தமிழ்மணி

யானையின் மதம் போக்கும் வாழை!

DIN

தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியால் உள்ளம் ஒன்றுபட்டு, பிறர் அறியாத களவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். களவு வாழ்க்கை திருமணத்தில் முழுமைபெற தலைவன் பொருள் தேடி வருவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
தலைவனின் பிரிவை தலைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னசெய்வதென்று புரியாமல் புலம்பி அழுகிறாள். அந்நேரத்தில் தலைவியைச் சந்திக்க தோழி வருகிறாள். தலைவியின் புலம்பலுக்கான காரணம் தோழிக்கு நன்கு புரிந்துவிடுகிறது. தலைவன் பிரிவை நினைத்து தலைவி வருந்தும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதும்; தலைவியின் சோர்ந்த மனத்தைத் தேற்ற வேண்டிய பொறுப்புணர்ச்சியும் உடையவள் தோழி. தலைவிக்குப் பலமுறை சொல்லியும் தேற்ற முடியாத சூழலில், தோழி அவள் மனத்தில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாவது அத்துயரத்தைக் குறைக்க முயற்சி செய்கிறாள்.
"சோலையில் உள்ள வாழையின் சுருண்ட குருத்து அணங்கு உறையும் தலையாகிய பெரிய வேழத்தின் நெற்றியில் (மத்தகத்தில்) தடவியதால் அதன் வலிமை அழிந்துவிட்டது. இவ்வாறு மயங்கி வருத்தம் அடைந்த ஆண் யானையின் முதுகை இளம் பிடியானை தடவிக் கொடுக்க (பெண் யானையின் இச்செயலால்), ஆண் யானை தனது வருத்தம் நீங்கி உறங்கியது' எனத் தலைவியிடம் கூறுகிறாள் தோழி.
"சோலை வாழை சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந்தலை நீவலின் மதன்அழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப்பிடி உலைபுறம் தைவர
ஆம்இழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்
மாமலை நாடன் கேண்மை
காமம் தருவதோர் கைதாழ்ந் தன்றே' (குறுந்-308)
வாழைக் குருத்தால் மதம் அழிந்த ஆண் யானை, பெண் யானையின் வருடலால் உறங்கியது போன்று, திருமணத்தை வேண்டியபோது மயங்கிய தலைவன் உன்னை திருமணம் செய்து கொண்டு முடிவில்லாத இன்பத்தைப் பெறுவான் என்பதைக் குறிப்பாய் தலைவிக்கு உணர்த்திய தோழியின் திறம் நயமுடையதாக அமைந்துள்ளது.
வாழை மரத்தினால் யானையின் மதம் அழியும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. "ஆனைக்கு வாழைத்தண்டு, ஆளுக்குக் கீரைத்தண்டு' என்னும் பழமொழியும் இப் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. அக்காலத்தில் மதம் பிடித்து கட்டுக்கடங்காமல் திரியும் யானைக்கு, யானைப்பாகர் வாழைத்தண்டை உணவாகக் கொடுத்தலும், வாழையின் சாற்றை யானையின் தலைநெற்றியில் தேய்த்தலும் வழக்கமாக இருந்திருக்கிறது.
இக்காலத்திலும், மதம் பிடித்து உயிர்களைக் கொல்லும் யானைகளுக்கு வாழையின் மூலமாகக் கிடைக்கும் பயனை அளித்தால், உயிரிழப்பைத் தடுக்கலாமே!
- முனைவர் கி. இராம்கணேஷ்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT