தமிழ்மணி

பெருங்கதை காட்டும் ஒப்பனைக்கலை

தமிழ்க் காப்பிய வரிசையில் கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைக் காப்பியத்தில் ஒப்பனைக் கருவி, கூந்தல் ஒப்பனை, முக ஒப்பனை, தொய்யில் எழுதுதல், நக ஒப்பனை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

முனைவர் க. மோகன்

தமிழ்க் காப்பிய வரிசையில் கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைக் காப்பியத்தில் ஒப்பனைக் கருவி, கூந்தல் ஒப்பனை, முக ஒப்பனை, தொய்யில் எழுதுதல், நக ஒப்பனை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.  பண்டைக் கால மகளிர் உடல், கூந்தல், முகம், கண், நுதல், இதழ், கைவிரல், கால்விரல் போன்ற உறுப்புகளுக்கு இயற்கையான அழகியல் முறைகளைக் கையாண்டுள்ளனர். 

ஒப்பனை செய்வதற்கு ஒப்பனை மகளிர் என்று தனியே இருந்தனர். ஆடவரும் ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பெண்களுக்கு ஒப்பனை செய்பவர்கள் திருந்திளையாளர்கள்  என்று சீவக சிந்தாமணி (627) கூறுகிறது. ஆடவர்க்கு ஒப்பனை செய்வோர் கோலவித்தகர் (2:5:160) எனப்பட்டனர்.  

கூந்தல் ஒப்பனை: மகளிர் நீராடிய பின் கூந்தலை உலர்த்தி நறுமணப் புகையால் மணம் சேர்த்துள்ளனர். "அலர்ததை ஐம்பா லணியிழை யேறி' (3:8:12) எனத் தலைமுடியினை ஐந்து பிரிவாகப் பிரித்து வகுத்து ஒப்பனை செய்துள்ளனர். கூந்தலை விரித்தும், தொகுத்தும், வகுத்தும், வாரியும், கோதியும், தீண்டியும் நறுமணப் புகையை அதிகமாகப் பயன்படுத்தியும் கருநிறக் கூந்தலை (2:19:68-72) ஒப்பனை செய்துள்ளனர்.  

தொய்யில் எழுதுதல்: பெண்டிர் தம் தோள்களிலும், மார்பிலும், கொங்கைகளிலும் மற்றும் உடல் முழுவதும் தொய்யல் எழுதியுள்ளனர். தொய்யில் எழுதிய கோலத்தையுடைய மகளிர் தொய்யில் மகளிர் (2:5:81-82) எனப்பட்டனர். 

முக ஒப்பனை:  முக ஒப்பனைக்கு முன்னர் புருவம் ஒதுக்கினர் (2:4:172-182) என்கிறது பெருங்கதை. முகவெழுத்துக்கலை முதன்முதலில் பெருங்கதையில் காணமுடிகிறது. "முகவெழுத்துக் காதை' என்று தனியே ஒரு காதையே எழுதியிருக்கிறார் கொங்கு வேளிர். அரசர்கள் விடியற்காலத்தில் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.(1:34:13-15) 

நக ஒப்பனை:  பெண்கள் தங்கள் நகங்களை அழகிய கிளியின் வாயினை ஒத்த சிவந்த நிறமுடையதாக வைத்திருந்தனர் என்பதை 
கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர்
நுதிவிரல் சிவப்ப... (4:7:42-43) 
என்ற வரிகளிலிருந்து அறியலாம். 

பெண்கள் கால்களில் செம்பஞ்சுக் குழம்பால் கோலம் வரைந்து கொண்டனர் (1:35:209-210). நகத்திற்கு வண்ணம் பூச ஒருவகைக் கல்லில் தேய்த்து வண்ணம் செய்துள்ளனர். மருதாணி குறித்துப் பேசப்படவில்லை. 

ஒப்பனைக் கருவி: செம்பஞ்சுக் குழம்பால் ஒப்பனை செய்வதற்குப் பயன்பட்ட எழுதுகோல் இலேகை (1:38:191) எனப்பட்டது. ஆலவட்டம் (1:57:45), கத்தரிகை (4:14:7), கண்ணாடி  (1:57:40) கொட்டம்  (1:46:217), சீப்பு  (1:34:190)  எனப் பல்வகைப் பொருட்களை ஒப்பனைக் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT