லாதவர்கள் அறிஞர்கள் காணவும் அஞ்சுவர் எனவும் எடுத்துரைத்துள்ளமை வள்ளுவர் கருத்தோடு ஒத்துப்போகிறது.
திருவள்ளுவர் கூறிச் சென்ற வாழ்வியல் அறங்களில் பெரும்பாலானவை திருமூலர் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. மேலும், திருக்குறள் உணர்த்தும் அறங்களின் கூறுகள் பிற்கால இலக்கியங்கள் பலவற்றிலும் இடம்பெறுதல் தவிர்க்க இயலாததாகிவிட்ட தன்மையையும் கோடிட்டுக் காட்டியுள்ளது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT