குழப்பத்தைக் குறிக்க ஒரு காலத்தில் கோழம்பம் என்ற சொல் வழக்கில் இருந்தது.
கொடீராகிற் கோழம்பமே (3 - 4 - 5) என்று பாடுகிறார் பெரியாழ்வார். இது, ஆழ்வார் பிறந்த மல்லிநாட்டு வட்டாரச் சொல்லாக இருக்கலாம். எனினும் இன்று அந்தச் சொல்லுக்கு அகராதியில் மட்டுமே இடமிருக்கிறது; பேச்சு வழக்கில் இடம் இல்லை.
ஆனால் குழப்பம், குழப்படி என்பன எளிதில் எவர்க்கும் பொருள் விளங்கக்கூடிய சொற்களே. பெரும்பாலும் பேச்சுவழக்கிலும் இடம் பெறுவன இவை. இவற்றுள் குழப்படி என்பதை முந்தைய தமிழ் அகராதிகளில் காணவியலாது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (1992) இச்சொல் இடம் பெற்றுள்ளது.
இனிக் குளப்படி என்றால் என்ன என்று பார்க்கலாம். குளப்படி என்றவுடன் குளத்தின் படிக்கட்டு என்று நினைத்து விட வேண்டாம். இதன் பொருள் வேறு} விலங்குகளது காலின் கீழ்ப்பகுதியில் உள்ள உறுதியான பாகத்திற்குக் குளம்பு என்று பெயர். அந்தக் குளம்பின் அடிப்பகுதியைத் தமிழ்நூல்கள் குளப்படி என்று குறிக்கின்றன. வார்த்தாமாலை என்னும் வைணவ நூலில், குளப்படியிலே நீர்தேங்கினால் குருவி குடித்துப்போம். வீராணத்தேரியிலே தேங்கினால் நாடு விளையும் (வார்த்தை: 441) என்று காணப்படுகிறது.
மழைக்காலத்தில் ஈரங்கசிந்த மேய்ச்சல் நிலத்தில் ஆனிரை முதலான விலங்குகளின் கால் தடம் பதியும் போது, அவற்றின் குளம்பின் அளவுக்கு ஒரு சிறுபள்ளம் உண்டாகும் அல்லவா? அந்தக் குளம்பின் அடியாகிய பள்ளத்துக்கே, குளப்படி என்று பெயர். வேம்பின் பூ வேப்பம்பூ என்றானாற்போலக் குளம்படி குளப்படி ஆனபடி.
ஒரு மாட்டின் குளம்பின் அடியிலே நீர் தேங்கும் போது அது குருவிகள் குடிப்பதற்கே பயன்படும். அதே நீர் வீரநாராயணபுரத்து (வீராணத்து) ஏரியிலே தேங்கினால் நாட்டிலுள்ள வயல்களெல்லாம் விளைந்து நாடே வளம் பெறும் } என்பது இதனால் பெறப்படும் கருத்தாகும்.
இதன் மூலம் இராமாநுசருக்கு முன்பிருந்த ஆசார்யர்களால் பெற்ற பயன் அளவிற் சிறிது என்பதும் இராமாநுசர் வருகைக்குப் பின்னர் உலகு பெற்ற பயன் பெரிது என்பதும் உணர்த்தப்பட்டன. இங்குச் சிறுமைக்குக் குளப்படி நீரையும் பெருமைக்கு வீராணத்தேரியையும் ஒப்பிட்டும் உறழ்ந்தும் காட்டிய அருமையை அறியலாம்.
இவ்வாறே பட்டினத்தடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பக்தியின் சிறுமை பெருமைகளுக்கு முறையே குளப்படி நீரையும் பிரளயகாலத்துப் பொங்கி வரும் கடலையும் உவமித்திருத்தல் காணலாம்.
இனி, நம்மாழ்வார் தமது திருவாய்மொழி
யில் "நெஞ்சே! உன்னை உரிமையாகப் பெற்ற
தனால் இறைவனான அவனும் அடிமைப்பட்ட நானும் தனக்குள்ளே எல்லா இனிமையுமாம்படி கலந்தோம்' என்கிறார்.
..... என்அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்
ஒத்தே (2}3}1) என்பது பாசுரம்.
அப்படித் தேனும் பாலுமாய்க் கலந்த நிலையானது ஆயிரம் என்ற பேரெண்ணுடன் ஒன்று என்னும் சிற்றெண் கலந்தது போலவும், கடல்நீருடன் குளப்படிநீர் (குளம்பின் அடியில் தேங்கிய நீர்) கலந்தது போலவும் ஆயிற்றாம். ஆழ்வாரின் அடிமனத்தை ஆராய்ந்து, ஈட்டுரை சொல்லும் விளக்கம் இது.
இவ்வுவமைகள் இறைவனுடைய ஞான ஆனந்தங்களின் மிகுதியையும் ஆழ்வாருடைய ஞான ஆனந்தங்களின் அனுபவக் குறைவையும் காட்டவந்தன என்பர். இங்கும் விலங்கானது வைத்த குளம்பினது அடிச்சுவட்டில் தேங்கிய நீரை, குளப்படிநீர் என்று ஈட்டுரை காட்டுவது மனங்கொளத்தக்கது.
இனி, செவ்வைச் சூடுவார் தாம் பாடிய பாகவதத்தில், "கண்ணபிரானைத் தெப்பமாகக் கொண்டு பாண்டவர் ஐவரும் துரியோதனின் படைக்கடலைக் குளப்படியாம் சிறுபள்ளத்தை எளிதிற் கடத்தல் போலக் கடந்தனர்' என்கிறார்.
அரவு யர்த்தவன் ஆடலம் படைக்கடல் ஐவர்
ஒருகு ளப்படி யாம்படி கடப்பவோர்
புணையாய்க்
கருவில் மற்றெனைக் காத்தசெந் தாமரைக்
கண்ணன்
என்பது அவரின் பாடல் பகுதி (அரவுயர்த்தவன் பாம்புக் கொடியையுடைய துரியோதனன்).
செவ்வைச் சூடுவாரைத் தழுவி மக்கள் தமிழில் பாகவத அம்மானை பாடிய சங்கர மூர்த்திக் கோனாரும் இந்த இடத்தில் முன்சொன்ன அதே உவமையை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்.
திரியோதன ராஜன் சேனைப் பெருங்கடலை
அருகோர் குளப்படிபோல் ஐவர் கடக்கும்
படிக்கு
தெப்பம் அதுவாகிச் சிறியேன் பொருட்டாக
கெற்பமதில் வந்து கிருபைசெய்து தற்காத்த
எங்கோன்...
என்பது அவரின் அம்மானைப் பாடல்.
இதனால் பேச்சு வழக்கு, எழுத்து இலக்கிய, நாட்டார் பாடல்வகை எதுவாயினும் அவரவர் கருத்து விளக்கத்துப் பொருத்தமாக இந்த உவமை தொடர்ந்து கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.