மகாகவி பாரதியார்  DIN
தமிழ்மணி

புதுக்கவிதையின் பிதாமகன் யார்?

மகாகவி பாரதியார் கவிதை மரபை மீறி எழுதிய "காட்சி' என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பே தமிழில் முதல் புதுக்கவிதை முயற்சியாகும்.

ராஜ்கண்ணன்

மகாகவி பாரதியார் கவிதை மரபை மீறி எழுதிய "காட்சி' என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பே தமிழில் முதல் புதுக்கவிதை முயற்சியாகும். அவருக்குப் பின் புதுக்கவிதை முயற்சியைத் தொடர்ந்தவர் ந.பிச்சமூர்த்தி ஆவார்.

1934}இல் "மணிக்கொடி' இதழில் "காதல்' என்ற தலைப்பில் தனது முதல் புதுக்கவிதையை எழுதினார் ந.பிச்சமூர்த்தி. 1937}இல் புதுமைப்பித்தன் பொறுப்பில் தயாரான "தினமணி' இலக்கிய மலரில் "கிளிக்கூண்டு' என்ற தலைப்பில் ந.பிச்சமூர்த்தி எழுதிய புதுக்கவிதை மிகவும் பிரபலம்.

ந.பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து கு.ப.ராஜகோபாலனும் புதுக்கவிதையில் தீவிரமாக இயங்கினார். இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் (க.நா.சு.) தனது "சூறாவளி' இதழில் புதுக்கவிதைகள் எழுதினார்.

1942-இல் தோன்றிய "கலாமோகினி' இதழில் வல்லிக்கண்ணனும், "நவசக்தி' இதழில் கே.ராமநாதனும், "சிவாஜி' இதழில் திருலோக சீதாராமும் புதுக்கவிதை எழுதினர்.

"கிராம ஊழியன்' இதழின் பொங்கல் மலரில் (1944) புதுமைப்பித்தன் "வேளுர் கந்தசாமி பிள்ளை' என்ற பெயரில் தனது முதல் புதுக்கவிதையை எழுதினார். அவரின் புகழ்பெற்ற "ஓடாதீர்' கவிதையும் அதில்தான் வெளிவந்தது. "கிராம ஊழியன்' இதழில் தி.க.சிவசங்கரனும் புதுக்கவிதை எழுதியுள்ளார்.

வ.விஜயபாஸ்கரனின் "சரஸ்வதி' இதழும் (1955) புதுக்கவிதைக்கு இடமளித்தது.

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவால் 1959}இல் தொடங்கப்பட்ட "எழுத்து' இதழ் புதுக்கவிதைக்கு வலிமையும் வேகமும் சேர்த்தது. இதில் ந.பிச்சமூர்த்தி, தி.சோ.வேணுகோபாலன், டி.கே.துரைஸ்வாமி (நகுலன்), பசுவய்யா (சுந்தர ராமசாமி), கி.கஸ்தூரிரங்கன், த.சீ.ராமலிங்கம் (தருமு சிவராம்), ஜெயகாந்தன், சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், சி.சு.செல்லப்பா ஆகியோர் புதுக்கவிதைகளை எழுதினர்.

1963-இல் உருவான க.நா.சு.வின் "இலக்கிய வட்டம்' (மாதம் இருமுறை) இதழில் நகுலன், சுந்தர ராமசாமி, சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், சி.மணி போன்றோர் புதுக்கவிதை எழுதினர்.

நா.காமராசனின் புகழ்பெற்ற "புல்' கவிதை "எழுத்து' இதழில்தான் வெளியானது. "நடை', "அஃக்' போன்ற இதழிகளும் புதுக்கவிதையை ஆதரித்து வெளியிட்டன.

முற்போக்கு இலக்கிய இதழான "தாமரை'யில் நவபாரதி, புவியரசு, பரிணாமன், கை.திருநாவுக்கரசு, பிரபஞ்சன், மு.பாவாணன், விடிவெள்ளி, கோ.ராஜாராம், மு.செந்தமிழன், நா.காமராசன், சிற்பி, அக்னிபுத்திரன், தமிழ்நாடன், மீரா, சக்திக்கனல் ஆகியோர் புதுக்கவிதை எழுதினர்.

1970-இல் "கசடதபற' இதழ் உருவானது. இதில் ஞானக்கூத்தன், பாலகுமாரன், கலாப்ரியா, நீலமணி, கல்யாண்ஜி போன்றோர் புதுக்கவிதை எழுதினர்.

1971-இல் "வானம்பாடி' தோன்றியது. இக்குழுவில் இருந்த தமிழ்நாடன், புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, அக்னிபுத்திரன், சக்திக்கனல், மு.மேத்தா, ரவீந்திரன், தமிழன்பன், ஞானி, பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ.ராஜாராம் உள்ளிட்ட பலரும் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர்.

1962}இல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளைத் தொகுத்து "காட்டு வாத்து' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார் சி.சு.செல்லப்பா ("எழுத்து' பிரசுரம்). இதுவே தமிழில் வெளியான முதல் புதுக்கவிதைத் தொகுப்பு.

1974-இல் "அன்னம் நட்புறவுக் கழகம்' வாயிலாக வெளியிடப்பட்டது அப்துல் ரகுமானின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பான "பால்வீதி'.

கவிக்கோ அப்துல் ரகுமான் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு "புதுக்கவிதையில் குறியீடு' என்பதாகும்.

தமிழில் புதுக்கவிதையின் பிதாமகர் மகாகவி பாரதியார் என்பதிலும், அதனை ஓர் இயக்கமாகக் கட்டமைத்தவர் ந.பிச்சமூர்த்தி என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT