பொதுவாக நான் ஆங்கில வருடத் தேதி அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை. அம்மா தவறிவிட்டதால் இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கிடையவும் கிடையாது. அப்படி இருந்தும், கவியரசு கண்ணதாசனின் பிறந்த தேதி வரும் போதெல்லாம் எனது பிறந்த தேதியையும் நினைவில் நிறுத்தி, என்னை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள் இந்த ஆண்டும் வாழ்த்து மழை பொழிந்தனர். அவர்களுக்கு நன்றி.
அப்படியானால், நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதே இல்லையா என்று கேட்காதீர்கள். கொண்டாடாமல் இல்லை. ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்ததால், அதைத்தான் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறேன். அதற்கு ஏதாவது காரணம் உண்டா என்று கேட்டால், சொல்லத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் தொன்றுதொட்டு அதுதான் வழக்கம். தாத்தா-பாட்டி சொன்னதை அம்மா-அப்பா கேட்டார்கள். அவர்கள் சொன்னதை நானும் பின்பற்றுகிறேன். அவ்வளவே...
தமிழ் மாத அடிப்படையில், பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்த நாள் கொண்டாடுவது என்பது தொன்றுதொட்டு நிலவிவந்த தமிழர் வழக்கம். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி, அவர்களது காலனிய ஆட்சியை நிறுவிய பிறகுதான் அவர்களது வருட நாள்காட்டியைப் பின்பற்றும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்துவதற்கும், அரசு அலுவல்களுக்கும் வசதியாக இருப்பதால், நாமும் பின்பற்றத் தொடங்கி விட்டோம்.
நமது மாதங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றிற்கு அறிவியல் ரீதியாகவும், கோள்கள் ரீதியாகவும் அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆங்கில மாதங்களுக்கோ, வருடங்களுக்கோ அப்படி எதுவும் கிடையாது. உலகில் எல்லா இயக்கங்களும் சூரிய, சந்திர இயக்கத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூமியின் அருகில் உள்ள கிரகம் என்பதால், சந்திரனுக்குத் தேய்பிறை, வளர்பிறை இருப்பதை நமது முன்னோர்கள் காலக் கணிதத்தின் அடிப்படையாக்கி நாள்களையும், மாதங்களையும் கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்தினர்.
மாதத்திற்கு ஒரு பெளர்ணமி. ஆண்டுக்கு 12 பெளர்ணமிகள். இரண்டாண்டுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு பெளர்ணமி. அதனால்தான், அகவை எண்பது நிறையும்போது அவர்களை "ஆயிரம் பிறை கண்டவர்கள்' என்று நாம் அவர்களுடைய காலைத் தொட்டு வணங்குகிறோம். எண்பது வயது வாழ்க்கையில் அவர்கள் மாதா மாதம் சந்திரனைப் பார்த்தார்கள் என்பதல்ல அதன் பொருள். சந்திரனின் கிரணங்கள் அவர்கள் மீது ஆயிரம் முறை விழுந்திருக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
இதையெல்லாம் யோசித்துப் பார்க்கவோ, அது குறித்து ஆராய்ச்சி செய்யவோ இன்றைய தலைமுறைக்குப் பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை. அது தேவையும் இல்லை.
அன்றாடப் பிழைப்புக்கே அல்லல்படும்போது, ஆயிரம் பிறை குறித்தும், நட்சத்திர அடிப்படையிலான பிறந்த நாள் குறித்தும் அவர்கள் யோசிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.
பிறந்த நாள் குறித்த சிந்தனை எழுந்ததால் இதையெல்லாம் பதிவு செய்ய நினைத்தேன், அவ்வளவே. வாழ்த்திய அனைவருக்கும் மீண்டும் நன்றி!
வியாழனன்று அதிகாலை நான் சற்றும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே. பிறந்த நாள் வாழ்த்துடன் அவரது புத்தகங்கள் சிலதையும் அன்பளிப்பாக அனுப்பித் தந்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க புத்தகம், அவருக்குத் தமிழக அரசின் கம்பர் விருதைப் பெற்றுத்தந்த கம்பராமாயண ஆங்கில வசன மொழியாக்கம்.
ஹெச்.வி.ஹண்டே என்றதும் எனது நினைவு 1967 பச்சையப்பன் கல்லூரி நாள்களுக்குத் திரும்பியது. சுதந்திரா கட்சி வேட்பாளராகப் பூங்கா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த டாக்டர் ஹெச்.வி. ஹண்டேயைத் தமிழகமே அப்போது வியப்புடன் பார்த்தது. ராஜாஜியின் அன்புக்குப் பாத்திரமான டாக்டர் ஹெச். வி.ஹண்டே அன்றைய சட்டப் பேரவையின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவர்.
