ஒரு கடுமையான வேனிற்காலம் அது. வெயிலின் கொடுமையோ தாங்க இயலவில்லை. தான் இல்லறம் நடத்தவும் வரும் விருந்தினரை உபசரித்து மகிழவும் வேண்டுமாயின் அதற்குப் பொருள் வேண்டும். அத்தகைய பொருளினை ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து மீண்டு வருகிறான் ஒரு தலைவன்.
வந்த அத்தலைவனைக் கண்ட தோழி, "பொருளீட்டச் செல்லுகையில் வெப்பம் மிகுந்த பாலையின் கொடுமையை நீவிர் எவ்வாறு பொறுத்துக் கொண்டீர்?' என்று கேட்கிறாள்.
பின்வருமாறு அவளுக்கு பதில் அளிக்கிறான் தலைவன்: "வேனிற் பருவத்தில் அரைய மரத்தினது (அரச மரம்) இலைகள் சலசலவென ஒலிக்கும்.
அதற்கு அஞ்சிய பறவைகளெல்லாம் அம்மரத்தின் பழங்களாகிய உணவினை உண்ணாமல் வேறிடத்திற்குச் சென்றுவிடும். அவ்வளவு வெப்பம் மிகுந்த பாலை நெறியோ கரடுமுரடானது.
அத்தகைய நெறியில் செல்லுதல் எனக்கு வருத்தமாகத் தோன்றவில்லை. காரணம் என்ன தெரியுமா? எம்மால் பெரிதும் விரும்பப்படும் என் ஆருயிர்க் காதலியின் அமுதம் போன்ற நல்ல பண்புகளையே நினைத்துக் கொண்டு, அதாவது, என் நெஞ்சிற்கு உறுதுணையாகக் கொண்டு, அந்நெறியைக் கடந்தேன். "தீ' போன்ற வெப்பம் மிகுந்த அந்த வழியும் எனக்குக் குளிர்ச்சி தருவதாயிற்று' என்கிறான்.
அதாவது, தலைவியின் நற்குணங்களின் வயப்பட்ட தலைவனின் உடல், பாலை நிலத்தின் வெம்மையினை உணரவில்லை. குளிர்ந்த இதமான மனநிலையின் காரணமாகச் சோர்வின்றிப் பாலை நிலத்தைக் கடக்கிறான் அத்தலைவன். "நலம் பாராட்டல்' என்னும் அந்தத் துறையிலமைந்த "ஐங்குறுநூறு' இலக்கியச் செய்யுள் இதுதான்.
வேனி வரையத் திலையொலி வெறீஇப்
போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்
வெம்பலை அருஞ்சுர நலியா(து)
எம்வெங் காதலி பண்பு துணைப் பெற்றே.
(ஐங். 325)
இதே கருத்து இன்னொரு செய்யுளிலும் (ஐங்.326) முன்வைக்கப் பட்டுள்ளது.
பொருளீட்டச் செல்லும் மற்றொரு தலைவன், இந்த வெயிலின் கொடுமையினையும் தன் தலைவியின் ஒப்பற்ற நற்பண்புகளையும் ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கிறான்.
பாலை நிலத்தில் "தீ'ப்போன்று விளங்கும் அந்த இடத்தில் நிழல் உள்ள இடம் என எதுவுமே கிடைக்கவில்லை. அதனால், அழகிய பெண்மான் தன் குட்டிகளுடன் இளைத்திருக்கின்றது.
எப்பொழுதோ பெய்த மழையால் அறுத்தோடிய சிறிய வழியினை உடையதாய் இருக்கிறது அப்பாலை நிலம். ஒருபுறம், வெப்பம் தாக்கும் சூழல், மறுபுறம் தலைவியின் நற்குணங்களை நினைக்கையில் மனம் குளிர்கிறது. இத்தகைய இருவேறு உலகத்து இயற்கையினைச் சுட்டும் பாடல்,
அழலவிர் நனந்தலை நிழலிடம் பெறாது
மடமா னம்பிணை மறியொடு திரங்க
நீர்மருங் கறுத்து நிரம்ப வியவி(ன்)
இன்னா மன்ற சுரமே
இனிய மன்றயா னொழிந்தோள் பண்பே.
(ஐங். 326)
என்பதுதான். சுரமாகிய செல்லும் வழி வெப்பம் மிகுந்ததாய் துன்பம் தந்தாலும் நம்முடன் நெருங்கிய ஒருவரின் நற்பண்புகளை நினைக்கும் பொழுது, அது நமக்கு இன்பமே தரும் என்ற கருத்து எண்ணத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.