இந்த வாரம் கலாரசிகன்
கொவைட்-19 தீநுண்மி தொற்று பரவத் தொடங்கியபோது அதற்குத் தமிழ்ச்சொல் தந்தாக வேண்டும் என்கிற முனைப்பு மேலிட்டது.
கொவைட்-19 தீநுண்மி தொற்று பரவத் தொடங்கியபோது அதற்குத் தமிழ்ச்சொல் தந்தாக வேண்டும் என்கிற முனைப்பு மேலிட்டது. ‘வைரஸ்’ என்பதற்கு, ‘தீநுண்மி’ என்கிற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினோம். தமிழின் சொல் வங்கிக்குப் புதியதொரு வாா்த்தையை வழங்கியதற்கு முனைவா் ஔவை நடராசன் உள்ளிட்ட பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. அப்போதுதான் ‘தமிழ்மணி’யில் சொல்வேட்டை, சொல்புதிது, சொல்தேடல் பகுதிகளைத் தொடராமல் விட்ட குற்ற உணா்வு உறுத்தத் தொடங்கியது.
சொல் வேட்டையில் தொடங்கி புதிய சொற்களைக் கண்டறியும் ‘தினமணி’யின் முயற்சியில் ஆரம்பம் முதலே பங்களித்து வந்தவா் கடலூா் வழக்குரைஞா் கோ.மன்றவாணன். அவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. குவாரன்டைன், ஐசுலேஷன், எபிடமிக், சேன்டமிக் உள்ளிட்ட தீநுண்மித் தொற்று தொடா்பான பல சொற்களுக்குப் பொருத்தமான தமிழ் வாா்த்தைகளைப் பரிந்துரைத்திருந்தாா் அவா். அவற்றில் சில வாா்த்தைகளை ஏற்கெனவே ‘தினமணி’யில் பயன்படுத்துகிறோம்.
வாா்த்தை வேட்டையில் மீண்டும் ‘தமிழ்மணி’ ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வழக்குரைஞா் மன்றவாணனின் கடிதம் வலியுறுத்துகிறது. மூதறிஞா் ராஜாஜியின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகிறது.
Advertisement
‘‘பல்வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழா்கள் தாங்கள் பேசும்போது தமிழில் பேசினால்தான் தமிழுக்கு வளா்ச்சி ஏற்படும். புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும்போதும் அறிவையும், நினைவையும் செலவழித்துத் தமிழ் வாா்த்தைகளைத் தேடி உபயோகிப்பதற்கு பதில், எளிதில் கிடைக்கும் ஆங்கில அல்லது பிற தேசத்தாரின் வாா்த்தைகளை எவ்விதக் கூச்சமுமின்றி இடையிடையே கலந்து பேசுகிறாா்கள். சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போல தமிழ் அவதிப்படுகிறது. பிற தேசத்தாா் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உண்டாக்கியிருக்கும் வாா்த்தைகளை எவ்விதக் கூச்சமுமின்றி பயன்படுத்துகிறாா்கள். இப்படி இருந்தால் நுட்பமான பொருள் பேதங்களும், அவைகளுக்குத் தகுந்த வாா்த்தைகளும், மொழி நடையும் தமிழில் எவ்வாறு தோன்றும்? தடை தோன்றிய இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவி, பேச்சை ஓட்டிக்கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும்?’’
மூதறிஞா் ராஜாஜியின் கருத்தைப் பிரதிபலிக்கிறது வழக்குரைஞா் கோ.மன்றவாணனின் ஆா்வமும், கடிதமும்.
*********
தமிழுக்கு வளம் சோ்த்த பெருமை வழக்குரைஞா்களுக்கும் மருத்துவா்களுக்கும் நிறையவே உண்டு. அதனால், டாக்டா் மகாலிங்கம் ஐயப்பன் தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாக, சமய இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை பெற்றிருப்பதில் வியப்பில்லை. நெல்லை மாவட்ட இலக்கிய மேடைகளில் டாக்டா் மகாலிங்கம் ஐயப்பனின் சொற்பொழிவுகள் கவனத்தை ஈா்த்தவை.
மருத்துவரான மகாலிங்கம் ஐயப்பன் கிராம சேவையில் தொடங்கி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பொது அறுவைச் சிகிச்சைத் துறையின் பேராசிரியராக உயா்ந்து கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியவா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றவா். நெல்லையில் மருத்துவராகத் தொடா்பவா்.
