முகப்பு
தமிழ்மணி

ஒன்றினைச் சார்ந்த ஒன்று!

இவ்வுலகம், ஒன்றினை ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்பதை நாமறிவோம். எனினும், முக்கூடற் பள்ளு இதனைச் சிறந்த ஒரு பாடலோடு இணைத்துக் கொடுத்திருக்கும் விதம் சிறப்பானதொன்று.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

இவ்வுலகம், ஒன்றினை ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்பதை நாமறிவோம். எனினும், முக்கூடற் பள்ளு இதனைச் சிறந்த ஒரு பாடலோடு இணைத்துக் கொடுத்திருக்கும் விதம் சிறப்பானதொன்று.
 ஏனெனில், சமுதாய நீதிக்குச் சிறந்த உவமைகள் இப்பாடலில் காணப்படுகின்றன. சமுதாய நீதி என்பது சக மனிதர்களோடு ஒத்தும் உதவியும் வாழ்வதுதான். மனிதர்கள் செய்கிறார்களோ இல்லையோ, மரங்கள் செய்கின்றனவாம்.
 மீது யர்ந்திடும் தெங்கிள நீரை
 மிடைந்த பூகஞ் சுமந்துதன் காயைச்
 சுதமொன்றிச் சுமக்கக் கொடுக்கும் வில்
 ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
 உளுக்க வேசுமந்து ஒண்குலை சாய்க்கும்
 மாதுளங் கொம்பு வாழையைத் தாங்கும்
 வளமை ஆசூர் வடகரை நாடே!
 (முக்.பள்ளு-21)
 இந்தச் சிந்துப் பாடலில் ஓர் அரிய உண்மையைக் காணலாம். மூத்த பள்ளியின் ஊரான ஆசூர் வடகரை நாட்டில் மரங்கள் தமக்குள் இப்படி ஒன்றன் சுமையை மற்றொன்று தாங்கிச் சுமந்து உதவுவது போலவே, ஏனைய மக்களும் ஒருவர் துயரை மற்றொருவர் தாங்கிக் காக்கும் அன்புடையவராக வாழ்ந்தனர் என்று பள்ளு பாடிய கவிஞர் கூறுகிறார்.
 ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களிலே உள்ள இளநீர்களை, அதற்கிணையாகச் செழித்து வளர்ந்துள்ள கமுகுகள் தாம் தாங்கிக்கொண்டு, தம் காய்களைத் தம்மருகே மாமரங்கள் ஒன்றி வளர்ந்து சுமந்து கொண்டிருக்கக் கொடுத்துக் கொண்டிருக்கும். அந்த மாமரங்களோ தம்மிடையே தூங்கும் கனிகளைப் பலா மரத்திலே சேர்த்துவிடும்.
 பலாக் கனியோ அதனையடுத்திருக்கும் வாழை மரங்கள் மீது சாய்ந்திருக்க, அதனால் அவை வளைந்து தம் ஒளியுடைய குலைகளைச் சாய்க்கும். அப்போது, அதனருகே நிற்கும் மாதுளங்கொம்பு அந்த வாழைக் குலையத் தாங்கிக்கொள்ளும். இப்படி மரங்கள் பலவும் ஒன்றுக்கொன்று உதவியாக வளமுடன் வளர்ந்திருக்கும் நாடே எங்கள் ஆசூர் வடகரை நாடு என்று பெருமிதம் பேசுகிறாள் மூத்த பள்ளி.
 -மா. உலகநாதன்
 

முழு கட்டுரையைப் படிக்க →