அண்ணா முதலமைச்சராக இருந்த அந்த சட்டப் பேரவையில், துணிந்து பல மக்கள் பிரச்னைகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டாக்டர் ஹெச்.வி. ஹண்டே எழுப்பியதையும், அரசு அதற்கு உடனடித் தீர்வுகளை வழங்கியதையும் இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஹண்டே சட்டப் பேரவையில் உரையாற்றுகிறார் என்றால், முதல்வர் அண்ணா உள்பட அனைத்து உறுப்பினர்களும் உன்னிப்பாகக் கேட்பார்கள்.
1964-ஆம் ஆண்டில் பட்டதாரிகள் தொகுதியில் சுயேச்சையாகத் தமிழக மேலவைக்கும், 1967, 1971 தேர்தல்களில் சுதந்திரா கட்சி வேட்பாளராகத் தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே. ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் அதிமுகவில் இணைந்ததும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக நீண்ட நாள்கள் பணியாற்றினார் என்பதும் இப்போது வரலாறு.
அகவை 94 -இல் இருக்கும் அவர் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து பல புத்தகங்களையும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அவரது மூதறிஞர் இராஜாஜி, சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு போன்ற நூல்கள் எடுத்தியம்பும் ஏராளமான செய்திகள், வருங்கால சந்ததியினருக்கு உபயோகமான ஆவணப் பதிவுகள். அவசரநிலைச் சட்ட காலத்தில், இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை மீள்பார்வை பார்த்து சீர் செய்ய வேண்டும் என்றும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அவரது கம்பராமாயண ஆங்கில உரைநடை மொழிபெயர்ப்பு அற்புதமான முயற்சி. ஏற்கெனவே கம்பராமாயணத்தைச் செய்யுள் வடிவில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வ.வே.சு. ஐயர். "வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, மேலைநாட்டுக் காவியங்களான இல்லியட், பாரடைஸ் லாஸ்ட் ஆகியவற்றுக்கு இணையானது கம்பரின் காவியம்' என்பார் வ.வே.சு. ஐயர். அதையேதான் ஹெச்.வி. ஹண்டேயும் தனது முன்னுரையில் தெரிவிக்கிறார்.
அவருடைய தலைவர் ராஜாஜி,"சக்கரவர்த்தித் திருமகன்' என்கிறபெயரில் ராமகாதையை வழங்கினார். சீடர் ஹெச்.வி. ஹண்டே, நூல் பிடித்தாற்போல ஓரிடத்தில்கூட வழுவாமல் கம்பர் கவிதை மூலம் சொல்லிச் சென்ற ராமகாதையை அப்படியே அவரது வர்ணனைகளுடன் ஆங்கில உரைநடையில் பதிவு செய்திருக்கிறார்.
கம்ப காதையில் வாலிவதைப் படலம் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்தப் பாடல்களை, அவற்றின் வீச்சு சற்றும் குறையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது ஹெச்.வி. ஹண்டேயின் ஆங்கிலப் புலமைக்கு மட்டுமல்ல, கம்பரின் கவிதைகள் மீது அவர் கொண்ட காதலையும் வெளிப்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் படித்துக்கொண்டு போகும்போது, கூடவே மனதுக்குள் கம்பரின் கவிதைகள் நம்முடன் நடைபோடும் சுகானுபவத்தை ஏற்படுத்தியதற்கு ஹெச்.வி. ஹண்டேவுக்கு நன்றி!
கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? படித்ததும் அடடா... என்று நம்மை ரசிக்க வைக்க வேண்டும். அடுத்தாற்போல, அந்தக் கவிஞனுக்கு எட்டாத பல கற்பனைகளை வாசிப்பவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
சென்னை, போரூர் சன்பீம் பள்ளியின் தாளாளர் கவிஞர் நர்மதா எழுதிய கவிதைத் தொகுப்பு "கொஞ்சம் பயமாய் இருக்கிறது' விமர்சனத்துக்கு வந்திருந்தது. இது அவரது ஏழாவது கவிதைத் தொகுப்பு.
தூரத்தில் கேட்கும் குஞ்சுக் குயிலின் பாடலை கவனித்துக் கேட்கிறது காகம்
வேறொன்றுமில்லை வளர்த்த பாசம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.