மன்னன் நந்திவர்மன் மீது காதல் கொண்டிருந்தாள் ஒரு தலைவி. காதல் நினைவுகள் அவள் உள்ளத்தில் படர்ந்திருந்தது. பகலெல்லாம் தன் மனத்தை அவள் ஆற்றியிருந்தாலும் இரவுப்பொழுதில் வரும் நிலாக்காலங்களில் காதல் நினைவு அதிகமாக இருந்தது.
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு நிலவு துன்பத்தை அளிக்கும். நந்திவர்மன் மேல் காதல் வைத்திருந்த தலைவிக்கு, ஏற்கெனவே பிரிவுத்துயர் நிரம்பியிருந்தது. இப்போது நிலவும் வந்து விட்டது.
அச்சூழலில் அவள் பாடுகிறாள்:
மண்ணெலாம் உய்ய மழைபோல்
வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி
நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப்
போலவரும்
வெண்ணிலா வேஇந்த வேகம்
உனக்கு ஆகாதே
(நந்திக் கலம்பகம்)
வெண்ணிலா என்னும் பெயருடைய சந்திரனே! உறுதியாக நீ பெண்கள் இல்லாத ஊரில்தான் பிறந்திருக்க வேண்டும். இதை நான் உறுதியாகக் கூறுகிறேன். பெண்களின் நிலையை அறியாமல் குளிர்ச்சியான கிரணங்களை அள்ளி வீசுகிறாய்.
இந்த மண்ணுலகம் எல்லாம் பிழைக்க மழையைப் போல வழங்கும் குளிர்ச்சி பொருந்திய மாலையை அணிந்த நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ்நாட்டில் எனக்குக் கொடுமை செய்ய விரைவாக வந்துவிட்;டாயே! இந்த வேகம் உனக்கு ஆகாது எனச் சொல்லி துயரத்துடன் பேசுகிறாள் தலைவி.
ஓர் ஊரில் பெண்கள் இருந்தால் அங்கு அன்பு, கருணை அனைத்தும் இருக்கும். சந்திரனாகிய நீ பெண்கள் உள்ள ஊரில் பிறந்திருந்தால் தலைவனைப் பிரிந்த பெண் படும் துயரத்தைப் பார்த்து இந்த இரவில் தோன்றாமல் இருந்திருப்பாய் என்று கூறுவதாகக் கருத்து.
தலைவன் இல்லாத காலத்தில் நிலவின் குளிர்ச்சி துன்பத்தைத் தரும் என்பதைத் தலைவியின் கூற்று உணர்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.