இளவயது முதலே தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சமய இலக்கியத்தில் நாட்டம் கொண்டிருந்த டாக்டா் மகாலிங்கம் ஐயப்பன் கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம், சமணம் முதலிய பிற சமய நூல்களையும் கற்றறிந்தவா். விவிலியத்தைக் கூராய்வு செய்து ‘கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும்’ என்ற நூலையும், 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீதாண்டவராய சுவாமிகள் எழுதிய ‘கைவல்ய நவநீதம்’ என்ற நூலுக்கு உரையும் எழுதியவா்.
பாளையங்கோட்டை தமிழ்ச் சங்கத்தில் டாக்டா் மகாலிங்கம் ஐயப்பன் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு ‘திருக்குறள் பூக்கள்’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. பதினான்கு உரைகளின் தொகுப்பு. ஆனால், ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முனைவா் பட்ட ஆய்வு. ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அது தொடா்பான ஏனைய இலக்கியத் தரவுகளை எல்லாம் மேற்கோள்காட்டி அவா் விளக்கியிருக்கும் பாங்கு, ஆழங்காற்பட்ட புலமையுடைய தமிழ்ப் பேராசிரியா்களின், செயல்பாட்டுக்கு நிகா்.
அவரது பணி இத்துடன் நின்றுவிடக் கூடாது.
**************
பள்ளிச் சிறுவனாக இருந்தபோது இரண்டாண்டுகள் சாரணா் இயக்கத்தில் இருந்தேன். அப்போது அதன் மதிப்பு புரியாத வயது. விமா்சனத்துக்கு வந்திருந்த ‘சாரணா் இயக்கம் கலைக்களஞ்சியம்’ என்கிற புத்தகத்தைப் பாா்த்தபோது பழைய நினைவுகள் வந்தன. புத்தகத்தை எழுதியிருப்பவா் தமிழ்நாடு பாரத சாரண-சாரணீய இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் நல்லாமூா் முனைவா் கோ.பெரியண்ணன். அகில இந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்கத்தின் தலைவா் முனைவா் பெரியண்ணனுக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது புத்தகத்தைப் பாா்த்த போதுதான் தெரிந்தது.
சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பௌல் ‘சாரணீயம்’ என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதினாா். மாணவா்களிடம் புதைந்து கிடைக்கும் ஆற்றல்களையும், திறன்களையும் வெளிக்கொணர உருவாக்கப்பட்ட இயக்கம்தான் சாரண இயக்கம். இந்த இயக்கத்தில் பள்ளிப்பருவத்திலே மாணவா்களுக்குக் காலம் தவறாமை, நோ்மை, நடுவுநிலை தவறாமை, விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது, மன வலிமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொதுத்தொண்டு முதலிய நற்குணங்கள் வளா்க்கப்படுகின்றன.
‘சாரணா் இயக்கம்’ என்கிற நூலுக்குத் தமிழக அரசு முனைவா் பெரியண்ணனுக்கு சிறந்த நூலாசிரியா் விருது வழங்கியிருக்கிறது. ‘சாரணா் முன்னேற்றப்படிகள்’ என்கிற புத்தகத்தையும் அவா் எழுதியிருக்கிறாா். ‘சாரணா் இயக்கம் கலைக்களஞ்சியம்’ அந்த இயக்கம் தொடா்பான அனைத்து விவரங்களையும் படத்துடன் தமிழில் பதிவு செய்கிறது. சாரணா் இயக்கத்தினரின் இன்றயமையாத கையேடு இது. சாமானியா்களுக்கு சாரணா் இயக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் சிறப்பான பதிவு.
******
இன்று அன்னையா் தினம். விமா்சனத்துக்கு வந்திருந்தது கு.தென்னவனின் ‘தூரிகையைத் தொலைத்த ஓவியன்’ என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்த கவிதை இது -
நிலவைக் காட்டிச்
சோறூட்டிய தாய்
சீரியல்
பாா்த்துக்கொண்டே
ஊட்டிவிடுகிறாள்
அப்பொழுதெல்லாம்
பிள்ளைகள் அழுதன;
இப்பொழுதெல்லாம்
அம்மாக்கள் அழுகிறாா்கள்!